Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

இடதுசாரிய மாற்றீடு!

ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் மீட்பர்கள் என கூறிக் கொள்ளும் பலர் தேர்தலுக்கு முன்வருகிறார்கள். ஒரு புறம் மஹிந்த ராஜபக்ஷ, இன்னொரு புறம் மைத்திரிபால சிறிசேன. இதற்கிடையில் முன்னிலை சோஷலிஸக் கட்சி, நவ சமசமாஜக் கட்சி, இலங்கை சோஷலிஸக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளைக் கொண்ட இடதுசாரிய முன்னணியின் பொது வேட்பாளராக தோழர் துமிந்த நாகமுவ இடதுசாரிய மாற்றீடுக்காக போட்டியிட முன்வந்துள்ளார்.

இடதுசாரிய மாற்றீடு என்பது என்ன?

நாங்கள் பல வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சுதந்திரக் கட்சி முதலாக கூட்டணிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க மாற்றி மாற்றி வாக்களித்தோம். பெயர் வேறானாலும், நிறம் வேறானாலும் இந்த இரண்டுக்குமே இருப்பது ஒரே கொள்கை. அது,

• எல்லாவற்றையும் விற்கும், விலைபேசும், எங்களை சுரண்டும் நவதாராளமய முதலாளித்துவம்.

• அதேபோன்று நவதாராளமய முதலாளித்துவத்தை நடாத்திச் செல்வதற்காக இனவாதத்தையும், மதவாதத்தையும் பாவித்து எங்களை ஏமாற்றுவது.

இரு கட்சிகளில் எந்தக் கட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் எங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் தீரப்போவது இல்லை. இடதுசாரிய மாற்றீடு என்பது, முகத்தை மாற்றுவதற்கு பதிலாக எமது வாழ்க்கையை மாற்றியமைக்கும் அரசியல்.

உண்மையிலேயே இந்த இரண்டும் ஒன்று தானா?

• இந்த இரண்டு வலதுசாரிய முன்னணிகளினதும் பேச்சும் ஒன்றுதான். நபர்களும் ஒன்றுதான்.

• உதாரணமாக, இப்போது மஹிந்தவிற்கு ஆதரவளிக்கும் அநேகமானோர் முந்தைய தேர்தல்களில் UNP யில் போட்டியிட்டவர்கள். மைத்திரி முன்பு அந்தப் பக்கம் இருந்தவர். இப்போது பொது என்று சொல்லப்படும் வேட்பாளர் உட்பட எதிர்கட்சியில் இருக்கும் அநேகர் அரசாங்கத்திலிருந்து தாவியவர்கள். இந்த இரண்டினதும் கொள்கை மட்டுமல்ல முகமும் ஒன்றுதான். நாங்கள் எப்போதுமே இந்தப் பொய்களுக்கு ஏமாந்து, இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கினோம். மீண்டும் மிளகாய் கொடுத்து இஞ்சி வாங்கினோம்.

• மேலும் ஏமாற முடியாது. அதற்கு பதிலாக மாற்றமான கொள்கையை வெல்ல வைக்க வேண்டும்.

என்ன அந்த மாற்றுக் கொள்கை?

நாங்கள் சில உதாரணங்களை பார்ப்போம்.

• இப்போது அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பார்த்திருக்கும் முதலாளித்துவ வர்க்க குழுக்கள் என்ன சொல்கின்றன? இந்தச் சர்வாதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறையை அப்படியே தொடருவதாக ஒரு குழு சொல்லும் போது, நாடாளுமன்றத்திடம் அதிகாரத்தை ஒப்படைத்து பிரதமரை உச்சிக்கு கொண்டு வருவதாக அடுத்த குழு சொல்கிறது. அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்தாலும், பிரதமரின் கையில் இருந்தாலும் அமைச்சரவையிடம் இருந்தாலும் எமது வாழ்க்கையின் தலைவிதி மாறப்;போவதில்லை. என்றாலும்; 1948 இலிருந்து பல்வேறுபட்ட அரசியமைப்புகள் பற்றிய அனுபவம் எங்களுக்கு உண்டு.

• அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் ஆட்சியில் பங்கேற்கும், அரச அதிகாரம் மக்களால் நடைமுறைப்படுத்தும் முறையொன்றை இடதுசாரிகள் என்ற வகையில் நாங்கள் முன்வைக்கின்றோம்.

• பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால், முதலாளித்துவக் கட்சிகளும், சிறு முதலாளித்துவ கட்சிகளும் தேசிய உற்பத்தியை அதிகரிக்கும் முறை பற்றி பேசுகிறார்கள். அது சரியாக செல்வந்தர்களின் தட்டில் கூடுதலாக உணவு பகிர்ந்தால், உழைப்பாளிக்கு கிடைக்கும் எச்சில் சோறு கூடுதலாக இருக்கும் என்று சொல்வதைப் போன்;றதாகும்.

• இடதுசாரியம் முன்வைப்பது பொருளாதாரத்தில் பங்கேற்கும், உழைப்பை சிந்தும் பொது மக்களுக்கு நன்மைபயக்கும் பொருளாதாரம். மக்களுக்கு எச்சிலை கொடுக்கும் பொருளாதாரமல்ல. முரண்பாடுகளை நீக்கக்கூடிய நீதியான பொருளாதாரக் கொள்கையை இடதுசாரியம் முன்வைக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு இடதுசாரியம் பொருந்துமா?

ஜனாதிபதித் தேர்தலுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்கால நிலைத்தலுக்கும் இடதுசாரியம் பொருந்தும். வரலாற்றில் எப்போதும் சமூகத்திற்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததும், சிறந்தவற்றை முன்வைத்ததும் இடதுசாரியம் தான். ஏனையவர்கள் முகத்தை மாற்றுவதைப் பற்றி பேசுகிறார்கள். மக்களை துன்பத்திற்குள்ளாக்கும் சமூகமுறையில் மாற்றத்தைக் கொண்டுவரும் வேலைத்திட்டத்தை இடதுசாரியம் முன்வைக்கிறது.

• நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தமது அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாhதிருக்கின்றனர். வாழ்க்கைச் செலவு உயரந்துள்ளது, வரிச்சுமை அதிகரித்துள்ளது. கையில் கிடைக்கும் சில்லறைகளால் வாழ முடியாது.

• மேலும் பெரும்பாலானோர் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொள்ள படாதபாடு படுகின்றனர். நாள்பூராவும் சாப்பாட்டுக்காக உழைக்கின்றனர். இதனால் வாழ்க்கை எஞ்சுவதில்லை. ஓய்வு, பொழுதுபோக்கு, சமூக செயற்பாடுகள், மனித உறவுகள் அனைத்தும் இல்லாமலாகின்றன.

• மக்கள் இனரீதியாகவும், மதரீதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் மக்கள் இன ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இனவாதம் காரணமாக நடந்த முப்பது வருட யுத்தம் சமூகத்திற்கு பேரழிவை தந்தது. அந்த கசப்பான நினைவுகள் மறைவதற்கு முன் மீண்டும் இனவாத, மதவாத தீப்பொறிகள் பறக்கத் தொடங்கியுள்ளன.

• மனிதர்கள் மாத்திரமல்ல, இந்தப் போலி அபிவிருத்தியினால் சூழலும் அழிந்து விட்டது. ரத்துபஸ்வல, துன்னான அனுபவங்களும், வடமத்திய பிரதேச சிறுநீரக நோய்த் தொற்றுகளும் அந்த அழிவுகள் எம்மை பாதிக்கும் விதம் குறித்து சுட்டிக்காட்டுகின்றன.

• இந்த அழுத்தம் காரணமாக தற்கொலைகள், மனநோய்கள், குற்றச்செயல்கள், போதைப்பொருள் பாவனை போன்றவை அதிகரித்துள்ளன. இவற்றில் எந்தப் பிரச்சினைக்கும் முதலாளித்துவக் கட்சிகளிடம் தீர்வு கிடையாது. சரியான தீர்வு இடதுசாரியத்திடமே உள்ளது. அதன் கொள்கைகளிலேயே மாத்திரமே உள்ளது.

