Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பொது வேட்பாளரின் பொருளாதார ஜனநாயகம் என்ன?: குமார் குணரத்தினம் பாரிசில்

25 ஆண்டுகளுக்கு முன் சோசலிச விடுதலைக்காக போராடி மரணித்த தோழர்கள் தோழியர்களின் பாரிஸ் ஞாபகார்த்த நினைவுக் கூட்டத்தில் உரையாற்றிய குமார் குணரத்தினம் அவர்கள் ஜனாதிபதி முறையை மாற்றும் பொது வேட்பாளர் குறித்து தனது நீண்ட கருத்துக்களை சிங்களம் - தமிழ் மொழிகளில் மாறிமாறி வழங்கினார்.

பொது வேட்பாளரை முன்னிறுத்தி அரசியல் "ஜனநாயகம்" குறித்து பேசுகின்றவர்கள், பொருளாதார ஜனநாயகம் குறித்து பேசுவதில்லை என்றார். பொது வேட்பாளரின் பொருளாதாரக் கொள்கை என்ன என்ற கேள்வியை எழுப்பி, அவர்களின் கொள்கைகள் தான் என்ன என்று பார்த்தால் மகிந்த மற்றும் பொது வேட்பாளர் இரு தரப்பு பொருளாதார கொள்கைளும் ஒன்றாக இருப்பதையும், இது எந்த மாற்றத்தையும் சமுதாயத்திற்கு வழங்கிவிடாது என்பதையும் விளக்கினார்.

அரசியல் "ஜனநாயகம்" குறித்து அது மக்களுக்கு எதை வழங்கிவிடும் என்ற கேள்வியை எழுப்பி, அது ஒடுக்குமுறையைத்தான் வழங்கும் என்றார். இது தான் கடந்த 66 வருட உண்மையும் கூட என்றார். இன ஒடுக்குமுறை, பொருளாதார ஒடுக்குமுறை, பால் ஒடுக்குமுறைகள்... கூடுகின்றதா அல்லது குறைகின்றதா என்ற கேள்வி எழுப்பி, அது அதிகரித்து கொண்டிருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டினர்.

முன்பை விட இது சோசலிச வாழ்வின் அவசியத்தை கோருகின்றது என்பதை சுட்டிக்காட்டினர். அன்று குடும்பங்கள் கூட்டாக கூடி உண்டு பேசி மகிழ்ந்து வாழ்ந்த வாழ்வு இன்று பறிக்கப்படுவதும், குழந்தைகளிள் குழந்தை பருவம் பறிக்கப்படுவதாகட்டும்,.. இதற்கு மாற்றம் அவசியம் என்பதை உணரும் போது, மாற்றமே சோசலிசம் என்றார்.

மகிந்த அரசையும், சர்வாதிகார ஜனாதிபதி முறையையும் ஒழிப்பது அவசியமானது தான், ஆனால் எப்படி என்பதில் தான் வேறுபடுகின்றோம் என்றார். சிலர் நாங்கள் எல்லோரும் சேர்ந்து இதை ஒழிப்போம், பிறகு கிடைக்கும் "ஜனநாயகத்தில்" உங்கள் அரசியலுக்காக போராடுங்கள் என்கின்றனர். இதை தான் ஜே.ஆர் முதல் சந்திரிக்கா காலம் வரை சொல்லியும் செய்து வந்ததையும், ஒவ்வொரு முறையும் இதை சொல்லி மக்களை ஏமாற்றுவதை நாங்கள் செய்வது சரியானதா என்று கேள்வியை எழுப்பினாh.

மகிந்த அரசை நீக்குவதன் மூலம் மற்றொரு மக்கள் விரோத அரசைக் கொண்டு வருவதா என்ற வினாவை எழுப்பினர். 1990 களில் மனிதவுரிமைக்காக குரல் கொடுத்த மகிந்த இன்று சர்வாதிகாரி, மல்லைகை பூ மாலை அணிவித்து யாழ் மக்களால் வரவேற்கப்பட்ட சந்திரிக்கா தான் யாழ் மக்கள் மேல் குண்டு போட்டு தேர்தல்களை வென்றார்.

இங்கு தனிப்பட்ட நபர்களை மையப்படுத்தி மாற்றங்கள் என்பது கற்பனையானது. இவை அமைப்பு முறையுடன் சம்பந்தமானதே ஒழிய தனிநபர் சமந்தமானதல்ல. அமைப்பு முறை மாற்றமின்றிய அரசியல் உள்ளடக்கம், நபர்களை மாற்றுவதன் மூலம் மாற்றம் என்பதைக் காட்டி தேர்தலை வெல்வதற்கானதே ஒழிய உண்மையான மாற்றத்துக்கானதல்ல.

இதை முன் வைக்கும் போது, நாளை மாற்றத்தைக் காட்ட முடியுமா என்ற பொது மக்களின் கேள்வி, இறுதியில் 66 வருடங்களாக மாற்றம் இன்றி மாறி மாறி ஆட்களை தெரிவது தான் தொடர்கின்றது என்றார்.

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை எந்த வழியில் கொண்டு வரமுடியும் என்பதை விளக்க பொது இடதுசாரி வேட்பாளரை நிறுத்த உள்ளோம். அவர் யார் என்பதை விட இடதுசாரிய அரசியல் உள்ளடக்கம் என்ன என்பதே முக்கியமானதாக இருக்கின்றது என்றார். எத்தனை வாக்குகள் எடுக்கின்றோம் என்பது முக்கியமல்ல, மக்களை இடதுசாரிய திட்டம் சென்றடைவதும் அவர்களை அணிதிரட்டுவதுமே முக்கியமானது என்றார்.