Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

"இடதுசாரிய நடவடிக்கை" நெருக்கடியின் முன்னால் வர்க்கத்தின் தீர்வு

"இடதுசாரிய நடவடிக்கை - நெருக்கடியின் முன்னால் வர்க்கத்தின் தீர்வு" என்ற இந்த நூல் 2014 அக்டோபர் மாதத்தில் முதன் முதலாக எழுதப்பட்டு, அம்மாத இறுதியில் சிங்களத்தில் வெளியிடப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலுக்கு எல்லோரும் தயாராக இருந்த நிலையில், தேர்தலை அண்மித்து இந்நூல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மக்கள் செல்வாக்கை இழந்திருந்ததுடன், தனியாக போட்டியிட்டு வெற்றி பெறும் நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியும் இருக்கவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது என்ற கோஷத்தின் கீழ் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், கலைஞர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் லிபரல் கருத்துக்களை கொண்டவர்களும் ஒன்றிணைந்து நடத்திய ஜனநாயகம் சம்பந்தமான உரையாடல்கள் முன்னணிக்கு வந்ததும் இந்த கால கட்டத்தில்தான். மோசமான நிலையிலிருந்த முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு கும்பலின் ஆட்சிக்குப் பதிலாக இன்னொரு முதலாளித்துவ கும்பலிடம் அதிகாரம் மாற்றப்படும் என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். லிபரல் புத்திஜீவிகள் எந்த புரிதலுமின்றி முகத்தை மாத்திரம் மாற்றும் இந்த கொடூர சமூக பொருளாதார முறைக்கு புத்துயிரளிப்பதற்கு அந்த திட்டத்தை சுற்றி அணிதிரண்டிருந்ததையும் நாம் அறிந்திருந்தோம். ராஜபக்ஷ ஆட்சியை தூக்கி எறியும் நோக்கத்தில் இருந்த மக்கள் சக்திகளுக்கும் இறுதியில் கிடைக்கப்போவது ஏமாற்றம் மட்டுமே என நாங்கள் நம்பினோம்.

ராஜபக்ஷ ஆட்சி தொடர்பிலான மக்கள் எதிர்ப்பு இரு முன்னணிகளில் உருவாகியிருந்தது. ஓன்று, அந்த ஆட்சியின் நவ தாராளமய பொருளாதார கொள்கைக்கு எதிரானது. மற்றது ஜனநாயத்திற்கு முரணான சர்வாதிகாரத்திற்கு எதிரானதாகும்.

தனியார் துறை ஊழியர்களின் சமூக பாதுகாப்பு சேவைகள் வெட்டப்படும் நவ தாராளமய கொள்கையை எதிர்த்து கட்டுநாயக தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின்போது, போலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரொஷான் சானக என்ற இளம் தொழிலாளி கொல்லப்பட்டதுடன் பொருளாதார உரிமைகள் சம்பந்தமான கோஷமும், ஜனநாயகம் சம்பந்தமான கோஷமும் ஒன்றிணைந்தது. தமது தொழிலுக்கான சமூக நலன்புரிகளை கேட்டு சிலாபம் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தை அடக்குவதற்கு பொலிஸார் சுட்டதில் அந்தோனி என்ற மீனவர் கொல்லப்பட்டமையினாலும், கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் நவ தாராளமய கொள்கைக்கு எதிராக மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தின்போது சானக மற்றும் சிசித ஆகிய மாணவர் தலைவர்கள் இரகசியமான முறையில் கொல்லப்பட்டமையினாலும், முதலீடுகளை வரவழைத்துக் கொள்வதற்காக சூழலையும் மனித வாழ்வையும் நாசமாக்கும் நவ தாராளமய பொருளாதார கொள்கைக்கு எதிராக கம்பஹா மாவட்ட ரத்துபஸ்வல மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் சுட்டதில் மூன்று கிராமவாசிகள் கொல்லப்பட்டமையினாலும் அந்த கோஷங்கள் ஒன்றிணைந்தன. தவிரவும், சுற்றுலாத் துறையை விருத்தி செய்யும் நோக்கத்திற்காக தமது வீடுகளிலிருந்து விரட்டப்படுவதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த வனாதமுல்ல மற்றும் தெமட்டகொட மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

