Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இடதுசாரி முன்னணியின் தேர்தல் பங்கெடுப்பும், மைத்ரியின் வெற்றியும்

இடது முன்னணியாகிய நாங்கள், இந்தத் தேர்தலில் அரசியல் ரீதியாக எம்மை ஒருங்கிணைப்பதில் வெற்றி பெற்று இருக்கின்றோம். இப்படிக் கூறும் போது பொதுப்புத்தி அறிவுக்கு, இது முரணானதாக இருக்கலாம். உண்மை என்ன? இத் தேர்தலில் பாட்டாளி வர்க்கம் - முதலாளித்துவ வர்க்கங்களும் தத்தம் அரசியல் நிலையில் நின்று வெற்றி பெற்று இருக்கின்றனர்.

மைத்திரி முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதியாக வெற்றிபெற, இடது முன்னணி பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதியாக நின்று, இத் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கின்றது.

தோற்றவர்கள் மத்தியதர வர்க்கமாகும். அவர்கள் மைத்திரியையும் – மகிந்தாவையும் ஆதரித்ததன் மூலம், தோற்றுப் போய் இருக்கின்றார்கள். தங்களுக்குள் இரண்டாகப் பிரிந்து நின்று மகிந்தாவை தோற்கடித்ததன் மூலம் கிடைத்த வெற்றியை, சொந்த வெற்றியாகக் கொண்டாடுகின்ற அரசியல் அவலம் மீண்டும் ஒரு தேர்தல் மூலம் நிகழ்ந்திருக்கின்றது.

மக்களை அரசியல் அறிவூட்டி நடைமுறை அரசியலுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதில், முதலாளித்துவத்துக்கு பின்னால் அணிதிரட்டும் அளவுக்கு, புத்திஜீவிகள் என்று கூறிக்கொள்கின்றவர்களின் நடத்தையானது இத் தேர்தல் மூலமும் வெளிப்பட்டு இருக்கின்றது.

மத்தியதர வர்க்கம் தன்னை ஒடுக்குவதற்காக மகிந்தாவுக்கு பதில் மைத்திரியை தெரிவு செய்திருக்கின்றது

வெற்றி தோல்வி பற்றிய எதிர்மறை உண்மை இது தான். தங்களை ஒடுக்குபவன் யார் என்பதை தெரிவு செய்வதற்காக, 66 வருடமாக வாக்களித்த மக்கள் மீண்டும் ஒருமுறை மைத்திரியை அதற்காக தெரிவு செய்ததன் மூலம், மீண்டும் தோற்று இருக்கின்றனர். 5 வருடத்துக்கு ஒரு முறை மக்களின் பெயரால் அரங்கேறும் முகமாற்ற நாடகத்தை மேடையேற்றியதன் மூலம், மக்கள் ஒடுக்குவதற்கேற்ற அரசியல் அனாதையாக்கப்பட்டு இருக்கின்றனர்.

தேர்தலில் மைத்திரியையும் – மகிந்தாவையும் ஆதரித்து வாக்களித்த மக்கள், ஏன் எதற்கு என்ன மாற்றத்துக்கு வாக்களிக்கின்றோம் என்ற சுய அறிவுடன், அதில் பங்கெடுக்கும் சுய நடைமுறையுடன் வாக்களிக்கவில்லை. மாற்றம் பற்றி கனவு காணுமாறு ஏமாற்றப்பட்ட நிலையில் வாக்களிக்க வைக்கப்பட்டனர்.

பொய், பித்தலாட்டம், ரவுடித்தனம், அதிகாரம், பணம், அன்பளிப்பு மூலம் வாக்கை பெறுவது தொடங்கி தேர்தலை ஒரு சடங்காகக் கருதி வாக்களிக்கும் மக்களின் அறியாமையை மூலதனமாகக் கொண்ட தேர்தல் முடிவுகளில், மக்கள் கொண்டாட எதுவும் இருப்பதில்லை. அரசுக்கு எதிரான பொது அதிருப்தி, தேர்தல் முடிவுகளாகி விடுகின்றது.

மக்களோ தங்கள் சொந்த வாழ்க்கையில் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்பதும், அதை மற்றவர்கள் பெற்றுத் தருவார்கள் என்ற பொது அறியாமையையும் கற்பனையையும் உருவாக்கி, வாக்காக கறந்ததே இந்த தேர்தலிலும் அரங்கேறி இருக்கின்றது.

