Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் கூட்டமைப்பின் தொடரும் காட்டிக்கொடுப்புகள்!

வெண்நுரை அலைகள் கரையொதுங்கும் முல்லைக்கடலின் கரைகளில் உறைந்து கல்லாகி உடல்கள் மிதந்தன. ஆதரவு தேடி, அபயம் தேடி தாயின் கை பற்றி பசித்த வயிறுடன் பதுங்குகுழிகளில் தூக்கம் தொலைத்த குழந்தைகளின் கண்கள் மட்டுமே அந்த இருளில் ஒளிரும் ஒரே வெளிச்சமா இருந்தது. வெளியே மகிந்த ராஜபக்சவின் பேரினவாதம் வீசிய குண்டுகளில் தமிழர்களின் வாழ்வும், வளமும் வெடித்துப் பறந்தன.

சரத் பொன்சேகாவின் இராணுவம் கதியிழந்த மனிதர்களை கொலை செய்து காலில் போட்டு மிதித்தது. மைத்திரி சிறிசேனா, பதில் பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு தேடி ஓடிய மனிதர்களை பயத்தில் உயிர் உறைந்து போன மனிதர்களை கொத்துக்குண்டுகள் வீசிக் கொன்றார்.

தமிழ் மக்களின் இனப்படுகொலை 2009 வைகாசியிலே நடந்தது. 26.01.2010 அன்று நடந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களை கொல்ல ஆணையிட்ட மகிந்த ராஜபக்சவும் அதை நடைமுறைப்படுத்திய சரத் பொன்சேகாவும் போட்டியிட்டனர். கொல்லப்பட்ட மக்களின் குருதி காய்ந்திருக்கவில்லை. தப்பிப்பிழைத்தவர்களின் காயங்கள் ஆறியிருக்கவில்லை, ஆயிரக்கணக்கானவர்கள் முள்வேலிச்சிறை முகாமிற்குள்
தடுக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அந்த தேர்தலில் தமிழ்க்கூட்டமைப்பு இனப்படுகொலையாளிகளில் ஒருவரான சரத் பொன்சேகாவை ஆதரித்து தமிழ் மக்களின் மேல் ஏறி மிதித்தது.

யுத்தத்தின் இறுதிநாட்களில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தது மைத்திரியே என்று மற்றொரு கொலையாளி சந்திரிகா குமாரதுங்கா பெருமை பொங்க சாட்சியம் அளித்தார். சிங்கள இனவெறியர்களின் அமைப்பான கெல உருமய மைத்திரியின் கூட்டணியில் இருந்தது. எழுபத்தேழிலும், எண்பத்து மூன்றிலும் தமிழ்மக்களின் மேல் இனக்கலவரங்களை திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்ட அய்க்கிய தேசியக் கட்சி மைத்திரியுடன் இருந்தது. வன்னியில் தமிழ்மக்களின் நிலங்களை அடாவடியாக பறிக்கும் ரிசாத் பதியுதீன் போன்ற சில்லறைக் கள்ளர்கள் இருந்தார்கள். ஆனாலும் தமிழ் கூட்டமைப்பு இப்போது முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் பாதுகாப்பு அமைச்சராக இருந்து கொத்துக் குண்டுகளை வீசி தமிழ்மக்களை கொன்ற மைத்திரி சிறிசேனாவை ஆதரித்தது.

இப்போது மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, சோபித தேரர், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரவுப் ஹக்கீம், ரிசாத் பதுயுதீன், சரத் பொன்சேகா, பாட்லி சம்பிக்க ரணவக்க போன்ற மகிந்த ராஜ்பக்சவுடன் கூடிக் கொலை செய்தவர்களுடன், கொள்ளை அடித்தவர்களுடன், இனவெறியர்களுடன் தமிழ்க்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சேர்ந்து 'தேசிய நிறைவேற்று சபை" என்ற அமைப்பின் மூலம் அரசியல் அமைப்பு திருத்தங்கள், கடந்த அரசின் ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகள், கொழும்பு மாநகரிலும், வட-கிழக்கு உட்பட நாடு முழுக்க நடைபெற்ற காணிக்கொள்ளைகள் என்பன தொடர்பாக ஆராயப் போகிறாராம்.