பொருளாதார கொள்கைக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் ராஜபக்ஷ ஆட்சிக்கெதிராக மக்கள் போராடத் தொடங்கினர். காணாமலாக்கல், கடத்தல், அரசியல் கைதிகள், காணிக் கொள்ளை, ஊடக அடக்குமுறை, அரசியல் கொலைகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் பரவலாக ஆர்ப்பாட்டம் செய்தனர். ஐக்கிய தேசியக் கட்சி முதற்கொண்டு எதிர்க்கட்சியன் முயற்சியானது இந்த மக்கள் போராட்டத்தை பயன்படுத்தி அதிகாரத்திற்கு வருவதேயன்றி அந்த எதிர்ப்பிற்கு காரணமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இருக்கவில்லை. இது குறித்து தேவையோ, ஆற்றலோ, தூரநோக்கோ அவர்களுக்கு இருக்கவில்லை.

லிபரல் ஜனநாயகவாத கோஷங்களால் மக்களுக்கு வெற்றி கிட்டாது என்பதையும், அதற்குப் பதிலாக அடிமட்ட வர்க்கங்களுக்கு ஜனநாயத்தை பெற்றுக் கொடுக்க போராட வேண்டும் என்பதையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உணர்த்துவதற்காகவும், மறுபுறம், மறக்கடிக்கப்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை, தேசியப் பிரச்சினை மற்றும் ஏகாதிபத்தியம் போன்ற தலைப்புகளை அரங்கிற்கு கொண்டுவருவதற்காகவுமே நாம் இந்த நூலை தொகுத்துள்ளோம். அரச அமைப்பு, பொருளாதாரம், தேசியப் பிரச்சினை, வெளியுறவுக் கொள்கை ஆகிய தலைப்புகளை இதில் உள்ளடக்கியது அதனால்தான். ராஜபக்ஷ ஆட்சியின் ஒடுக்குமுறையிலிருந்து மீளும் மார்க்கம் முகத்தை மாற்றுவதல்ல ஒட்டுமொத்த முறையிலும் மாற்றத்தை கொண்டுவருவதுதான் என்பதை சமூகத்தில் உணர்த்துவதற்காக இதன் மூலம் முயற்சி செய்யப்படுகிறது.

அதேபோன்று, ஜனநாயகம், பொருளாதாரம், தேசியப் பிரச்சினை, ஏகாதிபத்தியம் ஆகிய துறைகளில் தோன்றியுள்ள நெருக்கடிக்கு தீர்வு இடதுசாரிய மாற்றீடு மாத்திரமே என்பதுவும் இதனூடு விளக்கப்படுகிறது.

ஜனவரி 8ம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்பு மைத்திரிபால் சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் ஜனநாயக எதிர்ப்பார்புகள் அனைத்தையும் அரசியலமைப்பு திருத்தத்திற்குள் சுருக்கிவிட்டு, அந்த அரசியலமைப்பு திருத்தத்தை கூட வாக்குறுதியளித்தவாறு நிறைவேற்றாது நீர்த்துப்போக செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் அதிகாரத்தை சட்டவாக்கச் சபையிடம் ஒப்படைக்க ஆலோசிக்கப்பட்டது.

