Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

நீரில் மூழ்கி மிதந்த சென்னையும் - தனிவுடமை நாகரிகமும்

நீரில் மூழ்கி மிதந்த சென்னை மக்களின் அவலம், இயற்கையினதும், வழமையை மீறிய மழையினது விளைவா? இப்படிக் காரணம் தேட, காட்ட முற்படுவதானது, சமூகத்தன்மையற்ற வக்கிரமாகும்;. இதன் பின் சமூகத்தன்மை எதுவும் இருப்பதில்லை.

நீரில் புதைந்துவிட்ட மனிதர்களை மீட்கும் நடவடிக்கை எதையும் எடுக்காது, நிவாரணம் எதையும் வழங்காது, கைவிட்டுவிட்ட அரச இயந்திரத்தின் பாராமுகத்தனமானது, அரசு குறித்தான கேள்வியாகி விடுகின்றது.

தங்களது விளம்பரங்களை முன்னிறுத்திய அரசியல்வாதிகளின் உதவிகளும், நடிகர்கள் நடிகைகளின் சுய தம்பட்ட விளம்பரங்களும், மனித அவலத்தைக் கூட ஆதாயமாக்கி எதிர்காலத்தில் பணமாக்குகின்றதைத் தாண்டி, இதற்குள் மனிதத்தன்மை கிடையாது.

கோடிகோடியாக வரிச்சலுகை பெற்று, தமிழகத்தை கொள்ளையடிக்கும் முதலாளிகள் எங்கே? அவர்களைக் காணவில்லை என்று யாரும் கோராததும், அரசியல்வாதிகளையும் சினிமாக்காரரையும் காணவில்லை என்று கோரியதானது, அவர்களின் சமூக நோக்கு குறித்தான கேள்வியாகும்.

இந்த இயற்கை நிலை ஏன் தோன்றியது என்பது குறித்து அக்கறைப்படாத வேறான அக்கறைகள் என்பது, உண்மையான மாற்றம் மீதானதல்ல. சென்னை அவலத்தின் பின்பும் நாகரீக மனிதனின் அரசியல் முதல் அவனின் சிந்தனை, செயல் அனைத்தும், கேள்விக்குரிய ஒன்றாக இருக்கின்றது.  

அரசு குறித்து

அரசு நிறுவனங்கள் தனிவுடமையிலான நிறுவனங்களாக மாறிவிட்ட நிலையில், அரசு இயந்திரம் என்பது செயலற்ற உறுப்பாகும். தனிவுடமை நிறுவனங்களின் மீட்பு நடவடிக்கை என்பது பணம் கொடுத்தால் தான் சாத்தியம்;. இன்று அரசு நிறுவனங்கள் தனிவுடமையான பின், அரசு கொண்டு இருப்பது மக்களை ஒடுக்கும் இயந்திரம் மட்டும் தான்;. இந்த நிலையை மனித நாகரீகமாக, சுறுசுறுப்பாக தனிவுடமை இயந்திரத்தை முன்னிறுத்திய, மனித நாகரீகத்தை இயற்கையை கேள்விக்குள்ளாகி இருக்கின்றது.

செயலற்ற தனிவுடமை சிந்தனையும் வாழ்க்கை முறையையும், இயற்கையின் சீற்றம் தகர்த்து இருக்கின்றது. நீரில் மூழ்கிய மக்களை மீட்கும் பணியில் மக்களின் சொந்த ஆற்றல் வெளிப்பட்டதும், அவர்கள் கொடுத்த ஆதரவும் தான், தப்பிப்பிழைத்த மக்களுக்கு மூச்சைக் கொடுத்தது.

தனிவுடைமைச் சிந்தனை செயலுக்கு பதில், சமூக ஆற்றலான சாதி இனம் மதம் அனைத்தையும் தகர்த்து மேலெழுந்ததும், அவர்களது சமூக பணி தான் மக்களை ஆற்றல்படுத்தியது.

