Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வடகிழக்கு எங்கும் கோயில்கள் கட்டப்படும் பின்னணி

வடகிழக்கில் பணம் சார்ந்த செயற்பாடுகளானது, ஊழலுக்கும் - மோசடிக்கும் உள்ளாகின்றது. பாராளுமன்ற அரசியல் என்பது பணம் சம்பாதிக்கவும் - பொறுக்கித்தனமாகத் தின்று குடிக்கும் தங்குமிடமாக எப்படி உணரப்படுகின்றதோ, அப்படி சமூகம் சார்ந்த பணச் செயற்பாடுகள், சுருட்டும் இடமாக மாறி இருக்கின்றது. பணரீதியாக சமூகத்துக்கு உதவுகின்றவர்கள் - இதை தடுக்க கண்காணிப்புகளையே மாறாக உருவாக்க முயலுகின்றனர். சமூக உணர்வற்ற சமூகத்தை தக்கவைத்துக் கொண்டு, சமூக உதவிகள் என்பது வெளிப்பூச்சாக மாறுகின்றது.

உண்மையில் பொதுப் பணத்துடன் தொடர்புடைய பாடசாலை அதிபர்கள் தொடங்கி கிறிஸ்தவ போதகர்கள் வரை, சமூக அக்கறை அற்றவர்களாக - சமூக பொறுப்பற்றவராக இருக்கின்றனர். மோசடிகளும் - சமூக பெறுமானங்களின்றி பொதுவில் வீணடிக்கப்படுகின்றது. சமூகத்தின் மீதான பொது அக்கறை என்பது வடகிழக்கில் அரிதாகி - சுயநலமே சமூக அக்கறையாகி - பொதுப்பணம் சூறையாடுவது இயல்பாகின்றது.

பாடசாலை அதிபர்கள் தொடங்கி கிறிஸ்துவ போதகர்கள் நேர்மையானவர்கள் - சமூக அக்கறையானவர்கள் என்ற பொது சமூக உளவியலை, தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்துகின்றனர். இன்று பணத்தை சம்பாதிக்க மதத்தையும் - கல்வியையும் முன்தள்ளி முன்வைக்கும் திட்டங்களுடன் - புலம்பெயர் சமூகத்தை தன் வலைக்குள் இழுத்து விடுகின்றது. "கல்வி - மதம்" என்ற "புனிதங்களை" அடிப்படையாகக் கொண்டு, எஞ்சி உள்ள சமூகம் அக்கறையும் மோசடிக்குள்ளாக்கப்படுகின்றது.

இந்தப் பின்னணியிலேயே இன்று புதிதாகவும் - மீளவும் புதுப்பித்தும் கட்டப்படும் கோயில்கள், மதம் சார்ந்த சமூக செயற்பாடுகள், கல்வி சார்ந்த உதவிகள், வறுமை சார்ந்த பொருளாதார திட்டங்கள்... பொதுவாக ஊழலும் - மோசடியும் கொண்ட ஒன்றாகவும், இதில் இருந்து தப்பிக்க சமூகரீதியான முரண்பாடுகளையும் தோற்றுவிக்கின்றனர். குறிப்பாக சாதி - மத முரண்பாடுகள் கூர்மையாகி வரும் பின்னணியில் - ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் தரப்பு தீவிரமாக இயங்குகின்றனர்.

2009 வரை பொதுப்பணத்தை சூறையாடவும் - பணத்தைச் சம்பாதிக்கவும் "தேசியம்" பயன்படுத்தப்பட்டது. 2009 பின் கோயில்களை (இந்து - கிறிஸ்துவ) கட்டுவதன் மூலமும் - கோயிலை மையப்படுத்திய செயற்பாடுகள் மூலமும், பண மோசடிகள் பெருமளவில் செய்யப்படுகின்றது. குறிப்பாக வெளிநாட்டில் வாழ்பவர்களிடம் பணத்தைக் கறப்பதற்கு - கோயில்கள் கட்டப்படுவதை திட்டமாக முன்வைக்கின்றனர். தமிழ் தேசியத்துக்கு பின், கோயில்களே மற்றவன் பணத்தை மோசடி செய்ய உதவுகின்றது.

கோயில்களைக் கட்டுவது - கோயிலுக்குள் போட்டியை உருவாக்குவது - பிற கோயில்களுடன் முரண்பாட்டை உருவாக்குவது... மூலம், "ஊர் - சாதி - அந்தஸ்து..." முரண்பாட்டை உசுப்பேற்றி பணங்களை கறக்கின்றனர். மறுபுறத்தில் கடவுளுக்கு இடையில் - உறவுக்குள்ளும் - சமூக அந்தஸ்துக்குள் - சாதிகளுக்குள் - பிற மதப்பிரிவுகளுக்குள் ... என்று பல முனை முரண்பாடுகளை உருவாக்கி பணத்தை கறக்கின்றனர்.

கோயில்கள் இயல்பில் சாதியப்பிளவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு சமூக அமைப்பு முறையாக இருப்பதால், கோயிலை வைத்து ஊழல் - மோசடிகளில் ஈடுபடுகின்ற கும்பல்கள் அதை மறைக்க சாதி முரண்பாட்டைத் தூண்டி விடுகின்றன.

வடகிழக்கில் சாதிய முரண்பாடுகள் கூர்மையடைவதற்கு காரணமாக இருப்பது - வெறும் கல்லுகளால் கட்டப்படும் கோயில்களும் - அதில் நடக்கும் ஊழல் - மோசடிகளுமே காரணமாகும்.

இந்த பின்னணியில் குறிப்பாக வடக்கில் சாதியம், சமூகத்தைப் பிளக்கும் முதன்மை முரண்பாடாக மாறி இருக்கின்றது. "தேசியம்" என்பது தேர்தல் வாக்குப் போடும் காலத்தில் அரசியல்வாதிகளும் - ஊடகங்களும் தூண்டிவிடும், வாக்கு வங்கிக்கான உணர்ச்சிக் கோசமாகவும் - அதுவே அரசியலாகவும் இன்று குறுகி இருக்கின்றது.

புலம்பெயர் சமூகத்தில் பகுத்தறிவற்ற சமூக உதவிகள் - வடகிழக்கில் சமூக உணர்வற்ற சூறையாடும் தன்னலம், இவ் இரண்டும் இணைந்து சாதி - மத - அந்தஸ்து... முரண்பாடுகளை தோற்றுவித்து வருகின்றது. இது சமூகத்தை மேலும் குறுகிய வட்டத்துக்குள் ஆழமாக முடக்கி விடுகின்றது. சமூக அக்கறை உள்ளவர்கள் உதவியை செய்யும் போது, அதை பகுத்தறிவுபூர்வமானதாகவும் - சமூக உணர்வுடன் அதைப் பெறுவதை உறுதி செய்வதன் மூலம் மட்டும் தான், குறைந்தபட்சம் உண்மையான சமூகப் பலனைக் கொடுக்கும்.