Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

உண்மையான வெற்றிக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

 

பல்வேறுபட்ட நாடகங்கள் அரசியல் மேடையில் அரங்கேறிக் கொண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் நாம் உங்களை சந்திக்கின்றோம். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பதிலாக புதிய அரசாங்கமொன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்தரப்பை சார்ந்த பல கட்சிகளின் ஆதரவோடு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிப் பதவியில் அமர்ந்துள்ளார். ஆட்சிக்கு வந்து நூறு நாட்களுக்குள் அநேகமானவற்றை மாற்றுவதாக அவர் வாக்குறுதியளித்துள்ளார். அந்த நூறு நாட்களுக்கு இடைப்பட்ட காலத்திலேயே நாங்கள் உங்களை சந்திக்கிறோம்.

பல விடயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. திருட்டுக் கூட்டத்தை பிடிக்கும் நடவடிக்கை மற்றும் திருட்டுப் பொருட்களை தேடுவது குறித்து இரகசிய பொலிஸ் கதை போன்ற கதைகள் ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுகின்றன. எரிபொருள் விலை குறைக்கப்பட்டது. மேலும் பல பொருட்களின் விலை குறைப்பு சம்பந்தமாக கூறப்படுகிறது. அதற்கிடையில் ஏற்கனவே அதிகாரத்தில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள உபாயங்களை பயன்படுத்துகிறார்கள். அந்த உபாயங்களின் ஒரு பகுதியாக மதவாத பிரச்சாரங்களும் பல்வேறு வதந்திகளும் சமூகத்தில் பரவலாகி வருகிறது.

இந்த குழப்பங்களுக்கு மத்தியில் நாம் செய்ய வேண்டியது என்ன? அது சம்பந்தமான பேச்சுக்களை தொடக்கி வைக்கவே எங்களது இந்த முயற்சி ஏற்கனவே இருந்த அரசாங்கம் தனது பொருளாதார கொள்கை என்ற வகையில் நவ தாராளமய கொள்கையையே அமுல்படுத்தியது. அனைவரும் அறிந்த வார்த்தையொன்று உள்ளது. அதாவது திறந்த பொருளாதாரம். அதற்காக சுற்றுலாத்துறையை இலக்காகக் கொண்ட கண்காட்சிகளுக்கே முக்கியத்துவமளிக்கப்பட்டது. உழைக்கும், வியர்வை சிந்தும் நாட்டுக்கு வருமானத்தை பெற்றுத்தரும் மக்களிடமிருந்து பறித்து செல்வந்தர்களுக்கும், வியாபாரிகளுக்கும் வெளிநாட்டு கம்பனிக்காரர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படுவதே அதன் கொள்கையாக இருந்தது. எமது உணவுப் பொருட்களின் மீது வரி விதித்து, அந்த வரியை கொண்டு சிறு குழுவினரின் தேவைக்காக செலவிடப்பட்டது. இந்த நிலைக்கு எதிராக மக்கள் எழுச்சி பெறும்போது அடக்குமுறை கொண்டு வரப்பட்டது. அதனால்தான், நாடு படிப்படியாக ஏகாதிபத்தியத்தை நோக்கி சென்றது. அபிவிருத்தி என்ற பெயரில் செய்தவற்றில் பாரியளவிலான மோசடிகள் நடந்தன. சமூக நீதிக்கு பதிலாக தமது குடும்பத்திற்கு, தமது உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு வரப்பிரசாதம் வழங்கும் நிலை உருவானது.

இதனை மாற்ற வேண்டும்! அப்படி நினைத்துதான் அந்த அரசாங்கத்தை தோற்கடித்து இந்த அரசாங்கம் கொண்டுவரப்பட்டது.

சிறிது காலமே கடந்துள்ளது. புதிய அரசாங்கம் ஆட்சியமைத்து ஒரு மாதம் கூட செல்லவில்லை. ஆனால் ஏதாவதொரு மாற்றத்தை எதிர்பார்த்தவர்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. புதிய மொந்தையில் பழைய கள் தானோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் உருவாகி வருகிறது. அரசாங்கம் ஆரம்பத்தில் அதிகாரிகளை நியமிக்கும்போது பழைய ஊழல்வாதிகள் மீண்டும் அதிகாரத்தில் அமர்த்தப்படுவார்களா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. அது சரியாக நரியிடம் கோழிக் கூட்டை ஒப்படைத்தது போன்றதாகுமென அநேகமானோர் கருதினர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக ஆரம்பத்தில் கூறினாலும் இப்போது அதிகாரக் குறைப்பு போன்ற எளிய மாற்றங்களே நடக்கின்றன. வாக்குறுதியளித்தவாறு தேர்தல் முறை மாற்றப்படாதாம். நூறுநாள் வேலை திட்டத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களில் குறித்த திகதியில் (உண்மையாக சொன்னால் குறித்த திகதிக்கு முன்பு) ஜனாதிபதியின் சத்தியப் பிரமாணம் மாத்திரமே நடந்தது. ஏனைய அனைத்தும் தாமதமாகியது. அநேகமானவை இதுவரை நடக்கவில்லை முகம் மாத்திரமா மாறியது கேள்வி, இறுதியாக எழுவது அதனால்தான்.

