Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் "தேசியம்" வாக்கு வங்கிக்கான கோசமாக சீரழிந்து விட்டது!

தமிழ் "தேசியம்" என்பது, வடக்கு கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் அரசியல் பொருள் அற்றதாக மாறியிருக்கின்றது. "தேசியம்" இன்று தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளால் "திடீர் தேசியமாக" உச்சரிக்கப்பட்டு உசுப்பேற்றப்படும் - வாக்கு வங்கிக்கான உணர்ச்சிக் கோசமாக எஞ்சி இருக்கின்றது. தமிழன் தமிழனுக்கு வாக்களிக்க வேண்டும் - தமிழன் தான் தமிழனை அடக்கியாள வேண்டும் என்று இனவாதம் வக்கிரமாகி இருக்கின்றது.

இந்தியாவில் முஸ்லீங்களுக்கு எதிராக இந்துக்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோருவது போல் - மேற்கில் வெளிநட்டவனுக்கு எதிராக வெள்ளை இன நிறவெறிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டது போல், தமிழன் தமிழனுக்கு வாக்களிக்கக் கோரும் மனித விரோதம் "இனவாதம்" தேசியமாகி இருகின்றது. இனவாத சிங்கள தேசியவாதமும் இதைத் தான் முன்வைக்கின்றது. மக்களை வாக்குப் போடும் மந்தைகளாகவே, அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மேய்கின்றனர்.

மக்கள் "தேசியம்" குறித்து பகுத்தறிவுபூர்வமான அரசியல் உணர்வோ - உணர்ச்சியோ கொண்டு இருப்பதில்லை. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைக்குள்ளும் - தம்மைச் சுற்றிய புதிய முரண்பாடுகளுக்குள்ளும் முடங்கிக் கிடக்கின்றனர்.

வடகிழக்கு இன்று முன்பு போல் இராணுவ அதிகாரங்களும் - அடவடித்தனங்களும் குறைந்து, இராணுவ நடமாட்டமற்ற பிரதேசமாகி இருக்கின்றது.

கடந்தகாலத்தில் "தேசியத்தைச்" சொல்லிப் பிழைத்த ஊடகங்களும் - இராணுவ முரண்பாட்டை முன்வைத்து செய்தியையும் - இன முரண்பாட்டையும் துண்டிய ஊடகவியலும், உள்ளடக்கமின்றி வெறும் விளம்பர பத்திரிகையாக மாறி வருகின்றது. இனவாத "தேசியத்தை" தூண்ட, இனவாத நிகழ்ச்சிகள் அருகி வருகின்றன. தேசியத்தை உசுப்பேற்ற முடியாத வண்ணம், அரசு இனவாத செற்பாடுகளை மந்தமாகி வருகின்றது.

"தமிழனை தமிழனை ஆள, தமிழன் தமினுக்கு வோட்டு போட வேண்டும்" என்று கூறும் அளவில் "தேசியம்" தேர்தல் கோசமாகி - வாக்கு வங்கியை தீர்மானிக்கும் கருவியாகி இருகின்றது. தேர்தல் மூலம் தெரிவாகும் பிரதிநிதிகள் மக்களை அடக்கியாளும் அதிகாரத்தைக் கொண்டு இருப்பது போல் - தன் இனத்தை அடக்கியாளும் தனி அதிகாரத்தை பெறுவதே "தேசியம்" என்று உணர்ச்சி ஊட்டி, தேர்தல் காலத்தில் வாக்கு வங்கியை உருவாக்கும் உணர்ச்சிப் பொருளாகி இருக்கின்றது.

அதாவது இன்று தேர்தல் காலத்தில் இல்லாத புலியை சொல்லி சிங்கள பேரினவாத கட்சிகள் எப்படி இனவாத உணர்ச்சியைத் தூண்டி வாக்கை பெற முனைகின்றதோ - அதே போல் தமிழ் இனவாதக் கட்சிகள் புலியையும் - தேசியத்தையும் சொல்லி வாக்க கேட்கின்றன.

புலிகள் இருந்த காலத்தில் தேசியத்தை புலித் "தேசியமாகி" அதன் உயிர்ப்பைக் கொன்றது போல், இன்று "தேசியத்தை" அதை வாக்கு வங்கிக்கான வெற்றுக் கோசமாக்கி தூக்கில் போட்டு இருக்கின்றனர்.

புலம்பெயர் நாட்டில் "தேசியம்" புலிகளின் சொத்தை அனுபவிக்கவும், பெருக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. அதேபோல் "இடதுசாரிய" தங்கள் அடையாளத்தை தக்கவைக்க "தேசியம் - சுயநிர்ணயம்" போன்ற சொற்கள் வெறுமானே பயன்படுத்தப்படுகின்றது.

வடகிழக்கும் மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளையும் - சமூக முரண்பாடுகளையும் அரசியல் ரீதியாக மறுப்பதே, எங்கும் அரசியலாகி வருகின்றது.