Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

புதிய ஜனாதிபதி அரசுக்கட்டமைப்பு, இலங்கை குடிமக்கள்

இலங்கையில் அதன் 7வது ஜனாதிபதித் தேர்தல் பலவிதமான  கருத்துக் கணிப்பீடுகளோடும் சாதக பாதக விவாதங்களுடனும் நீயா நானா என்ற போட்டிகளுடனும் ஜனநாயகமா சர்வாதிகாரமா என்ற தலைப்புகளோடும் நடைபெற்று முடிந்துள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு திருவாளர் மைத்திரிபால சிறிசேனாவிடம் இலங்கைக் குடிமக்களால் (51.28 சதவீதம் வாக்குகளால்) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 47.58 சதவீதமான குடிமக்கள். இந்த ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனை தங்கள் வாக்குகள் ஊடாக வெளிப்படுத்தி உள்ளனர். இந்த தேர்தல் முடிகளின் ஊடாக நாட்டு மக்கள் சரிபாதியாக பிளவுபட்டிருப்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது. இப்படியாக மக்கள் பிளவுபட்டிருக்கும் ஒரு சூழலில் எப்படியான ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் புதிய ஜனாதிபதியால் உருவாக்கமுடியும்? இதற்கான விடை ஜனநாயகம்" பற்றிய புரிதலில் மட்டுமே தங்கியுள்ளது.

முடியாட்சி (மன்னர் ஆட்சி) முடிந்து குடியாட்சி முறை வளரத் தலைப்பட்டபோது அதனை முன்னெடுத்தவர்கள் மன்னர் ஆட்சியில் அதிகார மட்டங்களில் இருந்து மக்களை நசுக்கிச் சுரண்டி அவர்கள் உழைப்பால் சேர்ந்த செல்வங்களை எடுத்து மன்னருக்குக் கொடுத்து அதன் பயனாக மன்னரால் வழங்கப்பட்ட மானியத்தில் வசதியாக வாழ்ந்த நிலபிரபுக்களும் பணக்காரர்களுமே ஆவர். ஒரு காலகட்டத்தில் சாதாரண மக்கள், தொழிலாளர்கள், ஏழைகள், புத்திஜீவிகள் ஆகியோருடைய கிளர்ச்சிகளால் பாதிப்புக்குள்ளான அன்றைய ஆளும் வர்க்கம் தனது பொருளாதார நலன்களை கருத்தில் கொண்ட அதேவேளை, மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் வரையப்பட்டதே 'மக்களுக்காக மக்களால்-மக்களைக் கொண்டு" நடாத்தப்படும் ஆட்சிமுறையான இந்த 'ஜனநாயகம்" ஆகும்.

இந்த ஜனநாயகக் கோட்பாட்டை எழுதியவர்கள், படிப்பறிவுள்ள மக்களைக் கருத்தில் வைத்தே எழுதியுள்ளார்கள். படிப்பறிவில்லாத பாமர மக்களைக் கவனத்தில் எடுக்கவில்லை.

உதாரணத்திற்குப் பார்ப்போம். ஒரு படித்த மக்கள் கூட்டத்தில் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவேண்டி சாதகபாதக விவாதம் நடைபெறுகிறதென வைத்துக்கொள்வோம். அக்கூட்டத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் அது புரிந்து எல்லோரும் அதற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வேண்டும்.

வாக்கெடுப்பில் பெரும்பான்மை சிறுபான்மை அடிப்படையில் முடிவு எட்டப்படும். ஆனால் முடிவை எட்டும்போது சிறுபான்மையோரின் கருத்துக்களையும் உள்வாங்கி அவர்களைப் பாகுபடுத்தாமலும் பாதிப்புக்குள்ளாகாமலும் நடத்த வேண்டும். ஜனநாயகம் என்பதன் நடைமுறை அர்த்தம் (அதனை வரைந்தவர்களின் சிந்தனையில்) இதுதான்.