ஆனாலும் நிவாரணம் கிடைத்ததல்லவா? ஊழல் மோசடிகளுக்கு தண்டனை கிடைக்குமல்லவா? அதனால் சிறிய மாற்றம் இருப்பதாக நீங்கள் கூறலாம் மேலோட்டமாக சிறிய மாற்றங்கள் காணப்பட்டாலும் ஆழமாக நடக்க வேண்டியவை நடப்பதில்லை. ஆகவே இந்த களியாட்டங்கள் முடிந்த பின்னர் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்பது தெரியவரும். முந்தைய சர்வாதிகார ஊழலாட்சி தோற்கடிக்கப்பட்டது. இந்த அரசாங்கத்தில் நல்லாட்சியூம், ஜனநாயகமும் கிடைக்குமென்பதே அநேகமானோரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. ஆனால் அவை வெறும் சுலோகங்களா மாத்திரமே ஆகிக்கொண்டிருக்கிறது. ஜனநாயகம் என்ற பகுதி நழுவி திருடனை பிடிக்கும் கதையாக சுருங்கியூள்ளது. அடக்குமுறை சட்டங்களை ஒழித்தல், கடந்த காலங்களில் நடந்த கொலைகள், காணாமலாக்கல் குறித்து வெளிச்சத்திற்கு கொண்டு வருதல், இராணுவமயத்தை ரத்து செய்தல் போன்றவை பின்தள்ளப்பட்டு ஊழல்களை விசாரிப்பதற்கு விசாரணை சபை அமைப்பது குறித்து மாத்திரம் பேசப்படுகிறது. படுகொலைகளை பற்றி விசாரிக்கும்போதும் அவை ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு மாத்திரமே என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அடித்தட்டு மக்களின் ஜனநாயகம் கைவிடப்பட்டுள்ளது. ஊழல் சம்பந்தமான விடயத்திலும் சிலரின் பைல்கள் (கோவை) மாத்திரமே வெளியில் எடுக்கப்பட்டன. கட்சி மாறிய ஊழல்வாதிகள் குறித்து விசாரணை கிடையாது. தமது கட்சியை விட்டு செல்வோரை நிறுத்துவதற்காகவே மஹிந்த அரசாங்கம் பைல்களை பாவித்தது. இவர்கள் எதற்காக பைல்களை பாவிக்கிறாரகள் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். நல்லாட்சியை உண்மையிலேயே நிறுவ வேண்டுமாயின் கடந்த காலத்தில் நடந்த திருட்டுக்கள் குறித்து விசாரிப்பதை போன்று அப்படியான செயல்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு தடுப்பதற்கான முறைகளை தயாரிக்க வேண்டும். ஆனால் அது விடயத்தில் எதுவூமே கதைப்பதில்லை. பொருளாதார நிவாரணம் குறித்தும் இந்த நிலைதான் காணப்படுகிறது. நீண்டகாலம் நிலைக்கக் கூடிய பலனை பெறுவதாயின்இ பொருளாதார கொள்கையில் மாற்றம் தேவை. இப்படியான செயல்களின் மூலம் நடப்பது ஒரு கையால் கொடுத்துஇ இரு கைகளாலும் மீண்டும் பறித்துக் கொள்வதுதான்.

உண்மையான வெற்றிக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

முதற் காரணிதான் இந்த மேலோட்டமான மாற்றத்திற்கும் களியாட்டங்களுக்கும் மயங்காது பகுத்தறிவோடு கவனமாக இந்த நடவடிக்கைளை ஆராய வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் வாக்குறுதியளித்தவற்றை பெற்றுக் கொள்ளவூம், மறந்துவிட்ட அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவூம் மக்கள் செயற்பாட்டை உருவாக்க வேண்டும். எமது வேலை அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பது, வாக்கு பெறுபவர்களின் வேலை எமது வாழ்க்கையை தீர்மானிப்பது என நினைத்தால் எந்தநாளும் இந்த தலைவிதிதான். அந்த தலைவிதியை மாற்ற எந்த வல்லானும் வரமாட்டான். அப்படி தோற்றி நிற்கும் எவரும் எமது பாரதூர பிரச்சினைகள் சம்பந்தமாக நீண்டகால தீர்வை பெற்றுத்தர மாட்டார்கள். அந்த பொறுப்பு எமது கைகளிலேயே உள்ளது. நாங்கள் அனைவரும் எமது பொறுப்பை உணர்ந்து சரியான அரசியல் செயற்பாட்டில் நுழைய வேண்டும்.

அதற்காக செயற்படுவோம்!

எமது உண்மையான பிரச்சினைகளை அரசியல் மேடைக்கு கொண்டு வருவோம்!

இடதுசாரிய பலத்தை கட்டியெழுப்ப அணிதிரள்வோம்!

2015.01.26

முன்னிலை சோஷலிஸக் கட்சி