அரசியல் அமைப்பு திருத்தங்கள் பற்றி ரணில் விக்கிரமசிங்கா சம்பந்தருக்கு தெளிவுபடுத்தலாம். ஜெயவர்த்தனாவுடன் சேர்ந்து பயங்கரவாத தடைச்சட்டங்கள் என்று ஒவ்வொரு தமிழரையும் கேட்டுக் கேள்வி இன்றி கொலை செய்யவும், கைது செய்யவும் சட்டம் இயற்றியதை ஞாபகப்படுத்தலாம். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க செம்மணிப்புதைகுழிகள், யாழ்குடா நாட்டைக் கைப்பற்றிய போது கொன்ற அப்பாவித் தமிழ்மக்கள், ஓயாத அலைகளின் போது கொன்ற மக்களின் ஒலங்கள் என்பவை மனித உரிமை மீறல்களா இல்லை என்று ஆராயலாம். முன்பு தமிழ் சிங்கள தலைமைகள் செய்து கொண்ட ஒப்பந்தங்களை எவ்வாறு இனவெறி கொண்ட பிக்குகளும், பேரினவாத அமைப்புகளும் கிழித்தெறிய வைத்தார்கள் என்பதை மறுவாசிப்பு செய்யலாம்.

மைத்திரிபால சிறிசேனா, ரவுப் ஹக்கீம், ரிசாத் பதுயுதீன் போன்றோர் பத்து வருடமாக மகிந்தாவுடன் இருந்து ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள் என்பவற்றை செய்து விட்டு கடைசிநாட்களில் உத்தமபுத்திரர்களாக மாறுவது எப்படி என்பதை சம்பந்தருக்கு விளக்கிச் சொல்லுவார்கள். இந்தியா, மேற்கு நாடுகள் போன்ற மலைவிழுங்கி மகாதேவன்களுடன் டீல் வைத்திருக்கும் தங்களிற்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் என்று சம்பந்தன் பதிலுக்கு எடுத்து விடலாம்.

மக்களை இப்படி எவ்வளவு காலத்திற்கு இவர்கள் ஏமாற்றிக் கொண்டு இருக்கப் போகிறார்கள். வடமாகாண சபையின் ஆளுனராக பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மகிந்த ராஜபக்சாவின் இனப்படுகொலைகளை அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குறித்த கூட்டங்களின் போது நியாயப்படுத்தி பேசியவர், இனப்படுகொலையாளி மகிந்த தமிழ்மக்களைக் கொன்றது யார் என்று தனக்கு தெரியாதாம் என்று கண்டுபிடிப்பதற்காக அமைத்த 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவில்" ஒரு உறுப்பினராக இருந்து தமிழ்மக்களின் வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் அவலத்தை, தாங்கொணாக் கொடுமையை செய்தவர்களை தப்பிக்க செய்தவர்.

இப்படிப்பட்ட ஒருவரின் நியமனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. அல்லது எதிர்க்க முடியாத நிலையில் இருக்கிறது. இவர்கள் தானா கொல்லப்பட்ட தமிழ்மக்களின் ம்ரணங்களிற்கு நீதி கேட்டு போராடப் போகிறார்கள்?. இவர்கள் தானா தமிழ் மக்களின் பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டுத் தரப் போகிறார்கள்?. இவர்கள் தானா பேரினவாதிகளால் பாலியல்வன்முறை செய்யப்பட்ட நம் பெண்களின் கண்ணீரை துடைக்கப் போகிறார்கள்?. இவர்கள் தானா தாய், தந்தையரை இழந்து நடுத்தெருவில் நிற்கும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பொறுப்பு சொல்லப் போகிறார்கள்?.