இதனை நியாயமான வழியில் மக்களுக்குரிய 'ஜனநாயகமாக" பயன்படுத்தவேண்டுமானால் முதலில் மக்களுக்கு உண்மையான சரியான-அர்த்தமுள்ள 'ஜனநாயக" நடைமுறையைக் கற்பிக்கவேண்டும். அந்த வகையில் அவர்களை 'அரசியல் விழிப்புணர்வு" உள்ளவர்களாக ஆக்கவேண்டும். அரசியல் புரிதல் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள பிறப்புரிமை என்பதைச் சிந்தனையில்
பதியவைக்கவேண்டும். இதனைக் கல்வி முறையில் ஒரு கட்டாய பாடமாக ஆக்கவேண்டும். இவை அரசியல் யாப்பில் ஒரு விதியாகப் வரையப்படல் வேண்டும். நாட்டு மக்கள் பரந்துபட்ட அளவில் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களாக இயங்கும் போதுதான் யதார்த்தபூர்வமான அதாவது 'மக்களுக்காக-மக்களால்-மக்களைக் கொண்டு" செயற்படும் ஒரு நீதி நியாயம் கொண்ட 'ஜனநாயக(ம்)" ஆட்சிமுறை அமையும்.

இது உலகில் நாட்டுக்கு நாடு பல தரப்பட்ட வடிவங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. இலங்கையில் மக்கள் வாக்களிக்கும் தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் இன்றுவரை ஜனநாயகம் என்ற பேரில் உருவாக்கப்பட்ட சட்டங்கள் முதல் அபிவிருத்தித் திட்டங்கள் வரை யாவுமே மக்களுக்கும் நாட்டுக்கும் தீமையைத்தான் ஏற்படுத்தி வந்துள்ளது.

(1) அரசு (அரச கட்டமைப்பு) இன்றைய இலங்கையின் அரசியல் நிர்ணய சட்டம் இந்நாட்டில் வாழும் பல்லின மக்களின் கருத்துக்களையோ அல்லது அவர்களின் அடிப்படை உரிமைகளைக் கணக்கில் எடுத்தோ அல்லது பாமர-பாட்டாளி மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் வகையிலோ வரையப்பட்டதல்ல.

இந்நாட்டில் வாழும் சிங்கள பௌத்த பெரும்பான்மை இன மக்களைச் சாட்டாக வைத்து சிங்கள மேலாதிக்கவாதிகளின் வர்க்க நலன்களை மட்டும் கருத்தில் கொண்டே எழுதப்பட்டுள்ளது. இந்த அரசியல் நிர்ணய சட்டத்தின் கீழ் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் எந்த அரசாங்கத்தாலும் நாட்டின் இன்றைய நெருக்கடிகளை அதன் பாரிய பிரச்சனைகளை தீர்க்கமுடியாது. குடிமக்களின் வாழ்வை மேம்படுத்தமுடியாது. அவர்களின் வருங்கால சந்ததியினருக்கு ஒரு சுபீட்சமான வாழ்வுக்கான அடிப்படையை உருவாக்கவும் முடியாது. இலங்கையில் கல்விமுறை சிறுவயது முதல் மக்களை பிரித்தாளுவதற்கும் அதனூடாக உலக மூலதன பெரும் கோடீஸ்வரர்களுக்கு கைகட்டி தலை வணங்கி நின்று சேவகம் செய்யவும் ஏற்றவகையிலேயே அமுலில் இருந்து வருகிறது. உதாரணம்:

இலவசக் கல்வியில் பட்டம். பின்னர் வெளிநாட்டில் உத்தியோகம். மக்களை மந்தைகளாக அடிமைகளாக மாற்றும் கல்வியே ஊட்டப்படுகிறது. இதனால் காலங்காலமாக ஆட்சி மாறி, ஆட்சி மாறி அரச பீடத்தில் அமரும் கொள்ளைக் கூட்டத்தினரால் நாட்டு மக்கள் அனைவரும் ஏமாற்றப்படுகிறார்கள். வஞ்சிக்கப்படுகிறார்கள். தவறான பாதைகளில் திசைதிருப்பப்படுகிறார்கள். தீய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

குறிப்பாக 1948 முதல் உருவான சுதந்திர இலங்கை அரசும், அதன் கீழ் ஆட்சி செய்த அரசாங்கங்களும் பாமர சாதாரண பாட்டாளி மக்களை வேறுபாடின்றி ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறு வேறு காரணங்களைக் கூறி அடக்கி ஒடுக்கி கொன்று குவித்தே வந்துள்ளதை கடந்த கால வரலாறு காட்டி நிற்கிறது.

