Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் பேசும் மக்களின் தேசியப் பிரச்சினை: நாம் என்ன செய்ய வேண்டும்?

இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் முடிந்து, யு.என்.பி தலைமையிலான கூட்டின் வேட்பாளர் மைத்ரி சிறிசேன வெற்றியடைந்துள்ளர். மைத்ரி வடக்குக் கிழக்கு மற்றும் மலையக தமிழ்மக்கள் மற்றும் முஸ்லீம் மக்களின் அமோக ஆதரவினாலேயே வெற்றியடைந்துள்ளார். மைத்ரிக்கு தமிழ் பேசும் மக்கள் (வடக்குக்கிழக்கு மற்றும் முஸ்லீம் மக்கள்) பெருமளவில் வாக்களித்துள்ளமை, மஹிந்தவின் ஆட்சியை கலைப்பதற்காக மட்டுமல்ல - அவர்கள் மீதான இனவாத ஒடுக்குமுறை மற்றும் தமக்கான அரசியல் தீர்வை எதிர்பார்த்தே!

ஆனால், தேர்தல் காலத்தில் கூட மைத்திரி குழாம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைக்கான தீர்வுகளைப் பற்றிக்கதைக்க மறுத்தது. இப்பின்னணியில், இன்றுள்ள மைத்ரி தலைமையிலான அரசு தேசியப் பிரச்சனைக்கு, மலையக மக்களின் உரிமைகளுக்கு சரியான தீர்வை வழங்கும் என்பதில் எமக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை. இக்கட்டுரையின் நோக்கமானது இடதுசாரிகளான நாம் எந்த மாதிரியான தீர்வை முன்வைக்கின்றோம் என்பதைப் பதிவு செய்வதே. பல பத்து வருடங்களாக இலங்கையில் எரிந்து கொண்டிருக்கும் தேசியப் பிரச்சினைக்கான தீர்வைப் பற்றி ஒரு அரைப்பத்திரிகைப் பக்கத்தில் விரிவாகக் கூற முடியாவிட்டாலும், இவ்விடையம் பற்றி ஓரளவுக்கேனும் புரிதலை ஏற்படுத்துவதற்கும் - தொடர்ச்சியான தேடுதலையும் வாசிப்பையும் ஊக்குவிப்பதற்கும் இந்தப் பதிவு பயன்படும் என்பது எமது எதிர்பார்ப்பு.

யுத்த "வெற்றியை" உரிமை கோரும் இனவாத அரசியல்:

2009 வைகாசி நடுப்பகுதியில், புலிகள் இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம், பாரிய மனித அவலங்களுடனும், கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட மனிதர்களின் வலிமிகு ஓலங்களுடன், மஹிந்த தலைமையிலான ஆயுதப்படையினால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. 2009 இல் நடந்து முடிந்த யுத்த "வெற்றியை" முன்னிறுத்திய, பேரினவாத, இனவாத அரசியலே இன்றுவரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போர் முடிந்து சில மாதங்களிலேயே நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒருபக்கம் யுத்தத்தை நடத்திய அரசுத் தலைவர் மஹிந்தவும், அவருக்கு எதிரான வேட்பாளராக, போரைத் தலைமை தாங்கி நிறைவுக்குக் கொண்டு வந்த தளபதி பொன்சேகாவும் போட்டியிட்டனர்.

இருவருக்கும் இடையிலான அதிகாரப் போட்டி, உண்மையிலேயே யுத்த "வெற்றியை" யார் உரிமை கொண்டாடுவதென்பதற்கான போட்டியாகவே அமைந்தது. அத்தேர்தலில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பிரதிநிதிகளாகத் தம்மைக் கூறிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடக்கம், முஸ்லீம் கட்சிகளும் போர்க்கனவான்களில் ஏதாவது ஒருவரை ஆதரித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் பொன்சேகாவை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆதரித்தது.

