Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"அரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்களும் கட்டி ஆடுகிற சலங்கை"யா? சிவசேனா

இப்படிக் கூறி "இதுவும் கடந்துபோகும்!" என்று கூறுகின்ற பொழிப்புரையானது, பகவத்கீதையில் காண முடியும்.

"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்"

சிவசேனாவின் வருகை குறித்தும் பகவத்கீதை கூறுவது போன்று, கண்ணை மூடிக்கொள் என்ற உபதேசங்களுக்கு குறைவில்லை. ஆக எது நடந்ததாலும் "இதுவும் கடந்துபோகும்!" என்கின்றனர். இது தான் இந்து வெள்ளாளிய யாழ்ப்பாணியக் குணாம்சம். சிவசேனா குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. "சிவசேனா" என்பது சும்மா ஊதிப்பெருப்பிக்கும் "வேலை வெட்டியில்லாத – காரியவாதிகளல்லாத" சமூக ஆர்வலர்களின், அரசியல்வாதிகளின் பித்தலாட்டமாக காட்டுகின்றனர்.

இன்று "இதுவும் கடந்துபோகும்!" என்று யார் சொன்னது என்பதை விட, யாழ் இந்து வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பின் நலன்களை அனுபவிக்கின்றவர்களின் பொதுக் கண்ணோட்டம் இதுவாகும்.

இந்துத்துவ சிவசேனாவின் வருகையை அறிவுபூர்வமாக பாதுகாக்க முனைகின்றவர்கள் "அரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்களும் கட்டி ஆடுகிற சலங்கையாக" சிவசேனாவைக் காட்ட முற்படுகின்றனர். இதற்;கு அமைவாக பௌத்த அடிப்படைவாதம் இலங்கையில் எதையும் செய்ய முடியாத ஒன்றாக இருப்பதாகவும், எதையும் செய்யாத ஒன்றாகவும், இட்டுக்காட்டுகின்ற பின்னணியில் சிவசேனா பற்றி கூறப்படுகின்றது.

இலங்கை இன முரண்பாடானது, பௌத்த சிங்கள அடிப்படைவாதங்களின் பின்னணியில் கொலுவேற்று இருப்பதும், இலங்கையின் அரசியல் சட்ட அமைப்பே பௌத்தத்துக்கு முதன்மையான இடத்தை வழங்குகின்றது. இலங்கையில் நடந்த இன – மத கலவரங்களில், பௌத்த அடிப்படைவாதத்தின் தலையீடு இன்றி நடந்ததில்லை. இலங்கையில் பௌத்த அடிப்படைவாதமானது, இனவாத அதிகாரத்துடன் ஒன்றிக் காணப்படுகின்றது.

இனவாதம் என்பது சாதி மற்றும் மத அடிப்படைவாதத்துடன் ஒன்றிணைந்ததே. சிங்கள – தமிழ் என்று, எந்த இனவாதமாக இருந்தாலும், சமூகத்தில் காணப்படும் சாதி மதம் ஆணாதிக்கம் என்று அனைத்து பிற்போக்குடனும் ஒன்றிணைந்து தான் இயங்க முடியும்.

இந்த வகையில் "தமிழர்" என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் யாழ் இந்து வெள்ளாள சாதிய சமூக அமைப்பே, சிவசேனாவின் அடிப்படைக் கொள்கையை தனக்குள் கொண்டு இருக்கின்றது. அந்த வீரியமான தன்மையை தட்டி எழுப்பி சமூகத்திற்கு தலைமை தாங்கி அழைத்துச் செல்ல விரும்புகின்றவர்கள் அணியாக, சிவசேனாவின் வருகையை புரிந்து கொள்ள முடியும்.

யாழ் வெள்ளாளிய சாதிய சமூக பண்பாட்டுச் சன்னதங்களை தலைமை தாங்க வெள்ளாளிய சிவசேனா முனைகின்றது. இதை மறுத்து "இந்துமதவெறி மனநிலையற்ற, இந்துத்துவ அடிப்படைவாதமற்ற சமூகத்தில் அது யாரை நெருங்கிவருதல் கூடும்?" என்று கூறுகின்றவர்கள், பொய்யை உரைக்கின்றனர்.