மேலாதிக்க மனோபாவம் கொண்ட சுயநல சுரண்டல் கூட்டம் சாதி-சமயபிராந்திய-இன-பால்-வர்க்க ரீதியில் மக்களை அணிதிரட்டிக் கட்சிகளை கட்டி வைத்துக்கொண்டு பகிரங்கமாக ஆவேசம் கொண்ட மேடைப் பேச்சுக்களால் மக்களை உருவேற்றி அவர்களைத் தங்களிடையே மோத வைப்பதும் திரைமறைவில் கூட்டாக சேர்ந்து நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பதும் தொடர்கதையாகி விட்டது.

புதிய ஜனாதிபதி

இந்த வரலாற்றுத் தொடர்கதையின் இன்னொரு அத்தியாயத்தின் ஆரம்பமே இன்றைய புதிய ஜனாதிபதியின் தெரிவாகும். இவரை தெரிவு செய்த குடிமக்களின் நிலை எண்ணெய்ச் சட்டியில் இருந்து தப்பி நெருப்புக்குள் பாய்ந்த" மீனின் கதைதான். நாட்டில் குடிமக்களுக்குப் பயன்தரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு அதிகாரமும் புதிய 'ஜனாதிபதி" கையில் இல்லை. காரணம் 'புதிய மொந்தையில் பழைய கள்" கதைதான். பழைய அரசியல் யாப்பு - அது உருவாக்கி வைத்துள்ள அரச கட்டமைப்பு இரண்டும் நாட்டில் நடைமுறையில் இருக்கும்வரை புதிய வெற்றி வீரனாக தேர்தலின் பின் காட்சியளிக்கும் திருவாளர் மைத்திரி சிறிசேனாவால் அரசாங்கத்தின் 'தோற்றத்தை" மாற்றமுடியுமே தவிர அதன் 'உள்ளடக்கத்தை" மாற்றமுடியாது.

அரசியல் யாப்பை மாற்றுவதற்கு பாராளுமன்றமும் அதன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளும் வேண்டும். பாராளுமன்றப் பிரதிநிதிகள் யார்? எதனால்? எப்படி தெரிவுசெய்யப்பட்டார்கள்? மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான தகைமைப் பண்பும், நாட்டுக்கும் குடிமக்களுக்கும் நலன் தரும் சட்டதிட்டங்களை அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் அறிவாற்றலும் இவர்களுக்கு உண்டா? நீதி நியாயங்களை மதித்து நடக்கும் மனிதப் பண்பு இவர்களிடம் உள்ளதா?

இவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் மக்களிடம் கையேந்தி வாக்குப்பிச்சை கேட்பவர்கள். பாராளுமன்றம் சென்றதும் வாக்களித்த மக்களை ஏறி மிதிப்பவர்கள். தங்கள் தங்கள் சுயநலத்திற்காக கட்சி மாறுபவர்கள்- கொள்ளையடிப்பவர்கள் - கொலை செய்பவர்கள் - வன்புணர்ச்சியாளர்கள் - கடத்தல்காரர்கள் - இப்படியானவர்கள்தான் இன்று மக்களின் பிரதிநிதிகள். இவர்களால் வரக்கூடிய மாற்றம் யாது? எப்படிப்பட்டது?

உலக வங்கி - சர்வதேச நாணய நிதியம் - ஆகியவற்றின் கடனுதவிகள், கட்டுப்பாடுகள், பணக்கார நாடுகளின் உள்ளீட்டு முதலீடுகள், அவற்றுக்கூடான உட்தலையீடுகள், உலகமயமாக்கல், பொருளாதார நடைமுறையின் அழுத்தங்கள், பிராந்திய நாடுகளின் அச்சுறுத்தல்கள் போன்றவற்றுக்கு ஏற்றவகையில் பொம்மலாட்டம் ஆடுவதே இன்றைய இலங்கை அரசாங்கத்தின் நிலைமையாகும்.

தங்கள் சுகபோகத்திற்காக நாட்டையும் மக்களையும் விலைபேசி விற்கும் பச்சை சுயநல அரசியல்வாதிகளையே இலங்கைக் குடிமக்கள் தங்கள் தலைவர்களாகவும், பிரதிநிதிகளாகவும் இன்றுவரை ஆட்சிபீடத்தில் மாறி மாறி அமர்த்திவருகின்றனர்.

