Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மண்ணுக்குள் புதைபடுவோமா? வாழ்க்கைக்காக போராடுவோமா?

கொஸ்லாந்தை மீரியபத்த பகுதியில் ஏற்பட்ட மண் சரிவுடன் கடந்த சில நாட்களாக தோட்டத்தொழிலாளர்கள் விடயத்தில் என்றுமில்லாதவாறு நாட்டின் கவனம் திரும்பியது. சர்வாதிகாரி உட்பட கட்சித்தலைவர்கள் அங்கு சென்றனர்.

இவை ஊடகங்களில் தினசரி செய்திகள் வெளியிடப்பட்டன. நாட்டு மக்கள் சோகத்தில் மூழ்கினர். இவ்வாறாதொரு கவன ஈர்ப்புக்காக பல உயிர்கள் மண்ணுக்குள் புதைபட நேர்ந்தது. என்றாலும், இந்த கவன ஈர்ப்பு அனுதாபம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்?

மண்சரிவு ஆபத்து குறித்து மக்களை அறிவுறுத்தியதாகவும், மக்கள் வெளியேறவில்லை எனவும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கூறுகின்றன. ஆனால், அவர்கள் எங்கே செல்வார்கள்? தாம் வசிக்கும் வீடுகளுக்கான உரிமை கூட தோட்ட மக்களுக்கு கிடையாதென்பது அநேகருக்கு தெரியாது. ஆபத்தான வீடுகளுக்குப் பதிலாக மாற்று வீடுகளை வழங்க வேண்டியது அரசாங்கமும் தோட்ட நிர்வாகமும்தான். அவர்கள் அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார்களா? போதுமான இடவசதி இல்லாத காற்றாலும் மழையாலும் பாதிக்கப்படும் வீடுகளில் வசிக்கும் உங்களது பாதுகாப்பற்ற உயிர்களுக்கு அவர்கள் பொறுப்பேற்கிறார்களா?

தோட்டத்தொழிலாளர்கள் என்ற வகையில் நீங்கள் வசிக்கும் வீடுகளுக்கான உரிமைகள் மாத்திரமல்ல, விலாசம் கூட கிடையாது, தோட்டப் பகுதியில் பெரும்பாலானோருக்கு வரும் தபால்கள் கூட தோட்ட மேலதிகாரியின் ஊடாக அவர்களது அலுவலகத்திற்கு அலலவா வருகிறது?.

வெள்ளையர்கள் இந்நாட்டில் தோட்டப் பயிர்ச் செய்கையை ஆரம்பித்த நாள் தொட்டு இன்றுவரை தோட்ட மேலதிகாரியின் அடிமைகளாக வாழ வேண்டிய நிலை உங்களுக்கு ஏற்பட்டுள்ளதல்லவா? அடிமைச் சமூகம் நிலவிய காலத்தில் அடிமைகள், மறுநாள் வேலை செய்வதற்குத் தேவையான உடல் வலிமையை பெற்றுக் கொள்ள அடிமைகளின் உரிமையாளர்க்ள் அவர்களுக்கு உணவு கொடுத்தனர்.

ஆனால் நாள் சம்பளமாக 450 ரூபாய் பெறும் நீங்கள் மறுநாள் வேலை செய்வதற்கு தேவையான உடல் வலிமையை பெறுவதற்குக் கூட அது போதுமானதாக இல்லையல்லவா? மாதத்திற்கு 20 நாட்களுக்கு மேல் வேலை செய்தால் 650 ரூபாய் சம்பளம் பெற முடியும். ஆனால், தோட்ட முதலாளிகள் அதிகாரிகளின் ஊடாக மாதத்திற்கு 20 நாட்களுக்கு மேல் வேலை தராமலிருக்க நடவடிக்கை எடுக்கிறார்கள் அல்லவா?

