Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"சிங்களவராக மாறிய தமிழரைப்" பற்றி...

பௌத்த மத அடிப்படைவாதமானது "பௌத்தத்தை" சிங்களவர்களுடன் ஒப்பிடுவது போன்று, இந்துமத அடிப்படைவாதமானது சைவத்தை (இந்து மதத்தை) "தமிழர்களுடன்" பொருத்திக் காட்டி விடுகின்றது. இது போன்று இஸ்லாமிய மத அடிப்படைவாதம், முஸ்லிம் மக்களுடன்  பொருத்திக் காட்டி விடுகின்றது. 

இங்கு சிங்கள, தமிழ் மொழி பேசும் மக்கள் மத்தியிலும் இனரீதியான சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மத்தியிலும், மதமற்ற நாத்திகர்கள் முதல் பிற மதத்தினர் இருப்பதை மத அடிப்படைவாதம் மறுக்கின்றது. இந்த மறுதளிப்பில் இருந்துதான், தங்கள் மனிதவிரோத கோட்பாடுகளையும் செயற்பாடுகளையும் ஆரம்பிக்கின்றனர். 

தங்கள் மத அடிப்படைவாத கண்ணோட்டத்துக்கு அடங்காத பிற மதத்தையும், மொழியையும்  பின்பற்றாத மக்களை, மத இன எதிரியாக காட்டி விடுகின்றனர்.       

இன வன்முறையையும் ஒடுக்குமுறையையும் கொண்ட இலங்கையில், மத அடிப்படைவாதமானது சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையக இனவாதத்துடன் கைகோர்த்துக் கொண்டு தான் இயங்குகின்றது. பௌத்த சிங்கள இனவாதத்துக்கு நிகராக, சைவ தமிழ் இனவாதத்தை, சிவசேனா மூலம் இந்தியா இலங்கையில் திணிக்கத் தொடங்கி இருக்கின்றது. 

யுத்தத்தின் பின்னான இலங்கையில் பௌத்த சிங்கள இனவாத அடிப்படைவாதக் குழுக்கள் மூலம் கட்டமைக்கும் மோதலை விரிவுபடுத்த, சாதி சைவ (இந்து) தமிழ் இனவாத அடிப்படைவாதங்களை தமிழர்கள் மத்தியில் இந்தியா திணித்து வருகின்றது. இந்திய கைக் கூலிகளாகவே, சிவசேனாவின் தலைவர்கள் இன்று செயற்படுகின்றனர். அது கூட்டமைப்பின் ஒரு அரசியல் அங்கமாகவும், அதேநேரம் முதன்மையான சக்தியாகவும் மேல் எழுந்து வருகின்றது.        

இந்த வகையில் "மதம் மாறிய தமிழர்கள் சிங்களவராக" மாறிவிட்டதாகவும், மாறிவிடுவதாகவும் "சைவ" வேளாளச் சாதி வெறி தமிழர்கள், "இந்து" தமிழர்களுக்கு உபதேசம் செய்யத் தொடங்கி இருக்கின்றனர். சிங்களவர்களை தமிழரின் எதிரியாகக் கட்டமைத்த தமிழ் (புலித்) தேசியத்தின் கடந்தகால காலடிகளில் இருந்து இலங்கை சிவசேனா தனது பயணத்தைத் தொடங்கி இருக்கின்றது. யுத்தத்தின் பின் தமிழ் சிங்கள மக்களிடையேயான மீள் உறவுகளை பிளந்து விடுவதன் மூலம், சைவ வெள்ளாளச் சாதியத்தை நெம்புகோலாக கொண்டு, சமூகத்தை ஆளவும், அடக்கவும் விரும்புகின்றனர். 

இனம், மொழி, மதம், தேசியம், ஜனநாயகம், வாழ்க்கை மீதான திரிபுகளையும் புரட்டுகளையும், பித்தலாட்டங்களையும் அடிப்படையாகக் கொண்ட சிவசேனாத் தலைவர்கள் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக இருப்பதால், சிவசேனாவின் வக்கிரங்கள் கூட்டமைப்பின் கருத்தாகவும் கொள்ளமுடியும். இதை விரிவாக பார்ப்போம். 

1. மதம் மாறாத "சைவத்" தமிழர்கள் சிங்களவராக" மாறவில்லையா? மதம் மாறியவர்கள் மட்டும், சிங்களவராக மாறினர் என்று கூறுவது புரட்டாகும். 