ஜனாதிபதியின் 100 நாட்கள் அவகாசம்

இந்த 100 நாட்கள் எல்லை என்பது அடுத்த பொதுத் தேர்தலை ஒட்டியதாகும். அதுவரை ஜனாதிபதியின் நகர்வுகள் யாவுமே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தந்திரோபாயம் கொண்டதாகவே அமையும். குடிமக்களின் நலம் கொண்டதாக இருக்கமுடியாது.

எவராவது 'மாற்றம்" வரும் என்று கூறுவார்களேயானால் ஒன்றில் அவர்கள் கூலிக்கு மாரடிப்பவர்கள் அல்லது அரசியல் குருடர்கள் ஆகும். இந்த வரலாற்றுப் போக்கு மாறாத வரை மாற்றப்படாத வரை இலங்கையின் குடிமக்களுக்கு விமோசனமே கிடைக்காது.

இலங்கை குடிமக்கள்

இலங்கையில் சிங்கள - முஸ்லீம் - தமிழ் மக்கள் அன்றும் இன்றும் இணைந்தே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களைப் பிளவுபடுத்துவது சிங்களவர் - இஸ்லாமியர் - தமிழர் என்ற அரசியற் கதையாடல்களே.

பெரும்பான்மை சிறுபான்மை என்ற ஜனநாயக அரசியல் சதுரங்க விளையாட்டில் இலங்கைக் குடிமக்களாகிய சிங்கள-தமிழ்- முஸ்லீம் ஆகிய மூவின மக்களும் அவர்களால் தெரிவுசெய்யப்படும் தலைவர்களாலும் பிரதிநிதிகளாலும் இன்றுவரை மந்தைகளாகவே மதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த சிங்களவர்-தமிழர்-இஸ்லாமியர் என்ற சொற்களை பாவிக்கும் ஒவ்வொரு கணமும் இனவாதப் போதை மக்களுக்கு அவர்களை அறியாமலேயே ஊட்டப்படுகிறது. இலங்கையில் எந்தவொரு இனக்கலவரமும் எழுந்தமானதாக சாதாரண மக்களால் ஏற்படுத்தப்பட்டதல்ல. மாறாக யாவும் அரசியல்ரீதியாக திட்டமிட்டு குறிக்கப்பட்ட ஒரு குழுவினரால் நடாத்தி முடிக்கப்பட்டவையாகும்.

சாதாரண சிங்கள மக்களால் கலவரங்கள் நடாத்தப்பட்டிருந்தால்

(1)ஒவ்வொரு கலவரத்தின் பின்பும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்பிச் சென்றிருக்கமுடியாது.

(2)'தமிழர்களின்" தனிநாட்டுக்கான 26 வருட கால யுத்தத்தின் போது தமிழ் மக்கள் எவருமே கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக வெளிநாடுகள் வந்திருக்கவும் முடியாது. அதேவேளை இந்தக் கலவரங்களை வைத்து தமிழ் சிங்கள முஸ்லீம் முதலாளி வர்க்கம் தொடர்ந்து இன்றுவரை தங்கள் சுயநல வியாபாரத்தை வெற்றிகரமாக நடாத்திவருகிறார்கள்.

1971 இலும் 1989 இலும் சிங்கள மக்களுக்கான வர்க்க விடுதலை எனக்கூறித் தென்னிலங்கையில் இளைஞர்கள் ஆயுதப்போரை நடாத்தினார்கள். பல்லாயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டார்கள். 1983 முதல் 2009 வரை தமிழர்களுக்குத் தனிநாடு எனக் கூறி வட-கிழக்கில் இளைஞர்கள் ஆயுதப் போரை நடாத்தினார்கள். பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டார்கள். இன்று தெற்கில் ஆயுதம் எடுத்தவர்களும் வட-கிழக்கில் ஆயுதம் தூக்கியவர்களும் அவர்களுடைய போராட்டத்தை நசுக்கி அவர்களது போராளிகளையும் மக்களையும் கொன்றொழித்த ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து நிற்கிறார்கள். பலிக்கடாவாக்கப்பட்ட மக்களை வைத்துப் பேரம்பேசுகிறார்கள்.

