Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பொருளாதார உதவிகள் சமூகத்தை மாற்றுமா!?

பணத்தால் எதையும் வாங்க முடியும் - பணத்தால் எதையும் மாற்ற முடியும் - பணத்தால் எதையும் செய்ய முடியும் என்ற பொது சமூக உளவியலே, இன்று வடகிழக்கு மக்கள் சார்ந்த புலம்பெயர் உதவிகளாக மாறி இருக்கின்றது. உதவியை பெறுபவன் சமூக உணர்வுடன் பெறாத வரை - சமூக உணர்வை வளர்க்காத உதவிகள், தகுந்த சமூக பயன்பாட்டை பெறுவதில்லை. மறுபக்கத்தில் பணத்தைக் கொண்டு சமூக அந்தஸ்தை பெறும் சுயநலம் சார்ந்த கண்ணோட்டம், எந்த சமூக பிரயோசனமுமற்ற கோயில்களைக் கட்டும் அதேநேரம், ஊழலுக்குள் - மோசடிக்குள் சமூகத்தை மூழ்கடித்து விடுகின்றனர்.

இந்த வகையில் இரண்டு போக்குகள் இன்று காணப்படுகின்றது.

1.சமூக நோக்கு கொண்டதும்

2.சுயநலம் சார்ந்ததுமான செயற்பாடுகள் பொதுவில் இனம் காணமுடியும்.

இன்று தனிப்பட்டவர்கள் தங்கள் குடும்பங்கள் தொடங்கி பொதுநோக்கு கொண்ட அமைப்புகள் வரை, பொருளாதார உதவி என்ற அடிப்படையில் வடகிழக்கு மக்களை அணுகுகின்றனர். ஆனால் இந்த உதவிகளுக்கு என்ன நடக்கின்றது என்பதை, பகுத்தறிவுடன் - அதன் நடைமுறையுடன் சீர்தூக்கி அணுகுவது கிடையாது.

முதலில் பொருளாதார உதவிகள் அவசியமா? - இந்த உதவிகள் சமூகத்தை மாற்றுமா?

கடந்தகால யுத்தம் ஏற்படுத்திய உளவியல் சிதைவுகள் - பொருளாதார அழிவுகள் - உடல் ரீதியாக அங்கவீனமானவர்களைக் கொண்ட குடும்பரீதியான இழப்புகளை கொண்ட சமூகம் - நவதாராளமயத்தால் ஏற்பட்டு வரும் சொத்து இழப்புகளும் வறுமையும்... இது போன்ற காரணங்கள் உதவிக்கான அடிப்படையான கூறாக இருந்த போதும், இதை மட்டும் அளவீடாகக் கொண்ட சமூகக் கண்ணோட்டம் வடகிழக்கில் எதிர்நிலை விளைவுகளையே உருவாக்குகின்றது.

சமூகரீதியான உதவியை செய்பவர்களின் நோக்கம் நேர்மையானது - உண்மையானது என்பதால் மட்டும், உதவிகளை சரியாக வழி நடத்தி விடாது. அதாவது பணத்தைக் கொடுப்பதால் சமூகம் தானாக முன்னேறி விடாது. சமூகம் இன்று எப்படி இருக்கின்றது என்பதும் - அது உதவியை எப்படி அணுகுகின்றது என்பதையும், சமூக நோக்கில் அணுகாத வரை அனைத்தும் அர்த்தமற்றதாகி வருகின்றது.

30 வருட யுத்தத்தின் ஊடாக உருவான சமூகம் - உழைத்து வாழ்ந்த வாழ்வையும் அந்தப் பண்பாட்டையும் இழந்து இருக்கின்றது. 30 வருடமாக அன்றாடத் தேவையை எப்படி பெற்றது. அரச கொடுப்பனவுகள் (கூட்டுறவு சங்கங்கள்..) மூலமும், தன்னார்வ தொண்டு நிறுவன உதவிகள் மூலமும், புலம்பெயர் உதவிகளிலும்... தங்கி வாழ்ந்தது, அதற்கு பழக்கப்பட்ட ஒரு சமூகமாக வடகிழக்கு சமூகம் இருக்கின்றது. இதன் ஒரு நீட்சியாக புலம்பெயர் உதவிகள் எந்த மாற்றமும் இன்றி தொடர்வது என்பது சமூகத்தின் சாபக்கேடாகும். இதை சமூக ஆய்வு நோக்கில் இன்று இனம் காண்பதும் - அதை மாற்றி அமைக்கும் நோக்கில் உதவிகள் மாற்றி அமைக்க வேண்டும்.

யுத்தத்துக்கு பின்பும் உழையாது தொடர்ந்து வாழ்வதற்கு ஏற்ப உதவுவதை எதிர்பார்க்கும் வடகிழக்கு சமூகமாக - அந்த வகையில் வாழ்வதையே தங்கள் வாழ்க்கையாக மக்கள் தேர்ந்து எடுத்திருக்கின்றனர். உழைத்து தன் வாழ்வின் தேவையை பூர்த்தி செய்யும் வாழ்க்கை முறையை விரும்பாத - உழைப்பை வெறுக்கின்ற பொதுத்தன்மை வடகிழக்கில் காணப்படுகின்றது. இங்கு உதவ விரும்புபவன் உழைத்து வாழ்கின்றான் என்பதே இங்கு முரண்நிலையாகும்.