வடக்கில் வீதிக்கு வீதி, சாதிக்கு சாதி கோயில்களாக மாறிவரும் இந்துத்துவ சாதிய சூழல், வெள்ளாளிய ஊருக்குள் பிற சாதிகள் வாழ முடியாத வண்ணம் தீண்டாமை கடைப்பிடிக்கும் ஊர் (வெள்ளாளிய) தீர்மானங்கள், சாதிப் பண்;பாடுகளை கலாச்சாரமாக மாறி பெண்களை சேலை அணியக் கோரும் ஆணாதிக்க வக்கிரங்கள், மூலை முடுக்கெங்கும் மாட்டு கொத்து ரொட்டிக் கடைகள் இருந்த இடங்கள் சைவ உணவகங்களாக மாறிவரும் காட்சிகள், சிவசேனாவின் வருகையை கட்டியம் கூறி நிற்கின்றது. பொது நிகழ்வுகள் மத நிகழ்வுகளாக மாறிவிட்ட பின்புலத்தில், பாடசாலைகள் முதல் யாழ் பல்கலைக்கழகம் வரை மத அடையாளங்கள் முன்னிறுத்தப்பட்டு, அதுவே சமூகத்தின் முதன்மையான அடையாளமாகிவிட்ட பின்புலத்தில் சிவசேனாவின் வருகை அரங்கேறுகின்றது.

பகுத்தறிவற்ற மனித நடத்தைகளாகவும், சமூக உணர்வற்ற சுயநலம் கொண்டதாகவும், யாழ்ப்பாணிய வெள்ளாளியத்தனத்தை கொண்ட சமூகத்தை, "இந்துமதவெறி மனநிலையற்ற, இந்துத்துவ அடிப்படைவாதமற்ற.." என்று கூறுவதற்கு, பின்னாலான சிந்தனையும், "இதுவும் கடந்துபோகும்!" என்று கூறுகின்ற பின்னணியில், சமூகத்தை மாற்றுவதற்கு எதிரான சிந்தனையும் நடைமுறையும் இருக்க முடியும்.

"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்"

என்று பகவத்கீதை கூறுவது போல் "இதுவும் கடந்துபோகும்!" என்கின்றனர். இப்படி கருத்து கூறுகின்றளவுக்கு, இந்துத்துவ வெள்ளாளிய சாதியம் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துரைக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் ஆட்சி அதிகாரங்களையும், மக்களை ஒடுக்கும் இந்து வானரங்களின் (அனுமானாக வரும்) இலங்கை வருகை பெரிய விடையமல்ல என்று கூறுமளவுக்கு, இந்துமயமாக்கலுக்கு ஆதரவான, செயலற்ற அரசியல் போக்கை முன்வைக்கின்றது.

"இதுவும் கடந்துபோகும்!" என்பது வடக்கில் நடந்தேறுகின்ற இந்து மயமாக்கல், சாதி மயமாக்கலின் வழியில் சிவசேனாவின வருகையை அங்கீகரிப்பது தான்;. இந்து வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பில் வாழ்ந்தபடி, அதற்கு எதிராக புதிய சமூகத்தை நடைமுறையில் உருவாக்குவதற்காக போராடாத வெற்றுக் கண்டனங்கள் ஒருபுறும். மறுபக்கத்தில் "இதுவும் கடந்துபோகும்!" என்பது, இந்து சாதி வெள்ளாள சமூக அமைப்பினை பாதுகாத்து அங்கீரிப்பது தான்.

தனிமனித உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் வடிகாலாக, செயலற்ற கருத்துகள் மாறி வருகின்ற பொதுப் பின்னணியில் இத்தகைய கூற்றுக்களை இணைத்துக் காண முடியும். தொலைக்காட்சிகள் மனிதர்களை மந்தையாக்கி அதற்கு பின்னால் அடிமையாக்கி விடுவது போல், சமூக வலைத்தளமானது உணர்வுகளும் உணர்ச்சிகளும் வடிகாலாகி செயலற்ற மனித பிண்டங்களாக்க கருத்துக்களை மாற்றி விடுகின்றது.

தங்களின் செயலற்ற வாழ்வுக்கு ஏற்ப கருத்துகளை முன்வைப்பதன் மூலம், "இதுவும் கடந்துபோகும்!" என்று கூறுமளவுக்கு சமூகத்தின் பொது அவலத்துக்கு எதிராக எதையும் செய்யத் தேவையில்லை என்று கூறுமளவுக்கு கருத்தை முன்னிறுத்தி செயலை நலமடித்து விடுகின்றனர்.