தென் இலங்கையில் பாமர பாட்டாளி மக்களை அடிப்படையாகக் கொண்ட இடதுசாரி சிந்தனை கொண்ட இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் சிங்கள முதலாளித்துவ தரப்பினரால் அழிக்கப்பட்டது. வட-கிழக்கில் இடதுசாரி சிந்தனையுடன் கருக்கொண்டு முளைவிடத் தொடங்கிய இலங்கையின் தமிழ்ப் பேசும் மக்களின் (சமத்துவ சமதர்ம சமுதாய) விடுதலைப் போராட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து அதனை திசைதிருப்பி தமிழீழத்திற்கான போராக்கிய தமிழ் முதலாளித்துவ தரப்பினர் அதனை முள்ளிவாய்க்காலில் வெட்டிப் விழுத்தி போட்டு புதைத்து மூடினர்.

1977ல் 'தமிழீழத்திற்கான" மக்கள் ஆணை பெற்றவர்கள் பின்பு 1981ல் மாவட்டசபை கண்டு மயங்கினார்கள். 2009 மே 18 வரை தனிநாட்டுக்கான யுத்தத்தில் குளிர் காய்ந்தவர்கள் இன்று மாகாணசபை ஆட்சியில் அட்டகாசம் பண்ணுகிறார்கள்.

கொல்லப்பட்டவர்கள் - காயப்பட்டவர்கள் - அங்கவீனமானவர்கள் - காணாமல் போனவர்கள் - கடத்தப்பட்டவர்கள் - விதவைகள் - பெற்றோரை இழந்த குழந்தைகள் - பாதுகாப்பற்ற பெண்கள் - இடம் பெயர்ந்தவர்கள் - கைது செய்யப்பட்டோர் - சிறையில் வதைபடுவோர்......இப்படி இன்னும் எத்தனையோ வகைப்பட்டோர் என நாட்டில் சாதாரண மக்கள் இன்று அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழர் தரப்பினர் ஆண்ட பரம்பரையினர் கனவில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

1949ல் மலையக மக்கள் நாடற்றவராக்கப் பட்டபோது இலங்கைத் தமிழர்கள் கவலைப்படவில்லை. 1971 இலும் 1989 இலும் தென்னிலங்கையில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள்- மனித உரிமை மீறல்கள் பற்றி தமிழர் தரப்பினர் அக்கறைப்படவில்லை. 2006ல் கிழக்கில் நடைபெற்ற யுத்தக்குற்றங்கள் இவர்கள் கண்ணில் படவேயில்லை.

ஆனால், 2009 வன்னிப் பேரழிவை மூலதனமாக்கி தங்கள் வாழ்வை வளம் கொழிக்கச் செய்கிற முழு முயற்சிகளில் தமிழர் தரப்பு யாழ் மேலாதிக்கவாதிகள் இன்று ஈடுபட்டுள்ளனர்.

மாகாணசபைத் தேர்தலில் மக்கள் தங்கள் ஆத்ம சுவாலையைக் காட்ட அமோக பங்களிப்புடன் போட்ட வாக்குகளை தங்களுக்கு ஆதரவானதெனக் காட்டி வியாபாரம் செய்கின்றனர் இன்றைய தமிழர் தரப்பினர். (புலம் பெயர் மேலாதிக்கத் தமிழரின் தூண்டுதலில் தேர்தலைப் பகிஷ்கரிக்கும் எண்ணத்துடன்
இருந்தவர்கள்) ஜனாதிபதித் தேர்தலில் வடகிழக்கில் மக்கள் ராஜபக்சவிற்கு எதிராக அளித்த வாக்குகளை தங்களுக்கு ஆதரவானதெனக் காட்டி புதிய ஆட்சியாளர்களுடன் இன்று பேரம் பேசத் தொடங்கியுள்ளனர் இந்த தமிழர் பிரதிநிதிகள்.

அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் மைத்திரியும் அவரது கூட்டாளிகளும் தமிழருக்கான தீர்வு பற்றி அடக்கியே வாசிக்க வேண்டிய சூழலையே கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன.

