Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அமெரிக்காவுடன் சேர்ந்து மக்களின் முதுகில் குத்திய "தமிழ்தேசியம்"

ஐ.நாவையும், அமெரிக்காவையும் நம்பு என்று கூறியதன் மூலம் காட்டிக்கொடுத்து சரணடைந்த "தமிழ்தேசியம்"; இன்று மக்களுக்கு தீர்வாக அடிமைத்தனத்தையே வாழ்வாக்கி இருக்கின்றது. ஐ.நா பரிந்துரையான "கலப்பு நீதிமன்றம்" என்ற "தமிழ்தேசியத்துக்கு" இனிப்பாக இருந்த அரைகுறை பகுதியையும், அமெரிக்கா தன் நலனுக்கு ஏற்ப வெட்டி நீக்கி விட்ட நிலையில் - அந்தத் தீர்மானத்தை கூட்டமைப்பு அங்கீகரித்து வரவேற்றுள்ள நிலையில் -"தமிழனின் தமிழ்தேசியம்" அரசியல் ரீதியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கின்றது.

அமெரிக்க தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட "தமிழ்தேசிய" கூட்டமைப்பும் - அதை ஏற்க மறுக்கும் "தமிழ் தேசிய" பிழைப்புவாதிகளும், ஐ.நாவும்-அமெரிக்காவும் தான் "தமிழரின்" விடிவுக்கான பாதை என்று சொல்லி- மக்களை செயலற்ற மந்தைகளாக்கியவர்கள். அடுத்து என்ன என்று தெரியாது நிலையில் அரசியல் அனாதையாக்கியுள்ளனர்.

மக்களை அணி திரட்டாத அன்னியனை நம்பும் இந்தக்கூலி அரசியல் இன்றுமட்டும் நடந்ததில்லை. 1980களில் இந்தியாவை நம்பி மக்களை கைவிட்டு இந்தியாவின் கூலிப்படையாக மாறிய இயக்கங்களிடம் இருந்தும் - 2009 இல் மேற்கை நம்பி மக்களை கேடயமாக மாற்றி பலி கொடுத்து நடத்திய இறுதி யுத்தத்தில் இருந்தும், "தமிழ் தேசியமும்" - மக்களும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. அதுதான் 2015 இல் மீளவும் ஐ.நா-அமெரிக்கா மூலம் அரங்கேற்றியுள்ளது.

யுத்தம் முடிந்து 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில் - கடந்தகால குற்றங்களுக்கு தண்டனை என்பது எப்படி போலியானதாக மோசடியாக இருக்கப் போகின்றதோ - அதேபோல் இனப்பிரச்சனைக்கான தீர்வும் அமையப் போகின்றது. அரசும் - கூட்டமைப்பும் அமெரிக்காவின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கின்றதானது - நவதாராள பொருளாதாரஅமைப்பு முறையை இலங்கை மக்கள் மேல் திணித்தலாகும். அதாவது இலங்கை மக்களின் தேசிய பொருளாதாரக் கூறுகளை அழித்து - நவதாராள பொருளாதாரத்தை நிறுவுவதாகும். கூட்டமைப்பும் - அரசும் அமெரிக்கா விரும்புவது போல் ,தேசியக் கூறுகளை அழித்தல் என்னும் நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டு பயணிக்கின்ற அரசியல் அடிப்படையே- இன்றுஅமெரிக்க தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளுகின்ற வர்க்க ரீதியான பொதுமுடிவுக்கு இட்டுச் சென்றுள்ளது.

கூட்டமைப்பு தமிழனை அடக்கியாளும் வர்க்க ரீதியான இன அதிகாரங்கள் நோக்கிய அதன் சொந்தக் கனவுகளே தமிழரின் பிரச்சனைக்கு தீர்வாக இருப்பதுபோல் - இன்று அரசுடன் கூடி வர்க்க அதிகாரத்தை அனுபவிக்கும் நிலைக்கு தன்னை குறுக்கி அதை வெளிப்படையாக வெளிப்டுத்தி வருகின்றது.

யுத்தம் சார்ந்து மக்களின் அடிப்படை பிரச்சனைக்கு தீர்வை முன்னிறுத்தி மக்களை அணி திரட்டவோ - மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைக்காக போராடவோ தயாரற்ற கூட்டமைப்பு - அரசு போல் தனது வர்க்க நலனை முன்னிறுத்திக் கொண்டு அதை முதன்மையாக்கி "தமிழ்தேசியத்தை" காயடித்து வருகின்றது.

புலம்பெயர் நாடுகளில் "தமிழ்தேசியத்தை" முன்வைத்துப் பிழைக்கும் புலியடையாள அரசியலும் - கூட்டமைப்பில் தமக்கான இடம் கிடைக்காதவர்களின் "தமிழ்தேசியமும்", அவர்கள் ஆதரித்து - முன்னிறுத்திய அமெரிக்காவினால் இன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. 2009 இல் எப்படி புலிக்கு ஒரு முடிவு ஏற்பட்டதோ - அதே முடிவு இன்று "தமிழ்தேசியத்துக்கு" வந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களின் சமவுரிமைக்கான போராட்டமும் - தீர்வும், மக்கள் தங்கள் பிரச்சனைக்காக அணிதிரண்டு போராடுவதன் மூலமும் - அனைத்து இன மதமக்களும் ஒன்று பட்டு தீர்வு காண்பதுமே, எஞ்சியுள்ள ஓரேயொருஅரசியல் வழியாகும்.

இங்கு ஒடுக்கப்பட்ட மக்களும் - வர்க்க ரீதியாக சுரண்டப்படும் மக்களும் ஒன்றுபட்டு போராடுவதால் மட்டும் தான், ஆளும் வர்க்கத்தையும் - வர்க்கரீதியாக அமெரிக்காவின் தலைமையில் ஓன்றுபட்டுள்ள அரசு - கூட்டமைப்பை தோற்கடித்து, முழு மக்களுக்குமான மனித வரலாற்றை உருவாக்க முடியும். இதை அரசியல் நோக்காகக் கொண்ட அரசியல் நடைமுறைமட்டும் தான், மக்கள் சார்ந்த ஒன்றாக எம்முன் இருக்கின்றது.