Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

"ஒளிமயமான" நாட்டைப் பற்றி "நல்லாட்சி" அரசு

தேர்தலை நடத்துவதும், வாக்குப்போட வைப்பதுவும், அமைதியான ஆட்சிமாற்றத்தை நடத்துவதும், சட்டத்தின் ஆட்சியை நடத்துவதும் இதைத்தான் "ஜனநாயகம்" என்கின்றனர். இதற்கு அமைவான முகமாற்றத்தையே நாட்டின் "நல்லாட்சி" என்று கூறியவர்கள் தொடங்கி முகமாற்றம் மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தரும் என்று நம்பி வாக்களித்தவர்கள் வரை, காலாகாலமாக ஏமாற்றப்படுவதும் இறுதியில் மக்கள் தங்கள் உரிமைகளை இழப்பதும் தொடருகின்றது.

அரசு "நல்லாட்சி" என்று கருதுவது, தனியார் பொருளாதாரக் கொள்கையைத்தான். அதாவது சமூகம் சார்ந்த பொருளாதாரக் கொள்கையல்ல, மாறாக தனியார் பொருளாதாரக் கொள்கையை அரசு முன்வைக்கின்றது. செல்வத்தை குவித்து வைத்துள்ளவர்கள் தங்கள் செல்வத்தை பெருக்கும் வண்ணம், நாட்டின் சமூகப் பொருளாதாரத்தை எப்படி மாற்றுவது என்பது குறித்தும், அதைச் சட்டரீதியானதாக சட்டத்தின் ஆட்சியாக மாற்றுவதே, அரசின் கொள்கை மட்டுமல்ல நடைமுறையாகவும் இருக்கின்றது.

நவதாராளமயமாதலுக்கு முன், சொந்த நாட்டுச் செல்வந்தர்கள் குறித்து அரசுகளிடம் இருந்த பொது அக்கறை என்பது, இன்று உலக செல்வந்தர்களின் பொதுநலன் குறித்த அக்கறையாக மாறிவிட்டது. உலக மூலதனம் செல்வத்தைக் குவிக்க, நாட்டுக்குள்ளான உலக மூலதனத்தின் செயற்பாட்டையே நாட்டின் அபிவிருத்தியாக அரசு முன்வைக்கின்றது.

2016 க்கான அரசின் வரவு செலவுத் திட்டம் இந்தக் கொள்கையை முன்வைக்கும் போது "எமது அரசாங்கத்தின் கொள்கையானது, சந்தைகளில் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான தடைகளை நீக்குவதனை மையமாகக் கொண்டுள்ளது. கொள்கைக்கூற்றின் சீர்திருத்தங்கள் இக்கூற்றில் பிரதான இடத்தைப் பெறுகின்றன. முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தனியார் துறையின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது மாத்திரமல்லாது முழுமையான பொருளாதாரச் செயன்முறையில் அவர்களின் பங்கையும் உறுதிப்படுத்துவதாக..." அமையும் என்கின்றது. இதுதான் அரசு மக்களுக்கு காட்டு "ஓளிமயமான நல்லாட்சிக்" கொள்கை.

தனியார்துறை செல்வத்தைக் குவிக்கும் இந்தச் செயற்பாடு என்பது, மக்களிடம் இருந்து செல்வத்தை பறிப்பது தான். செல்வம் உழைப்பிலானது என்பதும், அதை பறித்தெடுக்காமல் செல்வத்தை தனிநபர்கள் குவிக்க முடியாது என்பதே பொருளாதார விதியாகும்.

இதைத்தான் அரசு இன்று முன்வைக்கின்றது. நாட்டின் முழுப் பொருளாதாரத்தையும் தனியார் மயமாக்குவது, அதற்குக் கட்டுபாடற்ற சுதந்திரத்தை வழங்குவதை அரசு "நல்லாட்சிக்கான" பொருளாதாரமாக முன்வைக்கின்றது. இதன் மூலம் மனித உழைப்பை எந்த நிபந்தனையுமின்றி பெறும் வண்ணமும், சந்தையை கட்டுப்பாடற்ற வகையில் தீர்மானிக்கும் தனியார் பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம், சமூகம் சார்ந்து அரசின் பொருளாதாரப் பங்கை முற்றாக இல்லாதாக்குவதை வரவு செலவுத் திட்டம் முன்வைக்கின்றது. அதாவது சமூகம் சார்ந்த உழைக்கும் மக்கள் சார்ந்த நாட்டின் பொருளாதார மற்றும் சட்டரீதியான உரிமைகளை இல்லாதாக்குவதையே நாட்டின் "ஒளியாக" முன்னிறுத்துகின்றது.