ஆனால், அதன் மூலம் ஜனநாயகம் நிலைநாட்டப்படாது என்பதுடன், அது போதுமானதாக இல்லை என்பதே எமது நிலைப்பாடாக இருந்தது. ஆனால், வாக்குறுதியளித்தவற்றை கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. ஜனாதிபதி முறையை ஒழித்துக்கட்டும் வாக்குறுதி அதன் தீர்க்கமான அதிகாரத்தை நீக்கும் ஆலோசனையாக குறுகலாகியதுடன், பின்னர் 19வது அரசியல் திருத்தத்தின்போது அந்த அதிகாரங்களில் முக்கியமானவற்றின் மீது கைவைக்காமல் பாரத்துக் கொள்ளப்பட்டது. தவிரவும், ஒரு தனிக்கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை உறுதி செய்யும் புதிய தேர்தல் முறை 20வது அரசியலமைப்பு திருத்தத்தில் தயாரிக்கப்படுவதனால், ஜனாதிபதிக்கான அதிகாரமும், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலமும் கொண்ட அதிகார வர்க்கத்தின் அதிகாரம் மேலும் மேலும் அதிகரிக்கக் கூடும். இதன்படி, ஜனநாயகம் சம்பந்தமான வாக்குறுதி புறந்தள்ளப்பட்டு ஆள்பவர்களின் அதிகாரம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. நவ தாராளமய பாதையிலேயே யணிக்கும் இந்த அரசாங்கம் மக்களின் பொருளாதார கோஷங்களை வெறுமனே ஊழல் எதிர்ப்பிற்குள் முடக்கும் வழியை கடைபிடிக்கின்றது.

ஆனால், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் கடக்காத நிலையில், மக்கள் மத்தியிலிருந்து தமது உண்மையான பிரச்சினைகளுக்கான போராட்டங்கள் தலை தூக்கிக் கொண்டிருக்கின்றன. அவை, யாழ்ப்பாணம் மற்றும் கஹவத்தை பிரதேசங்களில் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான போராட்டம், கொலன்னாவை குப்பை கொட்டுதலுக்கு எதிரான போராட்டம், கல்வி தனியார்மயத்திற்கு எதிரான மாணவர் போராட்டம், விவசாயத்துறை தனியார்மயத்திற்கு எதிரான தம்புள்ளை விவசாயிகளின் போராட்டம், சுண்ணாகம் - காலி ஹபராதுவ - குருநாகல் கொபைகனே சூழல் அழிப்புக்கெதிரான போராட்டம் என்ற வகையில் வெடித்துக் கொண்டிருக்கின்றது.

தவிரவும், அரசியல் கைதிகள், காணாமலானவர்கள், அடக்குமறை காரணமாக நாடு கடந்தவர்கள், அரசியல் படுகொலைகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் போராட்டங்களும் இவற்றில் அடங்கும்.

இந்நிலையில் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு உள்ள மாற்றீடு சம்பந்தமான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. அரசியலமைப்பு திருத்தங்களுக்குள் வரையறுக்கப்பட்டுள்ள ஜனநாயம் சம்பந்தமா பிரச்சினையை அரங்கிற்கு கொண்டுவருதல், மறக்கடிக்க முயலும் பொருளாதாரப்
பிரச்சினையை மீண்டும் அரங்கிற்கு கொண்டுவருதல் போன்றவை அத்தியாவசிய காரணிகளாக உள்ளன.

"இடதுசாரிய நடவடிக்கை" நூலின் தமிழ் பிரதி இப்படியான சந்தர்ப்பத்தில்தான் வெளியிடப்படுகிறது. இந்த இடதுசாரிய மாற்றீடு சம்பந்தமான கருத்தாடலை முன்னெடுக்க வேண்டிய தருணம் இதுதான் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இந்நூல் தமிழ் மொழி பேசும் பாட்டாளி வர்க்கம் முதற்கொண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் அக்கருத்தாடலை வளர்க்க ஏதுவாக இருக்குமேயானால், இதற்காக பாடுபட்ட அனைவரினதும் எதிர்ப்பார்ப்பு நிறைவேறியதாக இருக்கும்.

முன்னிலை சோஷலிஸக் கட்சி
2015 ஜூன்

இந்த நூலை முழுமையாக PDF வடிவத்தில் தரவிரக்கம் செய்து வாசிக்க இங்கே அழுத்தவும்