Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மனோ கணேசனின் பித்தலாட்டம்!

1972ம் ஆண்டு உழைத்து வாழும் மக்களை ஏமாற்ற இலங்கையை "ஜனநாயக சோஷலிச குடியரசு" என்று ஆளும் வர்க்கம் போலி இடதுசாரிகளுடன் சேர்ந்து அறிவித்தது. இது அரசியல் மோசடியானது.

இலங்கை எப்போதும் குடியரசாகவோ, சோசலிச சமூகமாகவோ, முரணற்ற ஜனநாயக சமூக அமைப்பாகவோ இருந்தது கிடையாது. ஜனநாயகமாக காட்டியதும், காட்டுவதும் தேர்தலில் வாக்குப் போடுவதையே. கடந்தகாலங்களில் ஆட்சிகளாக நடந்தேறியவை எல்லாம் மக்களை சுரண்டுகின்ற மக்கள் விரோத ஆட்சிகள் தான்.

இப்படி இருக்க மனோ கணேசன் இன்று "சோசலிசத்தைக்" காப்பாற்றவும், "குடியரசைக்" காப்பாற்றவும், "ஜனநாயகத்தை" மீட்கவும், பொது வேட்பாளருக்கு வாக்கு போடக் கோருகின்றார். இதன் மூலம் மக்களை ஏமாற்றி வாக்கைக் கறக்கும் அரசியல் பித்தாலட்டத்தில் இறங்கியுள்ளார்.

அது மட்டுமல்ல "தேர்தல் கட்சி, நிறம், இனம், மதம் ஆகிய பேதங்களை கடந்த தேர்தலாக இருக்க வேண்டும்" என்று அறை கூவல் விடுகின்றார். இன, மத, நிற, கட்சி கடந்து, இனவொடுமுறைக்கும் இனவாதத்துக்கும் எதிராக மக்கள் திரளமைப்பை அரசுக்கு எதிராக அணிதிரட்டுவதை கட்சி கொள்கையாக கொள்ளாத மனோ கணேசன், மக்களின் வாக்குகளை தமது பொது வேட்பாளருக்கு வென்றெடுக்க பொய்க்கதை அளக்கிறார்.

இன்று இனவொக்குமுறைக்கும், இனவாத்துக்கும் எதிராக அனைத்து இன மக்களையும் அணிதிரட்டி பல போராட்டங்களை முன்னெடுத்து இயங்கிக் கொண்டிருககும் சமவுரிமை இயக்கத்தினது கோசத்தையும் அதன் அரசியல் உள்ளடகத்தையும், வாக்கு சேகரிக்கும் தனது முதலாளித்துவ சுரண்டலுக்குரியதாக்க முனைகின்றார்.

இதே அடிப்படையில் "ஜனநாயகம்" "சோஷலிசம்" "குடியரசு" போன்ற சொற்பதங்களையும் பயன்படுத்துகின்றார். பெயரவில் இலங்கை அரசியல் அமைப்பில் சொற்களாக இருந்த இந்த சொற்களை, ஏதோ எமது சமூக பொருளாதார அமைப்பில் இருந்ததாக காட்டி, ஏமாற்றும் பித்தாலட்டத்தைச் செய்கின்றார். இதன் மூலம் கற்பனையான பிரமையை மக்கள் மத்தியில் ஊட்டி, வாக்கை கறக்க முனைகின்றார்.

மனோ கணேசனினும், அவர் ஆதாரிக்கும் பொது வேட்பாளாரினதும் பொருளாதார கொள்கையானது நவதாரளமயமே ஒழிய; "சோஷலிசம்", "குடியரசு" கொண்டு இருக்கக் கூடிய சமூக பொருளாதரமல்ல. இது முன்வைக்கும் "ஜனநாயகம்" என்பது நவதாரளவாத மூலதனத்திற்கு நாட்டை விற்பதும், மக்களை சுரண்டிக் கொழுப்பதை தொடர்வதும் தான்.

1970களில் போலி இடதுசாரிகள் மக்களை ஏமாற்ற செய்ய பித்தலாட்டத்தை, மனோ கணேசன் இன்று தனதாக்கிக் கொள்வதன் மூலம், அதைக் கொண்டு நவதாரளவாதத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ள பொது வேட்பளாருக்கு வாக்கு சேகரிக்க முனைகின்றார்.