Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

19வது சட்ட திருத்தம் யாருக்கானது?

 

19வது திருத்தச் சட்டம் "ஜனநாயகத்தைக்" கொண்டுவந்து விட்டது என்கின்றனர். "ஜனநாயக இடைவெளியை" ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர். "தேர்தல் வாக்குறுதி" இனை மைத்திரி நிறைவேற்றி விட்டார் என்கின்றனர். இது "நல்லாடசியின்" ஆரம்பம் என்கின்றனர். "வரலாற்று சிறப்பு" என்கின்றனர். இப்படி பல வியாக்கியானங்களை கூறுகின்றனர். இவை உண்மையா?

இலங்கையின் இன்றைய அரசியலமைப்புச் சட்டம் ஜே.ஆர்.ஜயவர்த்தனாவால் 1978ம் ஆண்டு நவதாராளவாத பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்க்காக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின் இச்சட்டம் பின்வந்த காலங்களில் பல்வேறு திருத்தங்களுக்கு உள்ளாகியது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் நேற்றைய தினம் 211 பெரும்பான்மை வாக்குகள் மூலம் 19வது திருத்தச் சட்டத்தை பாரளுமன்றம் நிறைவேற்றி இருக்கின்றது.

இத்திருத்தச் சட்டம் நிறைவேறு அதிகார முறையை நீக்கி, புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தவில்லை. மாறாக 1978ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மேல் திருத்ததைக் கொண்டு வந்திருக்கின்றது. "நல்லாட்சி" பற்றி தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல், நிறைவேற்று அதிகாரத்தை ஓழித்து, பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்க இத்திருத்தம் கொண்டு வரப்பட வில்லை.

மாறாக மூன்றாவது முறையாக ஒருவர் ஜனாதிபதி பதவியில் இருக்க முடியாது என்ற பழைய ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் சட்டத்தையே, மீள 19 வது திருத்தச் சட்டம் மூலம் கொண்டு வந்திருக்கின்றது. அதே நேரம் 18வது திருத்தச் சட்டம் மூலம் ஆணைக்குழுக்களை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி அதிகாரத்தை நீக்கி இருக்கின்றது. அதாவது மகிந்தா கொண்டு வந்த திருத்தங்கள் சிலவற்றை நீங்கி, முந்தைய ஜனாதிபதிகள் கொண்டு இருந்த அதே அதிகாரத்தை மீள வழங்கி இருக்கின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கி பாராளுமன்ற அதிகாரத்தை கொண்டு வருவதாக கூறிய தேர்தல் வாக்குறுதியை மறுதளிக்கும் வண்ணம், 19வது திருத்தச் சட்டத்தை மைத்திரி – ரணில் அரசு மோசடி செய்திருக்கின்றது என்பதே உண்மை. இதன் மூலம் பாராளுமன்ற ஆட்சிமுறைக்காக வாக்களித்த மக்களை முட்டாள்களாக்கியுள்ளனர்.

100 நாள் திட்டம் ஒன்றை முன்வைத்து முகமாற்றம் மூலம் ஒரு "நல்லாட்சி" கொண்டு வரப்போவதாக கூறிய தேர்தல் வாக்குறுதியை, தங்கள் நிறைவேற்றி விட்டதான போலி விம்பத்தையே 19வது திருத்தச் சட்டம் மூலம் உருவாக்க முனைந்திருக்கின்றனர். இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் அமோகமாக வாக்குகளை பெற்று வெல்வதற்கான பாதையினை அமைத்துள்ளனர். இலங்கையில் அரசியல் சட்ட திருத்த வரலாறுகள், மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு எப்போதும் நிகழ்ந்தது கிடையாது, மாறாக ஆளும் அதிகார வர்க்கத்தினரின் அரசியல் நலன்களை அடைவதற்காகவும், பாதுகாப்பதற்க்காகவும் திருத்தப்பட்டதே வரலாறாகும். இது 19வது திருத்தச் சட்டத்திற்கும் பொருந்தும்.