தற்போது 2015 ஜனவரியில் நடைபெற்று முடிந்த தேர்தல் பிரச்சாரங்கள் கூட மேற்படி போரின் வெற்றியை உரிமை கோரும் போட்டியாக நடத்தப்படுகிறது. மஹிந்த பக்கத்தாலும், அவருக்கு எதிராக நிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் முன்னாள் ஜெனரல் பொன்சேகாவாலும் விகிதாசார அடிப்படையில் யுத்த வெற்றிக்கான உரிமை கோரப்பட்டது.

2014 மார்கழி மாதத்தின் முதல் வாரத்தில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மாத்தறையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கீழ்க் கண்டவாறு உரையாற்றினார்.

"விடுதலைப் புலிகளுடனான போரின் 75 சதவீதத்தை நானே வெற்றி கொண்டேன். இந்தப் போரை நடத்தியதும் அதில் வெற்றி கொண்டதும் சரத் பொன்சேகாவே. போர் வெற்றியின் 75 சதவீதமானவை எங்களது ஆகும். நாம் விட்டுவைத்த 25 சதவீதத்தையே ராஜபக்ச அரசு வெற்றிகண்டது. இருப்பினும், யுத்தம் முடியும் போது, நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேனவே' என அவர் மேலும் தெரிவித்தார்.

இவர்கள் உரிமை கோரும் போர் அழிவுகள் நடைபெற்று ஆறு வருடங்களுக்கு மேலாகும் நிலையில் தமிழ் தேசியப்பிரச்சினைக்கு எந்தவிதத் தீர்வுகளும் காணப்படவில்லை. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் கூட இரு தரப்பும், தமிழ் தேசியப் பிரச்சினையை பேசப்படக் கூடாத விடயமாகவே கையாண்டனர். சில அரசியல் விடயங்களில் இருதரப்பும் அரசியல் முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும், தமிழ் பேசும் மக்களை ஒடுக்குவதில், கைச்சாத்திடப்படாத ஒப்பந்த உடன்பாட்டுடனேயே அரசியல் நடாத்துகின்றனர். இந்நிலையில் தமிழ் தேசிய இனம் மீதான ஒடுக்குமுறை வரலாறு காணாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

முஸ்லீம் மக்கள் நிலை:

இது ஒருபுறமிருக்க தமிழ்பேசும் சகோதர இனமான முஸ்லீம் மக்கள் மீதும் போர் முடிவுக்கு வந்த பின்னான காலத்தில் அரசினாலும், அதனால் இயக்கப்படும் இன-மதவாதக்குழுக்களினாலும் தொடர்ச்சியான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இவ் வன்முறை அரசியலின் உச்சக் கட்டமாக ஆனி மாதம் 2014இல் திட்டமிட்ட வகையில், அரச முக்கியஸ்தர்களின் ஆதரவுடன் பொது பல சேனாவால் பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் வாழும் முஸ்லீம் சகோதரர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டதுடன், முஸ்லீம்கள் மீது வன்முறையும் கொலைகளும் நிகழ்த்தப்பட்டது.

அந்நிலையில் கொழும்புக்கும் பொது பல சேனாவின் இன-மத வாதப்பயங்கரவாதம் பரவலாம் என்று மக்கள் அஞ்சிய நிலையில் இருந்தனர். எதிர்க்கட்சிகள், மற்றும் முஸ்லீம் மந்திரிகள் கூடப் பொது பல சேனாவின் கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் பயந்தனர். முஸ்லீம் சகோதரர்கள் மீதான இப்பயங்கரவாதம் நிகழ்த்தப்பட்டு இப்போது ஆறு மாதங்களுக்கு மேலாகியும், இப்படியான இன- மதவாதத் தாக்குதல்களைத் தவிர்க்க, அழிவுகளுக்கு ஈடுகட்ட எந்தவித நடவடிக்கைகளும் எவராலும் எடுக்கப்படவில்லை. அன்று முஸ்லீம் மக்களை பொது பல சேனா தாக்கியபோது - மஹிந்த ஆட்சியில் அதிகாரத்துடன் ஒட்டியிருந்த முஸ்லீம் மந்திரிகள் மவுனம் காத்தார்கள்.

