Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"சைவர்கள்" யார்!? அவர்கள் தமிழர்களா!?

இலங்கை(க்கான) சிவசேனவின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், "சைவர்கள் மட்டுமே தமிழராக" இருக்கின்றனர் அல்லது "தமிழர்கள் மட்டுமே சைவராக" இருக்கின்றனர் என்று கூறியதன் மூலம் மதவாதப் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கின்றார். 400 வருடமாக சைவத்தை விட்டு மதம் மாறியவர்கள் "சிங்களவராக" மாறிவிட்டதாக ஒரு கருத்தையும் முன்வைத்திருக்கின்றார். "தமிழராக" இருக்க வேண்டும் என்றால் நீங்கள் "சைவராக" இருக்க வேண்டும் என்கின்றார். சைவத்தை முன்னிறுத்துவதன் மூலமே, தமிழைப் பாதுகாக்க முடியும் என்கின்றார். 

இங்கு மதம் "மாறியவர்கள்" குறித்தும், அவர்கள் "தமிழர் அல்லாத சிங்களவராக" மாறியதும் குறித்ததல்ல இக்கட்டுரை. மாறாக இந்து மதத்துக்குப் பதில் "சைவத்தையும்", தேசியத்துக்கு பதில் "தமிழரையும்" சிவசேனா முன்னிறுத்துவது குறித்து குறிப்பாகப் பார்ப்போம். 

இங்கு இலங்கை சிவசேனா ஆறுமுகநாவலரின் ஆகம (சாதிய) அடிப்படையில் கட்டமைத்த தடித்த வெள்ளாளிய சைவத்தையும், தமிழையும் மீள முன்னிறுத்தியிருக்கின்றது. இதுதான் இதிலுள்ள சூக்குமமாகும். அண்மையில் வடமாகாண ஆளுநர் ஆறுமுகநாவலரை முன்னிறுத்தி தமிழரை அடையாளப்படுத்தியத்தை இங்கு ஒப்புநோக்க முடியும்.    

இங்கு சைவம், தமிழ் என்பதன் மூலம் சாதி ரீதியான மத அடிப்படைவாதத்தை முன்வைக்கத் தொடங்கி இருக்கின்றனர். சமூகத்தில் காணப்படும் "இந்து மதமானது" பொதுமதமாக இருப்பதற்குப் பதில் "சைவத்தையும்", "தேசியம்" என்பதற்கு பதில் "தமிழரையும்" சிவசேனா முன்வைத்திருக்கின்றது. இது ஏன்? 

இந்துமதம் என்பது எல்லாச் சாதியையும் எல்லா சிறு மதப் பிரிவுகளையும் உள்ளடக்கியது. இந்த அடிப்படையான உள்ளடக்கத்தில் இருந்து "சைவ" மத அடையாளம் மூலம், தடித்த வெள்ளாளியத்தை பிரித்தெடுத்து உயர்த்தியிருக்கின்றது. இதேபோல் எல்லா மதங்களையும் உள்ளடக்கிய "தேசியம்" என்ற பொதுப் பொருளில் இருந்து "தமிழரை" சைவம் என்பதன் மூலம் பிரித்து வெள்ளாள தடித்த சாதியத்தையே தமிழராக உயர்த்தி இருக்கின்றது.    

இங்கு "இந்து" மதம் என்பது எல்லா சாதிகளையும் உள்ளடக்கியது. எல்லா சாதிய அடிப்படையிலான மதங்களையும் அல்லது மற்றும் மதப் பிரிவுகளையும் உள்ளடக்கியதே. இதில் இருந்து "சைவத்தை" மதப்பிரிவாக பிரித்து முன்னிறுத்துவதன் மூலம், தடித்த வெள்ளாளியத்தை முதன்மையாக்கி அதைத் தமிழனாக காட்டி இருக்கின்றது.  

கடந்தகாலத்தில் தமிழ்மொழி பேசும் மக்களின் தேசியத்துக்கு பதில், "தமிழ் மக்கள்" என்று குறுகிய பொருட்பட முஸ்லீம் அல்லாத வடக்கு கிழக்கு தமிழ் மக்களை உள்ளடக்கியதே "தமிழ் தேசியப்" போராட்டமாக குறுக்கினர். இன்று "சைவர்களே" தமிழர்கள் என்ற பொருளில் தடித்த வெள்ளாளியத்தை தமிழாகக் குறுக்குகின்றனர்.      

இந்தவகையில் ஆறுமுகநாவலர் "சைவமாக" முன்வைத்த தடித்த வெள்ளாளியத்தை இலங்கை சிவசேனா தனது கொள்கையாக இனம் காட்டத் தொடங்கி இருக்கின்றது. 