கடந்த கால அரசியல் திருத்தச் சட்டங்கள்

1978ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மேலான திருத்தங்களையும் அதன் நோக்கங்களையும் தெரிந்து கொள்வதன் மூலம் இன்றைய திருத்தத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

1.முதலாவது திருத்தச் சட்டம் (ஷரத்து-140): 1980 ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவரது குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டதை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றம் சென்ற போது, அதனை தடுக்க 1வது திருத்தச் சட்டம் (ஷரத்து-140) கொண்டு வரப்பட்டது. இந்த திருத்தமானது மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை நீக்கி, ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு உட்பட்ட உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதன் மூலம் நீதிமன்ற தீர்ப்பை தீர்மானிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியது.

2. 2வது திருத்தச் சட்டம் (ஷரத்து-161.உ): ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு தாவுவதை தடுக்கும் அதேவேளை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு மாறுவதை ஊக்குவிக்கும் வகையிலேயே 2வது திருத்தச் சட்டம் (ஷரத்து-161.உ) கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் கட்சி மாறினால், அவரது பதவியை இழக்கச் செய்வதற்கு 85 உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இது எதிர்க்கட்சியிலிருந்து ஒருவர் ஆளும் கட்சிக்குத் தாவினால் அவரைப் பதவியிழக்கச் செய்வதற்கு எதிர்க்கட்சியில் 85 உறுப்பினர் வாக்களிக்க வேண்டும். இது எதிர்க்கட்சியால் முடியாத ஒரு விடயம். அதேவேளை ஆளும் கட்சியிலிருந்து எதிர்கட்சிக்கு மாறினால் பெரும்பான்மையை கொண்டு அவரை பதவி இழக்கச் செய்ய முடியும்.

3. 18வது திருத்தச் சட்டம்: இச்சட்டம் இலங்கையில் நடைமுறையில் இருந்த சுதந்திரமான ஆணைக்குழுக்களை இல்லாமற் செய்தது. அத்துடன் ஜனாதிபதி பதவியில் ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் இருக்க முடியாது என்ற சட்டத்தை நீக்கியது. ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரத்தையும், தொடர்ந்து ஆளுகின்ற தகுதியையும் கொடுத்தது.

4. 13வது திருத்தச் சட்டம்: இச்சட்டம் இந்தியாவின் நலன்களை பேணும் வண்ணம், இந்தியாவின் விஸ்தரிப்புவாத ஆக்கிரமிப்பு நோக்குகளுடன் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் தான் இனப்பிரச்சனைக்கு தீர்வாக மாகாணசபையை முன்வைத்தது. நடைமுறையில் மாகாணசபை இனப்பிரச்சனைக்கு தீர்வாக அமைய முடியவில்லை என்பதும் இனவொடுக்குமுறையும், இனவாதமும் இன்னமும் தொடர்வதும் தெரிந்ததே.

19வது திருத்தச்சட்டத்தின் பின்னரும் ஜனாதிபதியே சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்டவராக திகழ்வார். அந்த வகையில்

1.ஜனாதிபதியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியாது. அத்தகைய தகைமை சட்டமா அதிபருக்கு மட்டுமே உண்டு

2.ஜனாதிபதி நாட்டின் அதியுயர்ந்த தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும், நிறைவேற்று அதிகாரம் உடையவராகவும், முப்படைகளின் தளபதியாகவும் தொடர்ந்து இருப்பார்.

இந்த அதிகார பின்புலத்தில்

பாராளுமன்றத்தை கலைக்கும் உரிமையை கொண்டு இருப்பதுடன், அதை நினைத்த நேரத்தில் நிறுத்துவதற்கும், கூட்டுவதற்க்குமான அதிகாரத்தைக் கொண்டவராக ஜனாதிபதி இருப்பார் என்று 19வது திருத்தச் சட்ட உறுதி செய்கின்றது.

ஜனாதிபதி விரும்பும் அமைச்சைப் பெற்றுக் கொள்ளவும், பிரதமர் உட்பட அமைச்சர்களின் செயலாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை கொண்டவராக ஜனாதிபதி இருப்பதை 19வது திருத்தச்சட்டம் உறுதி செய்கின்றது.

இப்படி முந்தைய ஜனாதிபதிகள் கொண்டு இருந்த அதிகாரத்தை உறுதி செய்து இருக்கும் 19வது திருத்தச்சட்டம், உண்மையில் குறுகிய அரசியல் நோக்கில் அமுல்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் மூலம்

1.மகிந்தா மீண்டும் ஜனாதிபதியாகி ஆட்சியை அதிகாரத்தை நிலை நிறுத்துவதை தடுப்பதும்

2.கோத்தபாய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க, இரட்டை பிரஜாவுரியை கொண்டவர்கள் தேர்தலில போட்டியிடுவதை தடை செய்திருக்கின்றது.