1987 முதல் 2009 வரை 'ஒன்றுக்கும் உதவாது" என ஓரங்கட்டிய '13வது" என்னும் மக்களுக்குப் புரியாத-புரிய வைக்க முடியாத தாரக மந்திரத்தை, பட்டை நாமம் நெற்றியில் பூசியபடி மீண்டும் மக்கள் முன் உச்சாடனம் பண்ணிக் கொண்டு வரப் போகிறார்கள். மறுபடி மக்களின் எதிர்ப்பு வாக்குகள் தமிழர் தரப்புக்கு வெற்றி வாகையைச் சூட்டிக்கொடுக்கும் ஆபத்து வரப்போகிறது.

ஏன் இந்த நிலை தமிழ்ப் பேசும் மக்களுக்கு? அறியாமையா? வரட்டுக் கௌரவமா? வணங்காமுடிச் சிந்தனையா? சுயநலமா? அல்லது மாற்றுவழி இல்லாத வெற்றிடமா?

சிந்தியுங்கள். இனியாவது சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள். 'அவர் சொன்னார் இவர் சொன்னார் எனத் தடுமாற்றம் அடையவேண்டாம். எவர் சொன்ன சொல்லானாலும் அதை உந்தன் பகுத்தறிவால் எண்ணிப்பார்.

அன்பான மக்களே!

66 வருடங்களாக ஏமாற்றப்பட்டு இன்று யாவும் இழந்து நடுத்தெருவில் நின்றது போதும். உங்களிடம் இன்று எஞ்சி இருப்பது உங்கள் 'அறிவாயுதம்" மட்டுமே. அதனைக் கையில் எடுங்கள்.

சிங்கள பௌத்த இனவெறி அரசு தமிழர்களை அழிக்கிறது. உண்மை. அதேபோல் தமிழ் மேலாதிக்க வெறி பிடித்தவர்களால் அழிக்கப்பட்ட தமிழர்களுக்காக நீதி-நியாயத்தை யாரிடம் நாங்கள் கேட்கமுடியும்?

தெற்கில் சிங்களவன் தமிழனைக் கொன்றால் அது இனக் கலவரம். வட-கிழக்கில் தமிழன் தமிழனைக் கொன்றதற்கு என்ன பெயர்?

இனியாவது விழித்தெழுங்கள்! எங்கள் மத்தியில் இருப்பது இனப் பிரச்சனை மட்டுமல்ல. உங்களுக்கு அது நன்கு புரியும். அதனால்தான் தமிழர் தரப்பினர் ஒற்றுமைப்படமுடியவில்லை. மக்களை வைத்து பிழைக்கிறார்களே தவிர மக்கள் நலன் கருதி உழைக்கவில்லை.

நீங்கள் உங்களுக்கான அரசியலை கையில் எடுக்காத வரை 'தீர்வு" வராது. 66 வருடங்கள் மற்றவரை நம்பியது போதும். இனியாவது உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுடைய பிரச்சனை பற்றி உங்களுக்கு அக்கறை இல்லாத போது அடுத்தவர்கள் அதில் தலையிட்டு தங்களுக்கு இலாபம் ஈட்டுகிறார்கள்.

'வன்னிப் பேரழிவை" நடாத்திய சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு ஊக்கமும்-ஆக்கமும்-உதவி ஒத்தாசையும்- ஆயுதமும் (பயங்கரவாதம் என்று கூறி) கொடுத்தவர்களிடம் 'தீர்வை" வாங்கித் தா என அடம் பிடிப்பது நியாயமா?

'தீர்வு" இலங்கை அரசு-இந்தியாசர்வதேசம் எவரிடமும் இல்லை. அது எங்கள் கைகளில்தான் உள்ளது. ஆம். அது இலங்கைக் குடிமக்களிடம்தான் உள்ளது. 'கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்". இது வரலாறு எமக்கு காட்டும் உண்மை.

1983ல் ஒரு (பிழையான) கருத்தைப் பற்றிக் கொண்டோம். அது மாபெரும் சக்தியாக உருவெடுத்தது. சுயநலத் தலைமைகளின் தவறான முடிவுகளால் இன்று உள்ளதையும் இழந்து நிற்கிறோம்.

ஆனாலும் எங்களிடம் இன்னமும் 'வாக்கு" என்ற ஆயுதம் ஒன்று உள்ளது. அதனைச் சாதுரியமாகப் பயன்படுத்துவதற்கான வழிமுறை ஒன்று உண்டு. அதுதான் இலங்கை குடிமக்களின் ஒற்றுமை. சிங்கள மக்களுடனான ஒற்றுமை.