இப்போ மைத்ரியின் புதிய அரசுடன் ஒட்டிக்கொண்டு மஹிந்த தான் மேற்படி தாக்குதலுக்கு காரணம். பொது பல சேனாவை வளர்த்து விட்டது அவர் தான் எனக் குற்றம் சாட்டுகின்றனர். இது எதை எமக்கு உணர்த்துகின்றதெனில், ஒடுக்கப்படும் இனங்களின் அரசியல் கட்சிகள் தமது சுயநல தேவைகளை மட்டுமே முன்னிறுத்தி, சந்தர்ப்பவாதமாக அரசியல் செய்கின்றன என்பதையே!

இந்தவகையில் ஒட்டுமொத்த ஆதிக்க சக்திகளின் கட்சிகள், தேசிய இனப்பிரச்சினையானது நாட்டின் பிரதான பிரச்சினையாக இருந்து வருவதை கவனத்தில் கொள்ளவில்லை. அதேவேளை மலையகத் தமிழ் மக்கள் உள்ளிட்ட தமிழ் தேசிய இனத்துக்கும், முஸ்லீம் மக்கள் ஈறாக ஏனைய சிறுபான்மையினங்களுக்கும் காணப்படும் பிரச்சினைகளை மேலெழுந்தவாரியான பிரச்சினைகள் போன்று பார்க்கும் தன்மையையே தற்போது ஆட்சிக்கு வந்துள்ள மைத்திரிபால சிறிசேனவிடமும், அவரைத் தாங்கி நிற்கும் கட்சிகளிடமும் காணப்படுகிறது.

அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் தமது வர்க்க உரிமைகளை வென்றுகொள்வதற்காக உண்மையாகவே ஒன்றிணைய வேண்டுமாயிருந்தால், அதன் இன்றியமையாத பகுதியாக முதலில் ஆதிக்க சக்திகளின் ஏகபோக அரசாங்கத்தினால் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும்- பேசப்படக் கூடாத விடயமாகவே கையாளப்படும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு சம உரிமைகளைப் வென்றெடுக்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

அதாவது இலங்கையில் பொருளாதார அடிப்படையில் ஏழைகளாக வாழும் அனைத்து இன மக்களின் வாழ்வை மேம்படுத்தும் விடுதலைப் போராட்டம் நடத்த வேண்டுமானால், அதற்கான முன் நிபந்தனைகளில் முக்கியமானது, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமைக்கான போராட்டமாகும்.

இந்த வகையில், இன்று இலங்கையில் புரையோடியுள்ள பேரினவாதம் மற்றும் அதன் விளைவாய் உருவாகியுள்ள தமிழ் குறுந்தேசியவாதத்தை எதிர்ப்பது, மற்றும் இன-மத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது உடனடியான தேவையாக உள்ளது. இன்றுள்ள அரசியற் சூழ்நிலைக்குள் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கான சம உரிமைகளைப் பெறப் போராடுதல் என்ற "குறுகிய" காலத் திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம், பெரும்பான்மையாக இலங்கையில் வாழும் சிங்கள மக்கள் தமது இனவாதச் சிந்தனையில் இருந்து விடுபட்டு, ஒடுக்கப்பட்ட சக தேசிய இனங்களின் நம்பிக்கையை - சகோதர வாஞ்சையை பெற்றுக் கொள்ள முடியும்.

அதேவேளை இக்குறுகியகாலத் திட்டத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கும் நோக்கில்- ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கான சம உரிமைப் போராட்டம் - தற்போதைய மைத்திரி அரசு போன்ற அரசுகளின் எலும்புத் துண்டுத் தீர்வுகளுடன் திருப்திப்படாது, மனித சமூகத்துக்குள் சமத்துவமின்மையை நிர்மாணித்ததும், மனிதனால் மனிதன் சுரண்டப்படுவதை அடிப்படையாகக் கொண்டதும், தனியார் சொத்துடைமையைக் கொண்டதுமான சமூகமுறையை ஒழித்துக்கட்டும் வரை நீடிக்கும் விரிவான போராட்டமாக இருக்க வேண்டும். மனிதர்களுக்குள் சமத்துவமின்மையை உருவாக்கும் மூலகாரணிகளை தகர்த்தெறியக்கூடிய புதிய சமூக முறையொன்றின் மூலம் மாத்திரமே ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களால் தமது உரிமைகளை உண்மையாகவே பெற்றுக்கொள்ள முடியும்.