உங்களது உழைப்பால் நீங்கள் நாளொன்றுக்கு 450 ரூபாய் பெறும்போது, அதைவிட பல மடங்கு முதலாளிகளுக்கு உழைத்துக் கொடுக்கிறீர்கள். அப்படியாயின், உங்களது ஒரு நாள் உழைப்பின் உண்மையான மதிப்பு எவ்வளவு? அதிலிருந்து உங்களுக்கு கிடைப்பது சொச்சமா? இந்தளவு மனிதாபிமானமற்ற சுரண்டலின் மூலம் இலாபத்தை குவித்துக் கொண்ட தோட்ட கம்பனிகளின் உண்மையான உரிமையாளர்களாகிய உங்களை அறிய மாட்டார்கள் போலும். சில கம்பனி முதலாளிகள் இந்நாட்டின் முதல்தர கோடீஸ்வரர்களாக இருப்பதுடன், மேலும் சிலர் உலகின் முதல்தர கோடீஸ்வரர்களாகவும் இருக்கிறார்கள். என்றாலும், பல தோட்டங்களில் உங்களது சம்பளத்திலிருந்து வெட்டிக்கொள்ளும் ஊழியர் சேமலாப நிதியைக் கூட உங்கள் கணக்கில் வரவு வைப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

உங்களை இந்தளவு சுரண்டும் தோட்ட முதலாளிகள் அவர்கள் பெயரில் நன்கொடைவழங்கவும் தியாகம் செய்யவும் உங்களது சம்பளத்திலிருந்து வெட்டிக் கொள்கிறார்களல்லவா? கொஸலாந்தை மண் சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில தோட்டக் கம்பனிகள் உங்கள் சம்பளத்திலிருந்து வெட்டிய பணத்தை கொணடு நிவாரணம் வழங்கியதல்லவா?

அப்படிப்பட்ட விபத்தின் போது கூட கோடீஸ்வரர்களாகிய அவர்கள், அவர்களது இலாபத்திலிருந்து அதனை குறைத்துக் கொள்ள விரும்புதில்லை.

தோட்டப்பகுதியில் வசிக்கும் உங்கள் பிள்ளைகள் படிக்க வசதியான பாடசாலைகள் இருக்கின்றனவா? மைல் கணக்கில நடந்து பாடசாலை சென்றாலும், போதுமான ஆசிரியர்கள் கிடையாது. அநேகமான பாடசாலைகள் ஆரம்ப பாடசாலைகளாகும். இரண்டாம்நிலை பாடசாலைகளுக்கு செல்வதாயின் தொலைதூர நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. உயர்தர வகுப்புகள் ஒரு சில பாடசாலைகளில் மாத்திரமே நடக்கின்றன. அதுவும் சில நகரங்களில் மாத்திரமே. ஆஸ்பத்திரகளும் அப்படித்தான். ஒரு நோயாளியை கரடு முரடான பாதை வழியாகஆஸ்பத்திருக்கு நீண்ட தூரம் சுமந்து செல்ல வேண்டியுள்ளதல்லவா?

பொருளாதார அழுத்தத்தை போன்றே தோட்டத்தோடு முடிந்துவிடும் உங்களது வாழ்க்கை அவமானத்தினாலும், தரக்குறைவான கவனிப்பினாலும கிடைத்த வேதனைகளை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள். பேசும் மொழி, தொழில், இனம் அல்லது மதத்தின் மீது மனிதர்களை துன்புறுத்துவது நீதியா? இந்த ஒடுக்கத்திலிருந்து மீள தோட்டப்புற இளைஞர்கள வெளிநாடுகளுக்கு செல்வது, கொழும்பில் ஹோட்டல்களிலும், கடைகளிலும், வீடுகளிலும் வேலைக்கு செல்வது, ஆடைத்தொழிற்சாலைகளில் வேலைக்கு செல்வது போன்றவற்றை இன்று காண முடியும். என்றாலும் அந்த வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கிறதா? அநேகமானோர் மீண்டும் தோட்டத்திற்கே வந்துவிடுகின்றனர.