இந்தியாவில் பார்ப்பனிய மதம் எப்படி இந்து மதமாக இருக்கின்றதோ அது போல் இலங்கையில் தடித்த வெள்ளாளிய "சைவ" மதமே இந்துமதமாக இருக்கின்றது. இந்தியாவில் பார்ப்பானியச் சாதி போல், இலங்கையில் தடித்த வெள்ளாளிய சாதிய நலன்களை மையப்படுத்தி செயற்பாடுகளைத் தொடங்கியிருக்கின்ற பின்னணியில் இலங்கை சிவசேனா இயக்கத்தை இனங்காண முடியும். 

இலங்கையில் "சைவம்" என்பது குறிப்பாக மாமிசத்தை உண்ணாத தடித்த வெள்ளாளராக தம்மை முன்னிறுத்துகின்றவர்கள் தான் “சைவர்”. அதேநேரம் இந்து என்பது மாமிசம் உண்ணக்கூடிய வெள்ளாளர் உள்ளடங்கிய பிற சாதிகளையும் உள்ளடக்கியது. இந்த அடிப்படை வேறுபாட்டு அடிப்படையில் தான் சிவசேனாவின் சாதியச் செயற்பாடு தொடங்கி இருக்கின்றது. யாழ் சமூகத்தில் மாமிசம் உண்ணாமை முதல் மாடு உண்ணாமை வரை கட்டமைக்கும் "புனிதமானது" சாதிய அடிப்படையைக் கொண்டது. இந்துமதத்துக்கு வெளியில் இந்தப் "புனிதத்தை" சாதியப் புனிதமாக வரையறுக்கவே "சைவ" மதம் மூலம் சிவசேனா  தன்னை முன்னிறுத்தியிருக்கின்றது. 

இந்து என்பது சைவம் மதம் மற்றும் வெள்ளாளிய சாதி உள்ளடங்கிய, பிற சாதிகளையும் மதங்களையும் கொண்டது. இருந்தபோதும் இந்து என்பது வெள்ளாளிய சமூக ஆதிக்கத்தைக் கொண்டதாக இருக்கின்ற அதேநேரம், இன்று "சைவ" வெள்ளாள ஆதிக்கத்தைக் கொண்டதாக இல்லை. "சைவம்" அல்லாத "அசைவத்தை" உண்ணும் வெள்ளாளர்களையும் கொண்ட இந்துமத வெள்ளாளியத்தில் இருந்து, தடித்த  வெள்ளாளியத்தை "சைவம்" மூலம் உருவாக்க சிவசேனா முனைந்திருக்கின்றது. இதற்காக சிங்களவரான "தமிழரை" பற்றிப் திரித்துப் புரட்டிப் பேசி இருக்கின்றது. 

இங்கு "சைவம்" என்பது "தமிழர்" என்ற தடித்த வெள்ளாளியக் கண்ணோட்டமானது,  புதிரானதல்ல. தமிழ் தேசியம் மூலம் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய இனவாத அரசியல் வரை, வெள்ளாளிய சாதிய சமூக ஆதிக்க அமைப்பை முன்வைத்திருந்தது என்பதே கடந்த மற்றும் நிகழ்கால வரலாறு. 

"தேசியம்" என்பது, முதலாளித்துவ ஜனநாயக அடிப்படையிலான சமூக பொருளாதாரக் கூறுகளைக் கொண்டது. அதாவது நிலப்பிரபுத்துவ சமூக கூறான சாதியம், ஆணாதிக்கம், பிரதேசவாதங்கள், மதவாதங்கள் கடந்த ஒன்றுதான் தேசியம். இந்த ஜனநாயக முதலாளித்துவ தேசியக் கூறுகளை கடந்தகால போராட்டங்களில் முன்வைத்த போது அவை ஓடுக்கப்பட்டது. இந்தப் பொதுப் பின்னணியில் ஜனநாயக மறுப்புக்கு எதிரான போராட்டங்கள் முதல் முற்போக்கு மற்றும் இடதுசாரிய கருத்துகளும் உருவாகியது. இது கடந்தகால வரலாறு. 

கடந்தகால தமிழ் தேசியம் என்பது வெள்ளாளியமாக இருந்தது. வெள்ளாளியத்தனமான இந்துத்துவம் கொண்டதாக இருந்தது. இன்று அதை தடித்த வெள்ளாளியமாக்க "சைவத்தை" முன்வைத்துள்ளதுடன், அதையே "தமிழர்கள்" என்று கூறத் தொடங்கி இருக்கின்றது.

வெள்ளாளிய சாதிய சமூகத்தையும், அதை ஆதிக்கம் செய்யத் தடித்த வெள்ளாளியத்தையும் உருவாக்க முனையும் சிவசேனாவின் இன்றைய கருத்துக்களையும் செயற்பாடுகளையும் - இனங்கண்டு கொண்டு போராடுவதே காலத்தின் கட்டாயமாகும்.