தேசிய இனப் பிரச்சனை சார்ந்த எமது கொள்கை நிலைப்பாடு:

சகல மக்கள் சமூகங்களுக்கும் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் உறுதிப்படுத்தி, ஜனநாயக மத்தியத்துவ அடிப்படையில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படும் சாத்தியப்பாடான செயற்பாடுகள் கீழே குறிப்பிடப்படும் அடிப்படை கொள்கைகளை ஆதாரமாக கொண்டுள்ளது.

தேசிய இனப் பிரச்சினை சார்ந்த எமது கொள்கை நிலைப்பாடானது, ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு உச்சபட்சமான சுயாட்சி அதிகாரத்தை வழங்கி, அவர்களின் பொருளாதார மற்றும் சமூககலாச்சார அபிவிருத்தியினை பெற்றுக் கொள்வதற்கான மிகவும் விஞ்ஞானபூர்வமான வழிகளை ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையிலான அரசு கடைப்பிடிக்கும் எனக் கூறுகிறது.

எமது கொள்கை நிலைப்பாட்டின் சில முக்கிய புள்ளிகள்:

1. இன மத அடையாளங்களை அடிப்படையாக கொண்ட அரசியல் பிளவுகளுக்கு மாற்றாக அனைத்து தேசிய இனப்பிரிவுகளும் சோஷலிஸ அரசாங்கத்தில் சமத்துவம் மற்றும் ஜனநாயக அடிப்படையில் ஒன்றுபட்டு வாழ்வதற்கு தேவையான நிலமைகளை உறுதிப்படுத்துவதனூடாக மட்டுமே அனைத்து மக்கள் பிரிவினரதும் சமமான அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள முடியும்.

2. பல்வேறு மக்கள் பிரிவினரிடையே உண்மையான சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடு, பொருளாதார மற்றும் சமூக கலாசார அபிவிருத்தியினை பெற்றுக் கொள்வதற்கான நோக்கத்தை வரையறுத்து கொள்வதில் மிகவும் விஞ்ஞானபூர்வமான பரந்த பிரதேச சுயாட்சி உறுதி செய்யப்பட வேண்டும்.

மத்தியத்துவப்படுத்தப்பட்ட அரசிற்கும் பிரதேச சுயாட்சி பிரதேசத்திற்கும் இடையே முழுமையான செயற்பாடுகளில் ஜனநாயக மத்தியத்துவம், தத்துவ பயன்பாட்டு செயற்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும்.

3. ஜனநாயக மத்தியத்துவ தத்துவத்தின் அடிப்படையில் சகல தேசிய இன சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பரந்த உழைக்கும் மக்கள் மற்றும் சகல அடக்கப்படுகின்ற மக்களினதும் ஜனநாயக உரிமைகள் நிறைவேற்றப்படும் வகையில் புதிய அரசியல் அமைப்பு முறை வெகுஜன அபிப்பிராய வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும்.

4. சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் தேசிய மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

5. சகல சட்ட நடவடிக்கைகள், அரச தீர்மானங்கள், அறிவித்தல்கள், கட்டளைகள் என்பன சகல தேசிய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும்.