தற்போதைய அரசாங்கத்தை மாற்றுவது ஆறுதலாகாதா?

'மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதே முதற்காரியமாக இருக்க வேண்டும். முதலில் ஜனநாயகத்தை நிலை நாட்டுவோம்" என அதிகாரத்தைப் பற்றி மாத்திரம் சிந்திப்பவர்கள் ஒரு வாதத்தை வைத்துள்ளார்கள். சர்வாதிகாரம் என்பது எவருடையதும் தனிவிருப்பமல்ல. நவதாராளமய முதலாளித்துவத்தின் விளைவு. இவர்களில் எவருக்காவது ஜனநாயக உரிமைகளை பாதுகாத்ததற்கான வரலாறும் கிடையாது.

ஆகவே, ஆறுதல் என்பது, பொதியை சுமந்து செல்கையில் ஒரு பக்கத் தோள் நோகும்போது, மற்றப்பக்க தோளுக்கு சுமையை மாற்றுவது போன்ற ஆறுதலாகும். சிறிதுநேரத்தில் அந்தத் தோளும் நோகும். மற்றவர்களுக்காக பொதி சுமந்து தோளுக்கு தோள் மாற்றும் அரசியல் போதும். அதற்குப் பதிலாக எங்கள் மீது சுமத்தப்பட்ட பொதியை இலகுவாக்கும் அரசியலுக்கு செல்ல வேண்டும். மஹிந்தவை மாத்திரமல்ல, மஹிந்த நடாத்திச் செல்லும் நவதாராளமய முறையையும் மாற்ற வேண்டும். அதற்காக இடதுசாரியத்தின் பக்கம் திரும்ப வேண்டும். மாற்றீடு இடதுசாரியத்திடம் மாத்திரமே உள்ளது.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரியத்தை வெல்ல வைக்க வேண்டியது ஏன்?

எமது வாழ்க்கைக்காக இதை நாம் செய்ய வேண்டும். எமது வருங்கால தலைமுறைக்காக, வேறொருவருக்கு பதிலாக துமிந்த நாகமுவவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற மாதிரியான எளிய ஆலோசனையாக அல்ல. இதுவரை மற்றவர்களுக்காக புள்ளடியிட்ட, மற்றவர்களின் இலாபத்திற்காக பாடுபட்ட, மற்றவர்களுக்காக வாழ்க்கையை நாசமாக்கிய நாட்டின் பெரும்பான்மை மக்கள், தமக்காக செய்யும் அரசியலுக்கான முதற்படியாகும். உழைக்கும் வர்க்கம், ஒடுக்கப்பட்ட வர்க்கம் தமக்காக செய்யும் தமது வர்க்க அரசியலாகும். ஜனாதிபதித் தேர்தலிலிருந்து அந்த அரசியலை நாங்கள் ஆரம்பிப்போம். தேர்தல்களுக்கு மாத்திரம் இதனை வரையறுக்காமல் அதனை மேலும் வளரச் செய்வோம். அது குறித்து சிந்திப்போம். ஐக்கியப்படுவோம். பேசுவோம். செயற்படுவோம்.

• சர்வாதிகாரி மஹிந்தவை தோற்கடிப்போம் - இன்னொரு சர்வாதிகாரிக்கு இடமளியோம்!

• பொய்யான அரசியலமைப்பு திருத்தம் வேண்டாம்! மக்கள் அரசியலமைப்பு நிர்ணய சபையைக் கூட்டு!

• நவதாராளமய முதலாளித்துவத்தை தோற்கடிப்போம்!

• தேசிய ஒடுக்குமுறைக்கும் இனவாதங்களுக்கும் எதிராக போராடுவோம்!

இடதுசாரிய முன்னணி

6/12/2014