Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மாற்றமில்லை - திரும்புவோம் இடதுபக்கம்!

மகிழ்ச்சியில்லை... சுதந்திரமில்லை...

சம்பளமில்லை... வாழ்க்கையில்ல...

மாற்றமில்லை- திரும்புவோம் இடதுபக்கம்

விரைவில் நடத்துவதாகக் கூறும் தேர்தலின் பக்கம் பெரும்பாலான மக்களின் கவனம் திரும்பியிருக்கிறது. ஜனநாயகம், நல்லாட்சி, ஊழல் முறைகேடுகளை ஒழித்தல் போன்ற கோசங்கள் வெறும் வார்த்தைகளாகி விட்டன. ஜனாதிபதித் தேர்தலின்போது அள்ளி வீசிய வாக்குறுதிகள் இந்த வெற்று வார்த்தைகளுக்குள் நீர்த்துப் போய்விட்டன. ஜனாதிபதித் தேர்தலின் போதும் எமது உண்மையான பொருளாதாரப் பிரச்சினைகள் மறைக்கப்பட்டு உண்மையான ஜனநாயகம் சம்பந்தமான பிரச்சினை கைவிடப்பட்டு வேறு பொய்யான பிரச்சினைகளுக்குள் நாங்கள் சிறைபடுத்தப்பட்டோம்.

இப்போது, பொதுத் தேர்தலிலும் அதுதான் நடக்கப்போகிறது. எமது வாழ்க்கையின் உண்மையான பிரச்சினைகளுக்குப் பதிலாக எமக்கு சம்பந்தமில்லாத ஏராளமான பொய் பிரச்சினைகள் ஏற்கனவே மெதுவாக மேடைக்கு வந்துவிட்டன.

வாழ்வதற்காக எமக்கு கிடைக்கும் சொச்ச சம்பளம் போதவே போதாது. ஆதலால், மேலதிக நேரம் வேலை செய்ய, வேறு சில தொழில்களை செய்ய, எதையாவது விற்க அல்லது தொடர்ந்தும் எம்மையே விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஓய்வெடுக்க, குடும்ப உறுப்பினர்களோடு நண்பர்களோடு பொழுதுபோக்க, சாதாரண மனித உறவுகளைப் பெற எமது வாழ்வில் நேரம் போதவில்லை. வாழ்க்கையை அனுபவிக்க ஒரு வினாடி கூட எஞ்சியிருப்பதில்லை. பாடுபடும் வாழ்வு மாத்திரம் எஞ்சியுள்ளது.

கடந்த தேர்தலிலும் எமது சம்பளப் பிரச்சினை தேர்தல் மேடைகள் தோறும் ஒலித்தது. அரச ஊழியர்களுக்கு மட்டும் கடந்த வரவு செலவு அறிக்கையில் கொஞ்சம் அதிகரிக்கப்பட்டது. அதுவும் அடிப்படை சம்பளத்துடனல்ல கொடுப்பனவாக. தனியார்துறை ஊழியர்களுக்கு, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு செப்புக்காசு கூட அதிகரிக்கப்படவில்லை. அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்பவர்களுக்கு, சுயமாக ஏதாவதொரு சிறு வியாபாரம் செய்பவர்களுக்கு, ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு, சாப்பாட்டுக்கடைகளில் காலையிலிருந்து இரவு வரை உழைக்கும் அநேகருக்கு எள்ளளவு கூட அதிகரிக்கப்படவில்லை. அதிகரிக்க வழியுமில்லை.

பொதுத் தேர்தலை இலக்கு வைத்து கடந்த வரவு செலவு அறிக்கையில் சில பொருட்களின் விலை குறைக்கப்பட்டது. அதுவும் ஒரு தேர்தல் குண்டுதான். அப்படியில்லாமல் உழைக்கும் மக்களாகிய எங்களை இந்த படுகுழியில் தள்ளிய பொருளாதாரக் கொள்கையை மாற்றுவதற்கு கொண்டு வந்த வரவு செலவு அறிக்கையல்ல. அந்த வரவு செலவு அறிக்கையில் எமது பிள்ளைகளின் கல்விக்கு, மக்களின் சுகாதாரத்திற்கு, போக்குவரத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அந்த அத்தியாவசிய சேவைகள் தனியாருக்கு விற்கப்படுவது தொடர்ந்தும் அதிகரிக்குமேயல்லாது குறையப்போவதில்லை. அந்த சேவைகளை பெற்றுக் கொள்ள நாங்கள் மேலும் மேலும் செலவழிக்கும் நிலையே உள்ளது. ஒருகையால் நிவாரணம் தருவதாகக் கூறி இருகைகளாலும் திரும்பப் பெற்றுக் கொள்வது இப்படித்தான்.

விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் ஆகியவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை. குறைந்தபட்சம் அது குறித்துப் பேசப்படவே இல்லை.

பொதுத் தேர்தலின் போதும் மீண்டுமொரு முறை அதிகாரத்தை பெற்றுக் கொள்ள இரு பிரதான கட்சிகளும் போட்டியில் இறங்கியுள்ளன. மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுக் கொடுத்தல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற கோசங்கள் புஸ்வாணமாகப் போய்விட்டன. இப்போது ஜனநாயகத்தைப் பற்றி கூறும் அரசியலமைப்பு திருத்தங்கள் அனைத்தும் தீர்மானிக்கப்படுவது இந்த அதிகாரப் போட்டிக்கு ஏற்றபடிதான். ஜனாதிபதித் தேர்தலில் தோற்றவர்கள் இப்போது மீண்டும் இனவாதத்தை சுமந்துக் கொண்டு அதிகாரத்திற்கு வர முயல்கிறார்கள். இன்னும் சிலர் சிகப்புச் சட்டையை போட்டுக் கொண்டு இந்த பெரிய கட்சிகள் செய்யும் பொய்யை வெளிப்படுத்தாமல் அவர்களது செப்படி வித்தைக்கு வெள்ளையடிக்கிறார்கள்.

இந்த நிலைமையில்தான் இம்முறை சர்வதேச தொழிலாளர் தினமும் வருகிறது (மே தினம்). வழமை போன்று எல்லோரும் அன்றைய தினம் உழைக்கும் மனிதர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை மேதின மேடைகளில் மெல்லுவதற்கு எடுப்பார்கள். அந்த கேள்விகளுக்கான பதில் அரசியல் கட்சிகளிடம் இருப்பதாகக் கூறி தம்மை ஆட்சியில் ஏற்ற வாக்குக் கேட்பார்கள். தத்தமது அதிகாரத் திட்டங்களில் தங்கியுள்ளதாக இம்முறையும் எல்லோரும் சொல்வார்கள்.

வருடம் பூராவும் நாறிக்கிடக்கும் இந்த முறைமைக்கு சொந்தக்காரர்களான அனைவரும், இந்த முறைமையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக, இடதுசாரிகளெனத் தம்மைக் கூறிக்கொண்டு வெள்ளயடிப்பவர்கள் தான், மே தின மேடைகளில் மாத்திரம் உழைக்கும் மக்கள் குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பார்கள். அதன் பிறகு அடுத்த நாளிலிருந்து எமது வாழ்வை சீரழிக்கும் இந்த முறைமையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

சர்வதேச தொழிலாளர் தினத்தில் மாத்திரம் வரையறுக்கப்படும் தொழிலாளர்களின் உரிமைகள் சம்பந்தமான பேச்சு எங்களுக்கு தேவையில்லை. அப்பேச்சுக்களை, மண்ணில் உயிரோட்டமான போராட்டமாக மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செயற்படாதவரை இந்த ஏமாற்று வித்தை என்றென்றும் தொடர்கதைதான்.

எனவே, எமது பிரச்சினைகள் குறித்துப் பேச, போராட, வாழ்வையும் உரிமைகளையும் பெற்றுக் கொள்வதை மே தினத்திற்கு மாத்திரம் வரையறுக்க முடியாதென்பதை புரிந்து கொள்ளுமாறும்; பொய் எதிர்ப்பார்ப்புகளுக்கும், கனவுகளுக்கும், வாக்குறுதிகளுக்கும் ஏமாராமல் உண்மையான வெற்றிகளை பெறுவதற்காக, பேசுவதற்கு, போராடுவதற்கு முன்வருமாறும், அதற்காக எங்களோடு இணையுமாறும் நாம் உங்களிடம் வேண்டுகிறோம்.

மாற்றமில்லை திரும்புவோம் இடதுபக்கம்

தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் - முன்னிலை சோஷலிஸக் கட்சி