நீதியான சம்பளம் மட்டும்ல்ல, மனிதர்கள் என்ற வகையில கிடைக்க வேண்டிய வாழ்க்கையையும் பறிகொடுத்த நீங்கள் கோயில், விகாரை, பள்ளி, தேவாலயம் என சரணடைந்தாலும் அடிமையாக வாழ்வதை ஏற்றுக் கொள்வதைத் தவிர உங்கள் உரிமைகளை வெல்ல உங்களுக்கு சக்தி கிடைத்ததா?

நீங்கள் வாங்கும் சொச்ச சம்பளத்தில் மேலும் பறித்துக் கொள்ள உங்கள் வீட்டுக்கு வரும் இலகு தவணையில் பொருட்களை வழங்கும் கம்பனிகள் இலத்திரனியல் பொருட்கள், வீட்டுத் தளபாடங்கள் போன்றவற்றையும் கொடுக்கிறது. அவற்றுக்கு மாதத் தவனை செலுத்த நேரும்போது மேலும் மேலும் கஷ்டத்தில் விழுகிறீர்களல்லவா? சட்டலைட் டீ.வி, வீடியோ, தொலைபேசி போன்ற அநேகமான பொருட்களை விலைக்கு வாங்கினாலும், உங்களது வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியும், உண்மையான மாற்றமும் அதனால் ஏற்பட்டுள்ளதா?

தலைமுறை தலைமுறையாக உங்களை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறி உங்கள் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட தோட்டப்புற அரசியல்வாதிகள் ஒவ்வொரு அரசாங்கத்திலும் அமைச்சர்களாக உள்ளார்கள். ஆனால், உங்கள் வாழ்க்கையில் அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்தினார்களா? உங்களுக்கு செய்த நன்மைகள்தான் என்ன?அவர்களது தொழிற் சங்கம் மாதச் சந்தாவை உங்களிடமிருந்து வெட்டி, உங்களது சம்பளத்தையும் அனுபவித்து, கூட்டு ஒப்பந்தங்களுக்கு இசைந்து தோட்ட முதலாளிகளை எப்போதுமே மகிழ்வித்து வந்துள்ளார்கள் அல்லவா?

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பதற்காக வியர்வை சிந்தி படாதபாடுபடும் நீங்கள், பாதுகாப்பற்று வாழும் நீங்கள் மனிதர்கள் என்ற வகையில் கிடைக்க வேண்டிய உண்மையான வாழ்க்கையை இழந்து தொடர்ந்தும் அடிமைகளாக வாழப் போகிறீர்களா? இல்லையென்றால், வாழ்க்கையை பெற்றுக் கொள்ள அடிபணிவதற்குப் பதிலாக உங்களது உரிமைகளுக்காக எழுந்து நிற்கப் போகிறீர்களா?

இப்போதாவது நீங்கள் முடிவு செய்ய வேண்டும். உங்களோடு சேர்ந்து நாட்டின் ஏனைய ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் ஆகியோரும் அதற்காக போராடத் தயாராக உள்ளனர். எழுந்து வாருங்கள். தற்போதைய முறையை மாற்றி சோஷலிஸத்தை வெல்வதற்கு சேர்ந்து நாங்கள் போராடுவோம்.

பாதுகாப்பற்ற வீடுகளுக்கு  பதிலாக வாழ்வதற்கு நிரந்தர வீடும் நிலமும் பெற போராடுவோம்!

வாழ்வதற்கு போதுமான நிரந்தர சம்பளம் பெற போராடுவோம்!

அடிபணியாதிருப்போம்! கொள்ளைக்கார முதலாளித்துவதற்கு பதிலாக சோசலிஸத்துக்காக போராடுவோம்!

முன்னிலை சோசலிச கட்சி

09/11/2014