ஆக 19வது திருத்தச்சட்டம் தங்கள் குறுகிய அரசியல் நோக்கிலும், இவர்கள் ஆதரிக்கும் மூலதன நலன்களின் நோக்கிலும் கொண்வரப்பட்டது.

19வது திருத்தச்சட்டம் ஏன் பாரளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்கவில்லை?

இதன் பின்னணியில் முக்கியமானதாக இரண்டு பிரதமான காரணங்கள் இருக்கின்றன.

1.பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்குவதன் மூலம், மகிந்தா மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான சாத்தியமும், அதன் மூலம் அவர் சார்ந்த மூலதனங்கள் மீளவும் பலம் பெறுவதை தடுக்கவே, இந்த திருத்தச்சட்டம் பாராளுமன்னறதுக்கு அதிகாரத்தை வழங்குவதை இல்லாதாக்கியுள்ளது

2.ஜனாதிபதி அதிகார முறை மூலம் தான், மகிந்தா ஆதரவு பெற்றுள்ள பலமாகவுள்ள மூலதனத்தை அகற்ற முடியும். அதற்கு பதில் மேற்கு மற்றும் இந்தியா சார்ந்த சர்வதேச மூலதனத்தை கொண்டுவர முடியும். நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மேற்குலக மற்றும் இந்திய மூலதனத்துக்கு ஆதாரவான பெரும்பான்மையை பெறுவது என்பது சாத்தியமற்ற அல்லது கேள்விக்குரிய இன்றைய நிலையில், அதிகாரம் கொண்ட பழைய ஜனாதிபதி முறை தொடர்வது அவசியமானாதாக்கி விட்டது.

இந்த இரு அடிப்படைக் காரணங்களும், இது சார்ந்து மைத்திரி – ரணில் கும்பல் சார்ந்த தனிப்பட்ட நலன்களும் அதிகாரங்களும் ஒன்றாக வெளிப்பட்டு நிற்கின்றன. இது தான் 19வது திருத்தச்சட்டம் மூலம் தொடர்ந்தும் ஜனாதிபதி ஆட்சிமுறையை பாதுகாத்துள்ளதுடன், இவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி மக்களை ஏமாற்றி முட்டாள்களாக்கி இருக்கின்றனர்.

19வது திருத்த சட்டம் தனிப்பட்ட மைத்திரி – ரணில் கும்பலின் சொந்த தெரிவல்ல. மாறாக முகமாற்ற ஆட்சியைக் கொண்டு வந்த மேற்கு மற்றும் இந்தியா நலன்களை பாதுகாக்கும் வண்ணம், மேற்கினதும், இந்தியாவினதும் சொந்த வரைவு தான் 19 வது திருத்தச்சட்டமாகி இருக்கின்றது.

இதன் மூலம் இந்த அரசு மக்களை ஏமாற்றியிருக்கின்றது. உலகமயமாதலின் முரண்பட்ட மூலதனங்களின் (சீனா, அமெரிக்கா, மேற்கு, ரஸ்யா, இந்தியா) நலன்களை அடைப்படையாகக் கொண்டே இன்றைய ஆட்சியாளர்கள் தாங்கள் சார்ந்து இருக்கும் மேற்கு மற்றும் இந்தியாவின் தேவைக்காக கொண்டு வந்ததே 19 வது சட்ட திருத்தமாகும். இதற்கும் உண்மையான மக்கள் ஜனநாயகத்துக்கும் இடையில் எந்தவித உறவும் கிடையாது.

நவதாரளமய பொருளாதாரத்தின் எந்த சர்வதேச மூலதனத்துக்கு இலங்கையை தரை வார்ப்பது என்பதை தீர்மானிக்கவும், அதை பாதுகாக்கவும் எது இன்று தேவையோ, அதுதான் 19 வது திருத்தச் சட்டமாகும். இதற்கு வெளியில் வேறு அரசியல் உள்ளடக்கம் இதற்கு கிடையாது.

-இரயாகரன்