இந்த பின்புலத்தில் மகிந்தாவுக்கு பதில் மைத்திரியை தெரிவு செய்ததன் மூலம், ஒரு முக மாற்றம் நடந்து இருக்கின்றது. ஆனால் மைத்திரியின் பொருளாதாரக் கொள்கை, மகிந்தாவின் பொருளாதார கொள்கைக்கு முரணானது அல்ல. அதே பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்கவுள்ள அதேநேரம், மேற்கு மூலதனத்துக்கு புதிய வசதிகளை செய்து கொடுப்பதையே தனது பொருளாதார கொள்கையாகவும் கொண்டுள்ளார். இன்று இருக்கின்ற நவதாராள அன்னிய உள்நாட்டு சூறையாடல்களுக்கு மேலதிகமாக, மக்களை ஒடுக்கி புதியவர்களுக்கும் வசதியை செய்து கொடுப்பதன் மூலம், மக்களின் சுமையை இரட்டிப்பாக மாற்றுவதே மைத்திரியின் பொருளாதாரக் கொள்கையாகும். எந்த முக மாற்றமும் மூலதனத்தை அழிப்பதில்லை, மாறாக அதை பாதுகாத்துக் கொண்டு, புதிய மூலதனத்துக்கு வழியை ஏற்படுத்துவதற்கான மாற்றத்தையே இந்தத் தேர்தல் மூலம் மேற்கு ஏகாதிபத்தியங்கள் கொண்டு வந்திருக்கின்றது.

இந்த தேர்தலில் மைத்திரியை தெரிவு செய்து வாக்களித்தது மக்கள் அல்ல. மாறாக மேற்கு நாடுகளின் நலனை பேணும் ஒருவரை தெரிவு செய்யும் வண்ணம் நடத்திய தேர்தல் பிரச்சார உத்திகள் மூலம், மக்களை மூளைச் சலவை செய்து மேற்குக்கு ஏற்ற ஒருவருக்கு வாக்களிக்க வைத்தனர்.

மகிந்த அரசின் நீண்ட தொடர்ச்சியான பயங்கரவாத மற்றும் மக்கள் விரோதச் செயல்களை முன்னிறுத்தி, அதை பிரமிப்பூட்டும் தேர்தல் பரப்புரைகளாக்கியதன் மூலம் மக்களுக்கு பயப்பீதியை ஊட்டினர். இதன் மூலம் மக்களில் இருந்து மகிந்தா அரசை தனிமைப்படுத்தியதன் மூலமே தமது வெற்றிக்குரிய வாக்குகளை பெற்றனர். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது முதல் தேர்தல் மோசடிகள் பற்றியும், தேர்தல் முடிவுகள் குறித்தும், ஆட்சி மாற்றம் பற்றிய நெருக்கடி குறித்தும், இராணுவ ஆட்சி பற்றியும் அச்சமூட்டும் வண்ணம் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்கள் மூலம், மக்கள் திசை திருப்பப்பட்டனர். இந்த வண்ண வண்ணக் கதைகளை புனைந்து வெளியிடுவதே தேர்தல் பற்றிய செய்தியாகியது. ஊடகங்கள் - செய்தியாளர்கள் - ஆய்வாளர்களின் - அரசியல்வாதிகளின் கற்பனைகள், இட்டுக்கட்டல்கள் மூலம், அன்றாடம் மக்களை ஏமாற்றினர். பீதியை விதைத்தவர்கள் அதற்கு எதிராக வாக்கை ஆயுதமாக பாவித்து தடுக்கக் கோரிய தேர்தல் மோசடிகள் மூலம், மைத்திரி வெல்ல வைக்கப்பட்டார். மைந்தாவின் பாசிசம் சீன ப+தத்தின் மேல் படர்வதாக பீதியூட்டி மேற்கத்தைய சார்பு கொண்ட முதலாளித்துவ எடுபிடிகள் நடத்திய நாடகமே, மைத்திரியின் ஜனநாயகம் பற்றிய பிரமையை விதைத்ததாகும்.

முகமாற்ற ஆட்சி எதை மாற்றும்

மாற்றம் பற்றிய பிரமிப்புகளும், கற்பனைகளும் அடிப்படையற்ற சுய கற்பனைகளே. உண்மை எதிர்மறையானது. ஆட்சி ஏறிய கும்பலின் நலன் சார்ந்த மாற்றமும், அவர்களின் வர்க்க நலன்கள் சார்ந்த மாற்றம் மட்டும் உண்மையானது.

இந்த முகமாற்ற ஆட்சியானது மகிந்தாவின் குடும்பமும் அதை சுற்றி பொறுக்கித் தின்ற கும்பலுக்கு பதில், தங்களை அடிப்படையாகக் கொண்ட கும்பல் ஆட்சியையும் அதைச் சுற்றி பொறுக்கித் தின்னும் கும்பலுக்கு ஏற்ற மாற்றத்தைச் செய்யும். இதை செய்வதற்கு வசதியாகவும், பேரம் பேசுவதற்கு அமைவாகவும் பாராளுமன்ற அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட மாற்றத்தை அது முன்வைக்கின்றது. அதையே மாற்றம் என்கின்றது. ஊழல் பேர்வழிகளினதும், மூலதன தரகர்களை கொண்ட ஒரு புதிய கும்பலுக்கு ஏற்ற மாற்றத்தைச் செய்வதையே பாராளுமன்ற அதிகார மாற்றமாக முன்வைக்கின்றது. இதன் மூலம் இலங்கையில் மூலதன சுரண்டலுக்குள், புதியவர்களுக்கான வாய்ப்பை உருவாக்குவது அடங்கும். சட்டம் - நீதி – அரச அதிகாரத்தில் அதே பழைய நபர்கள் தொடர்வார்கள் என்பதே உண்;மை. முகமாற்றம் பெற்ற புதியவர்களுக்காக பழையவர்களை பழிவாங்குவதற்கு, புதியவர்களுக்கு சலுகைகளை கொடுக்கும் மாற்றமும் நிகழும்.

