Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

லலித் -குகனை விடுவிக்கக்கோரி யாழில். போராட்டம்

லலித் மற்றும் குகனை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று (25.03.2015) முன்னிலை சோசலிச கட்சியினர் துண்டுப்பிரசுரங்களை யாழ். மத்திய பஸ் நிலையத்தில் பொது மக்களிடம் விநியோகித்ததுடன், ஊர்வலம் ஒன்றினையும் நடத்தினர்

மேலும் லலித்- குகன் கடத்தல் பற்றிய வழக்கு இன்று (25.03.2015) யாழ். நீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரை ஜூலை 30 ஆம் திகதி யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அழைப்பாணையை அனுப்பி வைத்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியற் செயற்பாட்டாளரான   லலித் குமார மற்றும்  தோழர் குகன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள். அவர்கள் இருவரும் கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பில் யாழ். நீதிவான் நீதிமன்றில் கடந்த 3 வருடங்களுக்கு மேல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு,  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்னர் முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல லலித் மற்றும் குகன் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக கூறியதை தொடர்ந்து நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்திருந்த நிலையில், இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்னாள் ஊடக அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ். நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.