Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

மலையக மக்களுக்கு இன ரீதியான அடையாளம் கொடுத்த ஜனாதிபதி

"மலையக மக்களை பெருந்தோட்ட தொழிலாளர்கள் என அழைக்காமல் மலையக தமிழர்கள் அல்லது கண்டிய தமிழர்கள்" என அழைக்கும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளாராம். இனரீதியாக மக்களை பிரித்து வாக்கு வங்கிகளை கவரும் பூர்சுவா வர்க்கம் பெருமையுடன் இதை கொண்டாடுகின்றது.

மக்களை இனரீதியான பிரித்து அவர்களுக்கு இன அடையாளம் கொடுப்பதன் மூலம் மக்களை பிரித்தாளுகின்ற இனவாத சதிகள் தான் இவை. மலையக மக்கள் தோட்ட தொழிலாளராக தம்மை அடையப்படுத்தியதால் தான், 1948 களில் பிரஜாவுரிமையை இழந்தனர் என்பது வரலாற்று உண்மை. பிரஜாவுரிமையை பறித்தன் மூலம், அவர்களுக்கு இல்லாத தனி இன அடையாளத்தை கொடுத்து தனிமைப்படுத்தியே ஓடுக்கியதன் மூலம் பெரும்பான்மை சமூகத்தை ஏமாற்றி சுரண்ட முடிந்தது.

தமிழ்மொழி பேசும் மக்கள் என்ற பொது அடையாளத்தை கொண்டு அவர்களுக்காக போராட மறுத்த யாழ் மையவாத வெள்ளாத்தேசியம், அவர்களை சாதிரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் தமிழ் மொழி பேசும் மக்கள் மத்தியில் இருந்து தனிமைப்படுத்தினர். இப்படி யாழ்மையவாத தமிழ்தேசியம் தன்னை குறுக்கிக்கொண்டு இனவாதமாக்கி குட்டிச்சுவரானது. 1948 முன்பு தொடங்கி இன்று வரை இது தான் இந்த பிற்போக்கு தேசியமே தமிழ் மொழி பேசும் மக்களை பிரித்தாளுகின்றது.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் வாழும் "லயன்" நிலம் கூட சொந்தமாக இல்லாத நிலையில், இந்தியாவா இலங்கையா என்ற முடிவைக் கூட எடுக்க முடியாது வாழ்ந்த நிலையில், தமிழ் மொழி பேசும் மக்களால் "இழிவான" சமூகப் பிரிவாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், தனி தேசிய இனமாகக் கூட வளர முடியாது சூழல் நிலைக் கைதியாகவே வாழ்கின்றனர்.

தேர்தல் கட்சிகள் வாக்கை பெற கொடுக்கும் இன்றைய "இன அடையாளங்களுக்குள்" வைத்து, சுரண்டப்படுகின்ற பெருந்தோட்ட தொழிலாளர் வர்க்கமாகவே மலையாக மக்கள் வாழ்கின்றனர் என்பதே எதார்த்தம்.