இதற்கு அப்பால் இலங்கையில் உழைத்து வாழும் மக்களின் பொருளாதாரத்தில் முன்னேறிய மாற்றம் நடக்கப் போவதில்லை. அதை மேலும் கீழே தள்ளும் பொருளாதாரக் கொள்கையே முகமாற்ற அரசின் கொள்கையாகும்;. அனைவருக்கும் இலங்கையில் சமவுரிமை என்ற அடிப்படையில் இலங்கையின் இனப்பிரச்சனை - மதப்பிரச்சனை தீர்க்கப்படும் மாற்றம் நடக்கப் போவதில்லை. இனம் மதம் சொல்லி பிழைப்பவனுக்கு சலுகை கொடுக்கும் மாற்றத்தையே, மக்கள் விரோத அடிப்படையில் அரசியலாகவும், அரசியல் பேரங்களாகவும் நடந்தேறும் மாற்றங்களுமே நடந்தேறும்.

மக்களின் இன்றைய வாழ்க்கையில் மாற்றம் என்பதற்கு, முகமாற்ற அரசியலில் இடமில்லை. இருப்பதையும் தொடர்ந்து இழப்பதற்கே வழி சமைக்கும்.

இடதுசாரி முன்னணி வெற்றி குறித்து

இனவாதம் மூலம் 66 ஆண்டுகள் மக்களை பிரித்து ஆண்டவர்களையும், அதை எதிர்த்து நின்ற இனவாதிகளில் இருந்து, இந்தத் தேர்தல் மூலம் புதிய தலைமுறையை அரசியல் மயப்படுத்தியதில் இடதுசாரி முன்னணி வெற்றிக்கான ஆரம்ப காலடியை எடுத்து வைத்திருக்கின்றது.

இடதுசாரி முன்னணிக்கு வாக்களித்த இந்த மக்கள் தான், இலங்கை மக்களை நேசிக்கின்ற உண்மையான சக்திகளாக தங்களை முன்னிறுத்தி இருக்கின்றனர். நாளைய வரலாற்றை தங்கள் கையில் எடுப்பதன் மூலம், நடைமுறையில் பயணிக்கும் பாதையை தேர்தல் மூலமும் முன்வைக்கும் வண்ணம் வாக்களித்து இருக்கின்றனர்.

இலங்கையில் சிங்கள – தமிழ் - முஸ்லிம் இனவாதத்தில் இருந்தும், வர்க்க அரசியலற்ற இடதுசாரிய போலிப்போக்கில் இருந்தும் விடுபட்ட ஒரு புரட்சிகர சக்திகளின் தோற்றமானது, ஒரு இரு வருடங்களையே தனது வரலாறாகக் கொண்டது. இலங்கையில் அனைத்து இனவாதத்துக்கும் எதிராகவும், வர்க்கப் போராட்டத்தை நடைமுறையில் முன்னெடுக்கும் கட்சி அரசியல் தோற்றத்துடன், இந்த தேர்தலையும் எதிர்கொண்டதானது வரலாற்றுக்கு முன் புதிரும் சவால் மிக்கதும் என்பது மிகையாகாது. இதன் போது சிங்கள – தமிழ் - முஸ்லிம் பாகுபடியின்றி ஒரே அணியில் நின்றது அதைவிடச் சிறப்பாகும். இடது முன்னணிக்கு எதிரான அவதூறுகள், இட்டுக்கட்டல்கள் ஒருபுறம் மறுபக்கம் தன் துண்டுப்பிரசுரத்தைக் கூட வெளியிட பணம் இல்லாத அமைப்பாக பாட்டாளி வர்க்கம் இந்த தேர்தலை பல்வேறு சவாலுக்கு இடையில் எதிர்கொண்டு தன் அணியை உறுதி செய்து கொண்டது.

இடதுசாரி முன்னணிக்கு கிடைத்த வாக்குகள் மற்றையவர்களுக்கு கிடைத்ததில் இருந்து வேறுபட்டது. அதாவது வர்க்க அடிப்படையில் கிடைத்த வாக்குகள். தாங்கள் ஏன் எதற்கு வாக்களிக்கின்றோம் என்ற குறைந்தபட்ச அரசியல் தெளிவுடன் வாக்களித்தவர்களே. தங்கள் வர்க்கத்தை நேசிக்கின்ற, அவர்களின் விடுதலை குறித்த அக்கறையுடன் பயணிக்கின்ற ஒரு அரசியல் தெரிவாகும். வர்க்க அடிப்படையிலான இந்தத் தோதலில், எமது வெற்றி தான் இந்த தேர்தலில் உண்மையான வெற்றியுமாகும். பாட்டாளி வர்க்கம் தன்னை வர்க்கமாக இந்தத் தேர்தலில் ஒருங்கிணைத்துக் கொண்டதே இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றியாகும்.