சிங்கள-பௌத்த மேலாதிக்க வாதிகள் தமிழ்ப் பிரச்சனையைக் காட்டி சிங்கள மக்களையும் அடக்கி ஒடுக்கி அவர்களைச் சிந்திக்க விடாமல் தொடர்ந்து தங்கள் ஆட்சி அதிகாரத்தைக் தக்க வைத்துக் கொண்டு வருகின்றனர். தமிழ் இந்து மேலாதிக்கவாதிகள் அதையே தமிழர்கள் மத்தியில் செய்து வருகின்றனர்.

உலகம் பூராவும் எங்கள் பிரச்சனையை எடுத்துச் சென்ற நாங்கள் அருகிலிருந்த சிங்கள மக்களிடம் இன்றைய நாள் வரை அணுகவேயில்லை. அணுகுவதற்கு விடாமல் மேலாதிக்க வர்க்கம் அவரவர் மொழியைப் பாவித்துக் கொண்டது. சகோதர மொழியைப் படிக்க மறுத்த தன்மானத் தமிழன் இன்று பரதேசிகளாக-அகதிகளாக- இரண்டாந்தரப் பிரஜைகளாக தங்கள் சந்ததிகளை வேற்று மொழி பேசும் இரண்டும் கெட்டான் இனமாக உற்பத்தி செய்து கொண்டிருந்தபடி தமிழீழம் கேட்கிறான்.

எமது பிரச்சனை மொழியல்ல. மொழியைக் காட்டி மக்களை உசுப்பேத்தும் சிங்கள, தமிழ் மேலாதிக்கவாத மேட்டுக்குடியினர் பல்கலைக்கழகங்களில் சுயமொழி பாடத்திட்டத்தை பற்றி சிந்திக்கவே இல்லை. சிந்திக்கவும் மாட்டார்கள். காரணம் ஆங்கிலம் இல்லாவிட்டால் அவர்களால் அந்நியரை அண்டிப் பிழைக்க முடியாது.

சிங்கள-தமிழ் மேட்டுக்குடி வர்க்கத்தினர் இடையே ஏற்பட்ட பொருளாதாரப் போட்டிதான் பிரச்சனை. அதனை மூடி மறைக்கத்தான் மொழி வெறி ஊட்டப்பட்டது.

கடந்த 66 வருட காலத்தில் சிங்களவன் தமிழனுக்குச் செய்த அநியாயங்களை விட தமிழன் தமிழனுக்கு-முஸ்லீம்களுக்கு, மலையக மக்களுக்கு இழைத்த அநியாயங்கள்தான் அதிகம். சற்று ஆற அமர இருந்து சிந்தித்துப் சீர்தூக்கிப் பார்த்தீர்களானால் இது உங்களுக்கு நன்கு புரியும். இன்று நடைமுறையில் உள்ள ஜனநாயகத்தில் சிங்கள-தமிழ்- இஸ்லாம்-மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் யாவரும் மேலாதிக்கவாத சிந்தனையுடைய மேட்டுக்குடியினரே. அவர்கள் தங்களுக்குள் அதிகாரத்தைப் பங்கு போடும் வழிமுறையாகவே இன்றைய ஜனநாயகம் விளங்குகிறது.

ஜனநாயகம் மக்களுக்கு உரியதாக மாற்றி வரையப்படல் வேண்டும். அதன் ஊடாகவே நமக்கு நல்லது நடக்கும். பிரித்துப் பிரித்து வைத்து - சந்தேகக் கண்களுடன் - மற்றவர் மேல் பழி சுமத்தி - சொந்த நலனுக்காக ஒற்றுமைக்கான சகல கதவுகளையும் இழுத்து மூடி இதுவரை அழிந்தது போதும்.

எம்மைப் போல் அனுபவப்பட்ட அல்லல்பட்ட சிங்கள சகோதரர்கள் தாங்கள் விட்ட தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு எங்களுடன் இணைந்து 'தீர்வு" என்ற இலக்கை எட்டுவோம் என்ற திடசங்கற்பத்துடன் எம்முடன் தோளோடு தோள் கொடுத்து உழைக்கிறார்கள். ஒன்றுபடுவோம்-உறுதியுடன் உழைப்போம்-உலகை மாற்றுவோம்.