இன்று வடகிழக்கில் வேலைகளுக்கு பெருமளவில் ஆட்கள் தேவைப்பட்ட போதும் - வேலை செய்யாமல் வாழ்வை நாடுகின்ற தன்மையே பொதுவில் காணப்படுகின்றது. தாங்கள் வேலை செய்யாமல் வாழ்வதற்கும் - வாழ்வதற்காக அரசுடன் போராடி வாழ்வதை மறுப்பதற்கும், புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தை பெறுகின்ற பொது உளவியல் கண்ணோட்டம் காணப்படுகின்றது. வடகிழக்கில் பாரிய வேலை வாய்ப்புகள் இருந்து அதை செய்ய விரும்பாத மனநிலையானது - பெருமளவில் வடகிழக்குக்கு வெளியில் வாழ்பவர்கள் வேலை செய்யும் மாற்றம் வடகிழக்கில் நடந்து கொண்டு இருக்கின்றது.

வடகிழக்கு மக்களை எடுத்தால் தனிநபர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து பணத்தை பெறும் சுயநலக் கண்ணோட்டமும் - சமூக ரீதியான பணத்தைப் பெற்று தங்கள் தேவையை பூர்த்தி செய்யும் போக்கும் பொது சமூக உளவியலாகி இருக்கின்றது. உழைத்து வாழ மறுக்கும் இந்த சமூகத்தின் பொது மனநிலையைப் பயன்படுத்தி தான், உலகத்தில் உள்ள வங்கிகள் எல்லாம் வடகிழக்கு மக்களுக்கு கடனையும் - கடன் மூலமான பொருளையும் அள்ளி வழங்கி, இன்று அவர்களை எதுவுமற்றவராக்கி கடனாளியாக்கி இருக்கின்றது.

இதை எல்லாம் நாம் இன்று கருத்தில் எடுத்து சமூக நோக்கில் அணுக வேண்டும். சமூகக் கண்ணோட்டம் கொண்டு உதவும் நோக்கம் மட்டும் போதுமானதல்ல - சமூக நோக்கில் பெறுவதை உறுதி செய்யாத வரை, உதவும் நோக்கம் வெற்றிபெறாது.

உதவிகள் என்பது வடகிழக்கு மக்கள் உழைத்து வாழ்வதை தேர்ந்தெடுத்து வாழும் போதும் - உழைத்து வாழ்வதை ஊக்குவிப்பதை நோக்கியும் - அதை வாழ்வாக தேர்ந்தெடுக்கும் வண்ணம்... உதவுவதன் மூலமும், புதிய சமூகத்தை உருவாக்க முடியும்.

உழைத்து வாழ முடியாதவனுக்கு தனிப்பட்ட முதலீடுகள் மூலம் (மாட்டுப் பண்ணை, கோழிப்பண்ணை, தையல் மெசின்..) மேலே கொண்டுவர உதவ முனைவது என்பது, வரட்டுத்தனமானது - அர்த்தமற்றது. உழைத்து வாழ்பவன் தான், கிடைக்கும் உதவியைக் கொண்டு மேலும் உழைப்பான். உழையாதவனால் "பண உதவியை" வீணாக செலவு செய்து அழிக்கத்தான் முடியும்.

இதே போல் உழைத்து வாழும் பெற்றோரின் குழந்தைகளின் கல்வி சார்ந்த பற்றாக்குறைக்கு உதவுவது என்ற பொதுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதும் - உழையாத பெற்றோரின் குழந்தைகளின் கல்வி மீதான அவர்களின் சுய அக்கறையில் விசேட கவனம் கொள்ளுவதும் - அதேயளவில் கண்காணிப்பும் அவசியமானது.

இங்கு கல்வி சார்ந்த வெறும் உதவிக்கு மேலாக - அவர்களை ஒருங்கிணைத்து சமூக உணர்வை வளர்க்கும் போதே கல்வி சார்ந்த உதவிகள் வெற்றி பெறும். வெறும் பாடசாலைக் கல்விக்கு உதவி என்பது, சமூக ரீதியான நல்ல மாற்றத்தையோ - நல்லதொரு சமூகத்தையோ தந்து விடாது.

பணத்தைக் கொடுத்து சமூக மாற்றத்தையும் - சமூக முன்னேற்றதையும் - தனிநபர் மேம்பாட்டையும் செய்ய முடியும் என்பது, தவறான பொதுப்புத்தியாகும். பணத்தைக் கொடுப்பது சமூக உணர்வல்ல - பணத்தைக் கொடுப்பவன் சமூக உணர்வுடன் அணுகுவதும், பெறுபவன் சமூக உணர்வடன் பெறுவதை உறுதி செய்வதுமே இன்றைய தேவையாகும்.