செயலற்று கருத்துகளில் வாழும் யாழ்ப்பாணிய சிந்தனையானது "இதுவும் கடந்துபோகும்!" என்ற கூறுகின்ற தர்க்கத்தை நியாயப்படுத்த, "சிவசேனா போன்ற இந்துவெறி அமைப்புகளின் இருப்புக்கு இந்துத்துவ அடிப்படைவாதம் செழுமை பெற்ற அல்லது வளர்ச்சியுறுகிற சமூக மனநிலை வேண்டும்." என்கின்றது. ஆக இது யாழ்ப்பாணிய வெள்ளாளச் சாதிச் சமூகம் இதற்கு தயாரான மனநிலை கொண்டு இல்லை என்ற கூறுகின்ற பொதுப்புத்தி வழியிலான வரட்டுத்தனமான மூடிமறைப்பாகும். இன்று "எங்கே யார் சாதி பார்க்கின்றனர்" என்பது போன்ற குட்டிபூர்சுவா வர்க்க சிந்தனையின் பாலானது.

சாக்கடைப் பன்றியைப் போல் இந்துத்துவ வெள்ளாள சாதிய அடையாளங்களுடன் புரண்டு எழும் வடக்கு முதலமைச்சரை தலைவராகக் கொண்டதே வெள்ளாளியச் சமூகம் குறிப்பாக யாழ்ப்பாணம் இன்று, இந்துத்துவ வெள்ளாளிய சாதிய வக்கிரத்தை முதன்மையாக்கும், சமூக நடைமுறையைத் தொடங்கி இருக்கின்றது. 1960 களில் நடந்த சாதியப் போராட்டம், 1980 களில் நடந்த தேசியப் போராட்டக் காலத்தில் இருந்த சாதிய அமைப்பிற்கு போன்றவற்றுக்கு மாறாக, வீரியம் பெற்ற சாதிய நடைமுறைகள் தோற்றம் பெற்று முதன்மைக் கூறாக மாறி வருகின்றது.

அதன் ஒரு வடிவம் தான் கோயில்கள். பழைய கோயில்களுடன் புதிய கோயில்கள், சாதி முரண்பாடுகள் கூர்மையாக்கி வரும் பொதுப் பின்னணியில், சாதிக்கொரு கோயில் என்று வடக்கில் சாதிய அடிப்படைவாதம் கொலுவேறுகின்றது. இதற்கு சமாந்தரமாக கிறிஸ்துவ, இஸ்லாமிய அடிப்படைவாதங்களும் போட்டி போட்டு வளர்கின்றது. தமிழ் சமூகம் மத அடிப்படைவாதத்துக்குள் வாழத் தொடங்கிவிட்டது. இதன் வளர்ச்சியானது, வன்முறை வடிவத்தின் தோற்றத்துக்கான தயாரிப்புக்களை தொடங்கி இருக்கின்றது.

அதாவது சமூகம் மத அடிப்படைவாதம் நோக்கி வளருகின்றது. மத மோதல்களுக்கான களம் தயாரிக்கப்படுகின்றது. நாட்டை ஆளுகின்றதும், பாராளுமன்ற அரசியலை முன்வைக்கின்ற நவதாராள சுரண்டும் வர்க்கம், மக்களை சுரண்டுவதற்காக மத ரீதியாக பிரித்தாளுவதற்கு ஏற்ப மதம் அரசியலாக மாறி வருகின்றது.

இந்தியாவின் யாழ் தூதராலயத்தின் செயற்பாடுகள் அனைத்தும் இதற்கு அனுசரணையாக மாறி இருக்கின்றது. இதை தூண்டி விடுவதும் இந்தியா தான்.

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாரம்பரிய கலைகள் அழிக்கப்படும் அளவுக்கு, இந்தியக் கலைகள் இறக்குமதி செய்யப்படுகின்றது. வடகிழக்கு உள்ளிட்ட தமிழர்களின் எல்லா நிகழ்வுகளிலும் இந்தியக் கலைகளும் கூத்துகளும் மேடையேற்றப்படுவதும், இதற்கு இந்தியா அனுசரணையாக இருப்பதும் வெளிப்படையானது. இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கலைகளைக் கூட, தனது அனுசரணைக்கு கீழ் கொண்டு புதிய தலைமுறைக்கு பழக்குகின்றது. ஒடுக்கப்பட்ட குரலையும் தனது கைத்தடிகள் மூலம் முன்வைத்து வழி நடத்த முனைகின்றது.

