Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

தேர்தலின்போது மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கு எதிராக அணிதிரள்வோம்!

ஊவா மாகாண சபை தேர்தலில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் வன்செயல்கள் கடந்த வாரம் பாரதூரமாக அதிகரித்துள்ளது. இதுவரை வெளிவராத பாரதூமான சம்பவங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமுள்ளன. கடந்த ஞாயிறு இரவு ஆரம்பமான வன்முறைகள் தொடர்ந்து பரவலாகி வருகின்றன.

இந்நிலை மொணராகலை மாவட்டத்திலயே அதிகமாக காணப்படுகிறது. மொணராகலை மாவட்டத்தில் இரு நாட்களில் மட்டும் 13ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகங்களும், மக்கள் விடுதலை முன்னணியின் 4அலுவலகங்களும் தாக்கப்பட்டுள்ளன.

 

தவிரவும், தேர்தல் மேடைகளை தீயிடல், கட்அவுட் மற்றும் அலங்கரிப்புகளை உடைத்தெறிதல், வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற பல்வேறுபட்ட வன்செய்கள் நடந்துள்ளன. சில சந்தர்ப்பங்களில் வெடி வைத்தல் போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. வன்செயல்களில் ஈடுபடுவோர் துப்பாக்கிகள் பயன்படுத்துவதையும் காணக்கூடியதாக உள்ளது.

ஆயுதம் தரித்த செயற்பாடுகளுக்கு தூண்டுவதாக ஏனைய அரசியல் சக்திகளை குற்றஞ்சாட்டி தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களின் ஆக்க குறைந்த ஜனநாயக உரிமைகளைக் கூட பறிக்கும் அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் கவனத்தில் எடுக்க வேண்டிய விடயங்களாகும்.

இந்த சம்பவங்களை பார்க்கும் போது, தேர்தல் என்பது மக்களின் சுய விருப்பத்தை வெளியிடும் வாய்ப்பாக அல்லாது கருத்தியல் ரீதியிலான வற்புறுத்தல் புகுத்தப்படும் சந்தர்ப்பமாகவே காணப்படுகிறது. உடல் ரீதியாக நடக்கும் வன்செயல்கள் இம்முறை ஊவா தேர்தலில் பரவலாக காணப்படுகிறது. இது சம்பந்தமாக பொது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுட்டாலும் பணபலம், ஊடகபலம், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல் மற்றும் பல்வேறுபட்ட பொய்ப் பிரச்சாரங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் கோட்பாட்டு வற்புறுத்தல்களை மக்கள் அவதானிப்பது குறைவாகவே இருக்கிறது.

மக்களின் உண்மையான கருத்து பற்றி சரியான விளக்கம் பெறுவதில் மட்டுமல்ல, எந்தவொரு கருத்தையும் வெளியிட வாய்ப்பை பெறுவதாயிருந்தால் கூட  இந்த அரசியல் முறையில் மாற்றம் தேவை என்பது தெளிவாகத் தெரிகிறது.

தேர்தலில் வாக்காளர்களுக்கு எதிராக மற்றும் மாற்றுக் கருத்தை கொண்டவர்களுக்கு எதிராக தொடுக்கப்படும் வன்செயல்களை நிறுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தம் நாம், தற்போதைய ஏமாற்று தேர்தலுக்கு பதிலாக மக்களின் உண்மையான கருத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தேர்தல் செயற்பாட்டோடு புதிய அரசில் செயற்பாட்டை கட்டியெழுப்ப முன்வருமாறும், பௌதிக வற்புறுத்தலுக்கும், கோட்பாட்டு வன்செயலுக்கும் எதிராக போராடுமாறும் அனைத்து இலங்கை மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

 

முன்னிலை சோஷலிஸக் கட்சி