அரசு மிகத்தெளிவாக "இப்பொருளாதார சீர்திருத்தச் செயன்முறையின் பிரதான எண்ணக் கருவாக “எந்தவொரு அரசாங்கமும் வியாபாரம் செய்வதற்கான வியாபாரத்தில் ஈடுபட முடியாது” என்பதையும், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பொறிமுறை தனியார் துறையாக இருக்க வேண்டும் என்பதையும் பிரதானமாகக் குறிப்பிட முடியும்" என்று கூறும் அரசு "இறக்குமதிக் கட்டுப்பாடுகளைக் குறைத்தல், கடன் சந்தைகளை விடுவித்தல், ஒன்றிணைக்கப்பட்ட செலாவணி விகித முறைமைகளின் அறிமுகம், அரச நிறுவனங்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ள வர்த்தக தனியுரிமைகளை இல்லாதொழித்தல், விலைக் கட்டுப்பாட்டு முறைமைகளை நீக்குதல் மற்றும் அரசுடமை தொழில் முயற்சிகளை தனியார்மயப்படுத்தல் போன்ற இன்னோரன்னவைகளே இக்கால கட்டத்தில் மேற்கோள்ளப்படவுள்ள தீவிரமான சீர்திருத்தங்களாகும்." என்கின்றது.

அரசின் இந்த கொள்கையால் நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கையை இழப்பார்கள் என்பது தெள்ளத் தெளிவாகின்றது. இங்கு புதிய பொலிஸ் நிலையங்கள் எதற்கு அமைக்கப்படுகின்றது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. அரசு 2016 ஆண்டு வரவு செலவுத் திட்டம் மூலம், முழு மக்களுக்கும் எதிராக புதிய யுத்தத்தை பிரகடனம் செய்திருக்கின்றது. அரசின் இந்தக் கொள்கை முடிவுகளை விளங்கிக் கொள்ள முனைவோம்.

1. "அரசுடமை தொழில் முயற்சிகளை தனியார்மயப்படுத்துவது" பற்றி அறிவித்துள்ளது அரசு துறை சார்ந்து தொழில் செய்கின்ற மக்கள் - தங்கள் தொழிலை தனியார் தொழில் முறையாக மாற்றக் கோரியா வாக்களித்தனர்? முகமாற்றத்திற்கு வாக்களிக்கக் கோரியவர்களின் அரசியல் பித்தலாட்டம், இன்று இதைப் பற்றி பேசாது இருப்பதன் மூலம் உண்மைகளை மக்களுக்கு மூடிமறைக்கின்றனர். எதற்காக மக்கள் வாக்களித்தனர்? அரசு முன்வைக்கும் தனியார் பொருளாதாரக் கொள்கையா!, மக்களின் தெரிவு? ஆக இது செல்வத்தைக் குவிக்கின்ற - தனியார் பன்னாட்டு மூலதனத்தின் தெரிவல்லவா? அரசு அதையே தனது கொள்கையாக முன்வைத்திருக்கின்றது.

அரசுடமைகள் தனியார்மயமாவதற்கு எதிராக அரசுதுறை ஊழியர்களின் போராட்டங்களும், அரசு தொழில்துறை சார்ந்து மக்கள் பெற்ற நன்மைகள் பறிபோவதற்கு எதிரான போராட்டங்களும் தவிர்க்க முடியாத ஒன்றாக மக்கள் மேல் அரசு திணித்திருக்கின்றது. 2016 இல் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நடத்துமாறு, அரசு தன் கொள்கை ரீதியான நடைமுறைகள் மூலம் மக்களைக் கோரியிருக்கின்றது. மக்களுக்கு எதிராக அரசு வலிந்து திணிக்கின்ற நெருக்கடி, நாட்டில் அமைதியீனத்தை உருவாக்கி வருகின்றது. இதை அடக்க புதிய பொலிஸ் நிலையங்கள்.

அரசின் கொள்கையோ மக்களின் வாழ்க்கை சார்ந்த போராட்டத்தை "இருட்டாகவும்" - அவர்களை ஒடுக்கி "ஒளியேற்றும்" மெழுகுவர்த்தியாக (புதிய) பொலிஸ் நிலையங்கள் இருக்கப் போவதை பறைசாற்றுகின்றது.