மனித ஆற்றலும் -  தனிமனித உணர்வைக் கடந்து சமூக உணர்வும் எவ்வளவு மகத்தானது, பலமானது என்பதை, மனிதன் தன் சொந்த நடத்தைகள் மூலம் எடுத்துக் காட்டி இருக்கின்றான். சுய விளம்பரங்கள் ஏதுமற்ற மனித நேசிப்பும், முகமற்ற சமூக மனிதனின் வாழ்க்கையும் தான், மனித நாகரீகமாக இன்று எஞ்சியிருக்கின்றது. இவை அல்லாத அனைத்தும் மனித தன்மையை அழிக்கின்ற, சுய விளம்பரங்கள் தான்.                       

இயற்கை அழிவின் பின்னான உண்மைகள் 

1. இயற்கை குறித்து மனித சிந்தனை: இயற்கைச் சூழலை அழித்து உருவாகும் அழகியலும், இயற்கையை செல்வமாக கருதி சுரண்டும் தனிவுடமையும் தான், சென்னையை நீரில் மிதக்க வைத்தது. இயற்கையைப் பாதுகாக்கின்ற மனித முயற்சியானது, இயற்கையை அழிக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராக இருக்காத வரை, இந்த அழிவுக்கு அவர்களும் பொறுப்பாளிகள் தான். சந்தை தன் பொருளை அழகியலாக விற்கின்றது என்பதும், இயற்கையை அழிப்பதே அழகியல் கண்ணோட்மாகி மனித வாழ்க்கையைப் பலியிடுகின்றது.        

2. அழிவுக்கு யார் பொறுப்பு: சுற்றுச்சூழலை அழித்து செல்வத்தை குவித்து உலகமயமாகும்  தனிவுடமைக் கொள்கை மூலம் மட்டும், சென்னை நீரில் மூழ்கியதை விளங்கிவிட முடியாது. மாறாக இந்தத் தனிவுடமை கொள்கையை அடிப்படையாகக் கொண்ட இந்திய, தமிழக அரசின் பங்கு இதற்குள் இருக்கின்றது. அத்துடன் சென்னை நகரத்தின் இயற்கையான நீர் தேக்கங்களை அழித்து, நீரை உள் இழுக்கும் கிணறுகளை மூடியும், இயற்கையான நீர் வடியும் பாதைகளை அழித்து, நிலத்தில் நீர் கீழ் செல்ல முடியாது கொங்கிரிட் தார் பளிங்கு கற்கள் கொண்டு தரையை மூடியும் - வெறும் கல்லுகளைக் கொண்டு நகரமயமாக்களில் விளைவுகளால் தான் சென்னை மூழ்கியது.  

அரசு என்பது மக்களுக்காக செயலாற்றும் உறுப்பு அல்ல : வெள்ளத்தில் மிதந்த மக்களை அவலங்களில் இருந்து மீட்கும் சமூக உறுப்பு அல்ல அரசு என்பதை எடுத்துக் காட்டி இருக்கின்றது. அரசு என்பது இயற்கையை அழிக்கும் சுரண்டும் வர்க்கத்தின் உறுப்பாகவும், அந்த வர்க்கத்தை பாதுகாக்கும் வன்முறைக் கும்பலாக மட்டும் எஞ்சி இயங்குகின்றது என்பதை காணமுடியும்;.

முடிவாக

இது வெறுமனே ஜெயலலிதாவின் அரசு குறித்தல்ல, மாறாக அரசு இயந்திரம் என்பது குறித்தான கேள்வியாகும்.

நடிகர்கள், பிரமுகர்கள் எவ்வளவு பணம் தந்தார்கள் என்ன செய்தார்கள் என்பதல்ல, சமூகம் வெள்ளத்தில் மிதக்க அவர்களும், அவர்களின் சொத்துக்களும் எப்படி பாதுகாப்பாக இருக்கின்றது என்பது குறித்தான கேள்வியாகும்.

அரசியல்வாதிகளின் நடத்தைகள் தொடர்பானதல்ல, அவர்களின் சமூக நோக்கம் குறித்தான கேள்வியாகும்.

மனித அழிவு ஏற்படுத்திய இயற்கை குறித்தல்ல, சுற்றுசூழல் குறித்தான கேள்வியாகும்.