6. கல்விச் செயற்பாடுகளின் போது தமது தாய் மொழியிலோ அல்லது தான் விரும்பும் எந்தவொரு தேசிய மொழிகளிலோ கல்வியை பெற்றுக்கொள்வதற்கு சகல தேசிய இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பிரஜைகளுக்கும் இருக்கும் உரிமை சோசலிச அரசியல் அமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

7. அரசாங்கத்துடன் தனது தாய் மொழியிலோ அல்லது தான் விரும்பும் எந்தவொரு தேசிய மொழியிலோ தொடர்புகளை பேணுவதற்கு சகல பிரஜைகளுக்கும் உள்ள உரிமை ஏற்றுக்கொள்ளப்படுவதோடு; அதனை செயற்படுத்துவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

8. மொழி வேறுபாட்டின் அடிப்படையில் சமூக பொருளாதார அரசியல் ரீதியில் எந்தவொரு வேறுபாடுகளும் எந்தவொரு பிரஜைக்கும் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வது, அரசின் கடமையாக அமைவதோடு அதற்கான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

9. சகல பிரஜைகளும் தேசிய மொழிகளை பயன்படுத்துவதில் சமமான உரிமையினை அனுபவிப்பதற்கு தேவையான ஒழுங்குவிதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

10. தேசிய இனங்கள் ஒன்றோடு ஒன்று ஒருங்கிணையும் செயற்பாடு சமூக பொருளாதார சமூக கலாச்சார தளத்தில் பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் மேற்கொள்ளப்படுவதற்காக விரிந்த ஜனநாயக வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்ட செயற்பாடுகள் பொறுப்பேற்கப்பட வேண்டும்.

11. ஒரு தேசிய இனத்தினால் இன்னொரு தேசிய இனத்தையோ, ஒரு சாதியினரால் இன்னொரு சாதியினரோ சமூக ரீதியில் பிளவுபடுத்துவதை முற்றாக இல்லாதொழிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடு அதனூடாக இனவாதம் மற்றும் சாதிவாதம் என்பவற்றை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு தீர்மானகரமானதும் இறுதியானதுமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

12. இலங்கையில் பிரஜாவுரிமை வழங்கப்படாத பெருந்தோட்டத்துறையில் தொழில்புரியும் தமிழ் தொழிலாளர்களுக்கு பிரஜாவுரிமையினை பெற்றுக்கொடுப்பதற்காக அவசியமான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த மக்கள் முகம் கொடுத்து வரும் சமூகப் பொருளாதார அரசியல் மற்றும் கலாச்சார முரண்பாடுகளை களைவதற்கு அவசியமான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.

13. சகல தேசிய இனங்களினதும் கலாச்சார அடையாளங்களை பாதுகாப்பதற்கு வகை செய்வதோடு, தேசிய இனங்களினது கலாச்சார அடையாளங்கள் மீது மேற்கொள்ளப்படும் அனைத்து மேலாதிக்க மற்றும் ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்படுவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

14. எந்தவொரு தேசிய இனப்பிரிவினருக்குள்ளும் வரலாற்று ரீதியாக கட்டியெழுப்பட்டிருக்கும் மேலாதிக்கவாத மனோநிலை மற்றும் இனவாத குழப்பங்களும் இல்லாதொழிப்பதற்கான மனிதத்துவ விஞ்ஞானபூர்வ வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

15. சகல தேசிய இனப்பிரிவினருக்கும் எந்தவொரு பாகுபாடும் அற்ற வகையில் அரசியலில் ஈடுபடுவதற்கு உள்ள உரிமை, சுதந்திரம் என்பன உறுதி செய்யப்பட வேண்டும்.

நிறைவாக

இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்யும் பேரினவாத தலைவர்களும் அவர்களின் கட்சிகளும், ஒடுக்கப்படும் தேசிய இன மக்களுக்கு எக்காலத்திலும் நியாயமான, அம்மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவல்ல தீர்வினைத் தரப் போவதில்லை. ஒடுக்கப்படும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் மட்டுமே எமக்கான தீர்வை நாமே பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த வகையில் பொருளாதார அடிப்படையில் நலிவுற்று வறுமையில் வாடும் மக்களுடன் இணைந்து போராடுவதன் மூலமும், அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இடதுசாரிய சக்திகளை வலிமையான அரசியற் சக்தியாக உருவாக வைப்பதன் மூலமும் மட்டுமே எமது தேசியப் போராட்டத்தை வெற்றியடையச் செய்ய முடியும்.