Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நாட்டை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்ற மஹிந்த அரசு முயற்சி!

அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்த உள்ள இலத்திரனியல் அடையாள அட்டை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவது என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டு பிரஜைகளின் கைவிரல் அடையாளங்களை பெறும் அங்குலிமாலா நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் நாட்டையும் திறந்த வெளி சிறைச்சாலையாக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

முழு நாட்டையும்  திறந்த வெளி சிறையாக மாற்ற அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு எதிராக மக்கள் தமது கைவிரல் அடையாளங்களை வழங்குவதை நிராகரிக்க வேண்டும். இலங்கையில் ஆட்களை பதிவு செய்வதற்காக இருக்கும் ஒரே சட்டம் 1968ஆம் இலக்கம் 32என்ற ஆட்பதிவுச் சட்டமே அமுலில் இருக்கின்றது. 1971ஆம் 1981ஆம் ஆண்டுகளில் அதில் திருத்தங்கள் செய்யப்பட்டது. 1972ஆம் ஆண்டு கையால் எழுதும் அடையாள அட்டை வழங்குவது ஆரம்பிக்கப்பட்டது.

இதனையடுத்து 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் திகதி பழைய அடையாள அட்டைக்கு பதிலாக இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த அமைச்சரவை தீர்மானித்தது.

கையால் எழுதும் அடையாள அட்டைக்கு பதிலாக இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. எனினும் இலங்கையில் 15வயதுக்கு மேற்பட்ட சகலரது விபரங்கள் உடல் அடையாளங்களுடன் கூடிய தேசிய பிரஜைகள் தரவுகளை தயாரிப்பது என அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

 இது நாட்டை இராணுவமயப்படுத்தும் நடவடிக்கையின் மற்றுமொரு செயற்பாடாகும். இதனை கொண்டு வர எண்ணியுள்ளவர்கள் முழு சமூகமும் குற்றவாளிகள் என கருதுகின்றனர். நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி குற்றவாளிகள் என அடையாளப்படுத்தப்பட்டவர்களிடம் மட்டுமே கைவிரல் அடையாளங்களை பெற முடியும். நீதிமன்றத்தின் உத்தரவின் படியே அதனையும் பெற முடியும்.

தற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மூலமாக நடவடிக்கை தொடர்பான கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளன. கிராம சேவகர்கள் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். அதில் தனி நபரின் விபரங்கள் மாத்திரமல்லாது, நபரின் குடும்ப விபரங்கள் மற்றும் கைவிரல் அடையாளமும் பெறப்படுகிறது.

1968இலக்கம் 32என்ற சட்டத்திற்கு அமைய என விண்ணப்பத்தின் மேல் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி அப்படியான விபரங்களை பெற அதிகாரமில்லை. அரசாங்கம் இந்த சட்டத்தை இரத்துச் செய்து விட்டு அடக்குமுறை சட்டம் ஒன்றை கொண்டு வரப் போகிறது. அந்த புதிய சட்டம் நிறைவேற்றப்படும் முன்னர் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரதேச செயலகங்களில் நடக்கும் பயிற்சி கருத்தரங்குகளுக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் அதிகாரிகள் செல்வதில்லை. இராணுவ அதிகாரிகளே செல்கின்றனர். எந்த அடிப்படையில் இராணுவம் இதில் தலையிடுகிறது. இது அடையாள அட்டை தொடர்பான பிரச்சினையல்ல. அடக்குமுறையின் முயற்சியாகும்.

ஐரோப்பிய நாடுகள் கைவிரல் அடையாளங்களை தமது பிரஜைகளின் குடியுரிமைகளை பெறுவதாக அரசாங்கம் கூறுகிறது. கலாசார விழுமியங்களை கொண்ட எந்த நாடாவது தமது பிரஜைகளின் வாழ்வியல் அடையாளங்களை திரட்டுகிறதா என்பதை சுட்டிக்காட்டுமாறு நாம் சவால் விடுக்கின்றோம் எனவும் புபுது ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.