பாரம்பரிய இலங்கை வாழ் தமிழரின் சமூகக் கூறுகள் அழிக்கப்பட்டு இந்திய பார்ப்பனியத்துக்கு நிகரான வெள்ளாளியத்தை இந்திய மயமாக்குகின்றது. இந்தப் புதிய சமூகப் பின்னணியில் தான் சிவசேனாவின் வருகை நடக்கின்றது.

"இதுவும் கடந்துபோகும்!" என்று கூறி, இதைக் கண்டுகொள்ளத் தேவையில்லை என கூறுவதற்காக ""தலித்" என்ற இந்திய வகை சுட்டல் இலங்கை சாதிய அமைப்பின் மீது, தீண்டாமையின் மீது அதீத பயத்தை தன் சொல் பிம்பமாக எவ்வாறு இழுத்துவந்ததோ அதுபோன்றே "சிவசேனா"வும் சொல் விம்பத்தை இழுத்து வருகிறது." என்கின்றனர். இதுவொரு அபத்தமான குரோதமான தர்க்கம். "சிவசேனா" போன்ற ஒடுக்கும் சாதியத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த "தலித்" சொல்லை பொதுமைப்படுத்துகின்ற அரசியல், ஒடுக்கும் சாதி சார்ந்ததே.

ஒடுக்கப்பட்ட சாதிகள் என்ற சொல்லுக்குப் பதில் "தலித்" என்ற சொல், மற்றொரு அரசியலைக் குறிக்கின்றது. இது சாதியை ஒழிப்பதற்கு பதில், சாதி ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதன் மூலம் இந்த வர்க்க அமைப்பில் தனக்கான சாதிய இடத்தைக் கோருகின்றது. இதன் வளர்ச்சியானது மற்றைய சாதித் தலைவர்கள் போல் சலுகை பெற்று வாழும் சாதித் தலைவரையே உருவாக்கும். இந்த அரசியலில் இருந்து தலித்தியத்தை காண்பதற்கு பதில், தலித்தியத்தை தீண்டாமையாக காட்டி அணுகுவதைக் காணமுடியும்.

இந்த பின்னணியில் "தீண்டாமையின் மீது அதீத பயத்தை" தலித் எழுப்புவதாக கூறுகின்ற பின்னணியில், யாழ் சாதிய சமூக அமைப்பின் வக்கிரத்தை மூடிமறைக்க முனைவதாகும்;. இன்று வடக்கில் எந்தப் பயன்பாடுமின்றி (வெளிநாட்டு) வெள்ளாளச் சாதிகளிடம் குவிந்து கிடக்கும் நிலமும், நிலமின்றி நிலத்தைக் கோரும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு இடையிலான முரண்பாடு, இதன் பின்னான தீண்டாமையும் சமூகத்தில் பேசுபொருளாக முன் வராது காணப்படுகின்றது. ஒடுக்கும் வெள்ளாளச் சாதி, ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு ஊருக்குள் நிலம் கொடுக்கக் கூடாது என்ற ஊர் தீர்மானங்கள் போன்ற சாதியத் தீண்டாமையின் கொடூரமானவைகள் யுத்தத்தின் பின் சமூகமயமாகி இருக்கின்றது.

இந்த பின்னணியில் சிவசேனாவின் வருகை அரசியலில் மதத்தைப் புகுத்துவதற்கு வழிகாட்டும். இதற்கு ஏற்ப கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வெள்ளாள சிவசேனாவின் தலைவராக இருப்பதுவும், வெள்ளாள சிவசேனாவின் முக்கிய உறுப்பினர்கள் கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பதுவும் இந்த பின்னணியில் தான். சாக்கடைப் பன்றியைப் போல் இந்துத்துவ வெள்ளாள சாதிய அடையாளங்களுடன் புரண்டு எழும் வடக்கு முதலமைச்சரின் செயற்பாடுகள் அனைத்தும், சமூகத்தை பிளந்து குதறும் இந்து வெள்ளாளிய சிவசேனாவின் குணங்குறிகளாகும்.