2. "விலைக் கட்டுப்பாட்டு முறைமைகளை நீக்கு"குவதை நாட்டின் "நல்லாட்சியாக" அரசு முன்வைக்கின்றது. இதன் அர்த்தம் பொருட்களின் விலையில் அரசு தலையிடுவதை கைவிடுவதன் மூலம், தனியார் பொருட்களின் விலையை தீர்மானிக்கக் கோருகின்றது. தனியார் பொருட்களைக் கொண்டு மக்களை கொள்ளையிடும் அதன் விருப்பம் எதுவோ, அதை அரசு தன் கொள்கையாக முன்வைத்திருக்கின்றது.

பொருளைச் சந்தையில் குவிப்பது, பதுக்குவது, பொருளை முன்கூட்டியே வாங்கி சந்தையில் தட்டுப்பாட்டை உருவாக்குவது உள்ளுர் சுய உற்பத்தியை அழிக்க சந்தையில் அதன் பெறுமதியை இல்லாதாக்குவது, உற்பத்தி மீது வர்த்தக ஆதிக்கத்தை உருவாக்குவது, என்று பணத்தை சம்பாதிக்க தனியார் வர்த்தக சமூகத்துக்கு எது தேவையோ, அதை அதன் உரி;மையாக அரசு வழங்குகின்றது.

உதாரணமாக அரசு உள்ளுர் உற்பத்திகள் அன்னிய பொருட்களுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் வழங்கிய மானியங்களை (உதாரணமாக உர மானியம் நிறுத்தப்பட்டு வருடாந்தம் விவசாயிக்கு 25000 ரூபா மட்டும் வழங்கப்படும் புதிய கொள்கை) நிறுத்துவதன் மூலம் உள்ளுர் உற்பத்திகள் அழிக்கப்படுவதை 2016 வரவு செலவுத் திட்டம் உறுதி செய்கின்றது. தாறுமாறாக விலை அதிகரிப்பும், சிறு உற்பத்தியாளர்களின் கட்டுப்படியாகாத உற்பத்தி விலையும், நுகர்வோர் மற்றும் சிறு உற்பத்தித்துறை சார்ந்த மக்களின் ஒன்றிணைந்த வாழ்க்கை போராட்டத்தை அரசுக்கு எதிராக நடத்துமாறு வரவுசெலவு மக்கள் மேல் திணித்திருக்கின்றது.

3. "அரச நிறுவனங்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ள வர்த்தக தனியுரிமைகளை இல்லாதொழித்தல்" மூலம், சந்தையை தனிப்பட்ட முதலாளிகளிடம் தாரை வார்த்திருக்கின்றது. குறிப்பாக விலைக்கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அரசின் வர்த்தகமுறை நீக்கப்படுவதன் மூலம், வர்த்தகத்தில் தனியார் ஆதிக்கத்தை முன்வைத்திருக்கின்றது. பொருட்களின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பொருட்களின விலை அதிகரிப்பையும், உற்பத்தி காலத்தில் சந்தையில் பொருளைக் குவித்து உற்பத்தியை மலிவாக கொள்முதல் செய்வதன் மூலம், மக்களைத் தனியார் கொள்ளையடிக்கவும், தேசிய உற்பத்திகள் அழிக்கப்படுவதன் அவசியத்தை 2016க்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கின்றது. இதன் மூலம் சந்தையில் பன்னாட்டு உற்பத்திகளைக் குவிக்கவும், நிலத்தையும் தொழிற்துறையையும் பன்னாட்டு துறையிடம் கையளிக்கவும் வழிகாட்டுகின்றது.

4. "இறக்குமதிக் கட்டுப்பாடுகளைக் குறைத்தல்" பற்றி அரசு முன்மொழிகின்றது. கட்டுப்பாடற்ற இறக்குமதியைக் கோருகின்றது. இது உள்ளுர் உற்பத்தியை அழிக்கும் வண்ணம், சிறு தொழில்களைக் கைவிடும் வண்ணம், பன்னாட்டு நிறுவனங்களிடம் உற்பத்திச் சாதனங்களை கையளிக்கும் வண்ணம், சர்வதேச சந்தையில் இருந்து பொருட்களை உள்கொண்டு வரக்கோருகின்றது.