பொன்னம்பலம் அருணாசலம், பொன்னம்பலம் ராமநாதன், கணபதிப்பிள்ளை காங்கேசர் பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் என்று அத்தனை சந்தர்ப்பவாத, வலதுசாரி தமிழ் தலைமைகளும் பேரினவாத சிங்களத்தலைமைகளும் இலங்கைத் தமிழ் மக்களை ஏமாற்ற செய்த சதித்திட்டங்கள் தான் இந்த ஒப்பந்தங்கள். பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஒப்பந்தம், டட்லி சேனநாயக்கா-செல்வநாயகம் என்பன என்றுமே நிறைவேற்றப்படவில்லை. சிங்களப் பேரினவாதிகளால் அவை காற்றிலே கிழித்து வீசப்பட்டன. இவை எல்லாவற்றையும் மறைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களைக் கொன்றவர்களிற்கே, தமிழ்மக்களின் உரிமைகளை காலில் போட்டு மிதித்தவர்களிற்கே தமிழ்மக்களை வாக்கு போடச் சொன்னது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களின் விரோதிகளை, தமிழ் மக்களின் வாழ்வை பறித்தவர்களை ஆதரிப்பதன் மூலம், நம்பச் சொல்வதன் மூலம் தமிழ் மக்களின் மேல் நடத்தப்பட்ட கொடுமைகளை மறந்து போகச் சொல்கிறது. கடந்து போகச் சொல்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ்மக்களின் உரிமைகளிற்கான அமைப்பல்ல இந்தியாவும், மேற்கு நாடுகளும் சொல்வதற்கு தலையாட்டும் பொம்மைகள் என்பதை மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறது.

மைத்திரிபால சிறிசேனா-ரணில் விக்கிரமசிங்கா ஆட்சியில் இந்திய, மேற்கு நாடுகள் தடையின்றி கொள்ளையடிப்பதற்காக தமிழ்மக்களின் வாழ்வை அடகு வைக்கிறது. தமிழ்மக்கள் தங்களின் பிரச்சனைகளிற்காக போராடக் கூடாது என்பதற்காக 'தேசிய நிறைவேற்று சபை" எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கும் என்று கண்கட்டி வித்தை காட்டுகிறார்கள்.

சந்தர்ப்பவாத, பிற்போக்கு தலைமைகள் என்றும் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கப் போவதில்லை. அவை தங்களின் நலன்களிற்காகவே தமிழ் மக்களையும்,
சிங்கள மக்களையும் மோத விடுகிறார்கள். சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதத்தினை நிராகரிக்கும் போக்கு ஆரம்பித்திருக்கும் அறிகுறிகள் தென்பட்ட போதிலும், தமிழ் மக்கள் குறுந்தேசியவாத பிற்போக்கு தமிழ் தலைமைகளிடமிருந்து தாங்கள் தங்களை விடுவித்துக் கொள்ளும் நடவடிக்கைகள் காணப்படவில்லை.

தங்களிற்கு தேவைப்படும் போது எல்லாவற்றையும் மறந்து கொலையாளிகளையே ஆதரிக்க சொல்கிறார்கள். இவர்களின் ஏமாற்றுகளிற்கு எதிராக ஒடுக்கப்படும் இலங்கை மக்கள் ஒன்று சேரவேண்டும். ஒடுக்கப்படும் மக்கள் ஒன்று சேருவதற்கு தடையாக இருக்கும் இனவாதம், இந்த கொள்ளையர்கள் மக்களைப் பிரிப்பதற்கு கருவியாக வைத்திருக்கும் இனவாதம் களையப்பட வேண்டும். மனித மனங்களிற்கு இடை நடுவில் ஒளி விடும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த உலகிற்காக குரல் கொடுப்போம்.