அதேநேரம் ஆடம்பரப் பொருட்ளைக் கொண்டு மக்களின் வாழ்க்கையைச் சூறையாட கோருகின்றது. இலங்கை மக்கள் தேவையின் பாலான நுகர்வுக்கு கொடுத்த சமூக முக்கியத்துவத்தை அழித்து, அதற்குப் பதிலாக தனிநபர் நுகர்வுக்கு முக்கியத்துவதை முன்வைத்திருக்கின்றது. இதன் மூலம் மூலதனத்தைக் குவிக்கின்ற தனியார் கொழுக்குமாறு வரவு செலவுத் திட்டம் வழிவகுத்திருக்கின்றது.

5. "கடன் சந்தைகளை விடுவித்தல்" மூலம் கடன் வாங்குவதில் இருந்த அரசுக் கட்டுப்பாட்டை இல்லாதாக்கி இருக்கின்றது. வங்கிகளில் மக்களின் சேமிப்புகள், ஓய்வூதியப் பணம், காப்புறுதிப் பணம் எந்தக் கடடுப்;பாடுமின்றி சுதந்திரமாக தனியாருக்கு வழங்குவதற்கு இது வழிவகுத்திருக்கின்றது. இதன் மூலம் அரசு இதுவரை காலம் மக்களின் பணத்துக்கு பொறுப்பு கூறும் முறையை இல்லாதாக்கி இருக்கின்றது.

அதேநேரம் வெளிநாட்டுக் கடன்களை தனியார் பெறுவதற்கு அரசு வழங்கும் உத்தரவாதத்தை கொண்டு கடன் கொடுக்கும் முறைக்குப் பின்னால், அரசு கொண்டு இருந்த நிபந்தனைகளை இல்லாதாக்கி இருக்கின்றது. இதன் மூலம் கடன் பெறுகின்றவர் அன்னிய கடன்களை கொடுக்காத பட்சத்தில், அரசு மக்களிடம் இருந்து அறவிட்டு கொடுக்கும் வண்ணம், கடன் சந்தையை சுதந்திரமாக்கி இருக்கின்றது.

6. "ஒன்றிணைக்கப்பட்ட செலாவணி விகித முறைமைகளின் அறிமுகம்" மூலம், வரவு செலவு மூலம் தனித்தனி ஓதுக்கீட்டு அடிப்படையில் செயற்பட்ட செலாவணி முறை நிறுத்தப்படுகின்றது. அதாவது முன்பு வரவு செலவு திட்டம் ஓவ்வொரு துறை சார்ந்த நிதி ஓதுக்கீட்டு முறையைக் கொண்டு இருந்தது.

துறைசார்ந்த நிதி ஒதுக்கீடும் செலவும் என்ற முறை மாற்றப்பட்டு, செலவை முன்னிறுத்தி ஓதுக்கீட்டைக் கோருகின்ற முறை முன்வைக்கப்பட்டு இருக்கின்றது. நிதி கோராமல் மக்களை சென்றடைந்த கடந்தகால நிதி சார்ந்த பயன்பாடுகள், இனி கோருவதன் மூலம் நிதி ஓதுக்கீடு என்பது நிதிப் பகிர்தலை இல்லாதாக்குகின்றது.

செல்வத்தை வைத்திருப்பவர்கள் அதை மேலும் குவிப்பதற்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை அரசு மாற்றி அமைக்கின்றது. செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றவர்களுக்கு, தேச எல்லை கிடையாது. இன்று உலகில் ஒரு சதவீதம் பேரின் செல்வம் மற்றைய அனைவரையும் விட அதிகமாகிவிட்ட வழிகளில், மேலும் செல்வந்தர்கள் செல்வத்தை குவிப்பதற்கு அரசுகள் உதவுகின்றது.

இப்படி செல்வத்தை குவிக்கும் அவர்களின் முயற்சியையே நாட்டின் அபிவிருத்தியாக மக்களின் வேலைவாய்ப்பாக அரசு முன்வைக்கின்றது. உண்மையில் இது சாத்தியமா? சீனா, இந்தியா, பிரேசில் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டின் திறந்த பொருளாதாரத்தை மீறி இலங்கையில் எப்படி இது சாத்தியமாகும்?

தொடர்புடைய ஏனைய ஆக்கங்கள்

1.  2016க்குள் 172 புதிய பொலிஸ் நிலையங்கள் - முகமாற்றம் தருகின்ற "நல்லாட்சியின்" தரிசனங்கள்

2.  எம் பச்சை வயல்களை பறிக்க வரும் கொள்ளையர்கள்

3.  கூட்டுக்கொள்ளைக்கு கொழும்பில் திட்டம்