2. தமிழ் மொழியைப் பேசியவர்கள் சிங்கள மொழியை தளுவியதானது வாழ்கின்ற சூழலுடன் இணைந்து வாழ்வதற்கானதே. இதேபோல் தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்த சிங்கள மொழி பேசிய மக்கள், தமிழ் மொழியை பேசும் மக்களாக மாறினர் என்பதே உண்மை. இப்படி உண்மை இருக்க, மொழியின் தேர்வை மதத்துடன் முடிச்சுப் போடுவது, மோசடியல்லவா. 

3. தேசம், தேசியம் என்பது மொழியுடன் மட்டுமே தொடர்புபட்டதல்ல. மொழி, பொருளாதாரம், பண்பாடு, நிலத்தொடர் என்ற குறைந்தபட்ச அடிப்படைகளைக் கொண்டதே தேசமாகவும், தேசியமாகவும் இருக்க முடிகின்றது. தேசியத்துக்கும் இனத்துக்கும், மொழிக்கும் மதத்துக்கும் முரண்பாடுகள் ஒன்றல்ல, மாறாக தனித்துமானவை. மதம் கடந்து தான்,  தேசம், தேசியமும் இயங்குகின்றது. இன்னும் தெளிவாகச் சொல்வதானால் மதத்துக்கு எதிராகவே, தேசியம் இருக்க முடியும். குறிப்பாக சாதியே இந்துமதமாக இருப்பதால், தேசியமானது சாதியத்துக்கு எதிராக இல்லாத வரை அது தேசியமல்ல.       

4. தேசத்துக்குரிய அடிப்படைக் கூறுகளைக் கொண்டு இருக்காதவை, இனங்களாக இருக்கின்றது. இங்கு மதம் கடந்து தான் இனங்கள் தோற்றம் பெறுகின்றது. ஆனால் மொழி உள்ளடங்கிய பிற காரணிகளாலானது.

5. வாழ்க்கையின் தேவையுடன் தான் மொழி இயங்குகின்றதே ஒழிய, மதத்தின் தேவைக்காக மொழி இயங்குவதில்லை. தமிழ்மொழி மதத்தைப் பின்பற்றுவதில்லை, வாழ்க்கையைப் பின்பற்றுகின்றது. 

6. மதத்தைப் பின்பற்றுவது, மதம் மாறுவது, மதத்தை கைவிட்டு நாத்திகராவது தனி மனிதத் தெரிவும், உரிமையுமாகும். இந்த மனித உரிமையான ஜனநாயகத்தை மறுக்கின்றவர்கள் தான் மதம் மாறியவர்களை "சிங்களவராக" காட்டுவதும் சித்தரிப்பதும் நிகழ்கின்றது.      

மதம் மாறிய தமிழர்களை "சிங்களவராக" காட்டுகின்ற "சைவ" வெள்ளாளச் சாதிக் கண்ணோட்டமானது, தம்மைத்தாம் "தூய புனித சாதித்" தமிழராக முன்னிறுத்துகின்றது.   

"புனித சாதித் தமிழரான வெள்ளாளச் சைவரை" இந்துகள் பின்பற்றக் கோருகின்றது. இலங்கை சிவசேனா இதைத்தான் முன்வைக்கின்றது. அதாவது வெள்ளாளிய இந்துத்துவத்தை, சைவ சாதி வெள்ளாளர் தலைமை தாங்குவதற்கான கோட்பாடுகளை முன்வைக்கின்றது. இந்தியாவானது பார்ப்பனிய சாதியச் சிந்தாந்தத்தை இலங்கைக்கு ஏற்றவாறு சிவசேனா மூலம் முன்வைக்கின்றது. அது 'மதம் மாறிய தமிழர்கள் சிங்களவராக" மாறியதாக இட்டுக்கட்டுகின்றது.          

மதம் என்பது என்ன? மதம் குறித்து ஜனநாயகம் என்ன கூறுகின்றதோ - அது தான் அடிப்படை மனிதவுரிமையாக இருக்க முடியும். ஜனநாயகமானது மதத்தை தனிப்பட்ட ஒரு மனிதனின் தெரிவாக இருக்க முடியும் என்று தான் வரையறுக்கின்றது. இதைக் கடந்த அனைத்தும் மனித ஜனநாயகத்தை மறுக்கின்ற பித்தலாட்டங்களும், மக்களை பிரித்து ஒடுக்குகின்ற மத அடிப்படை வாதங்களுமே. இந்த மனிதவிரோதத்தைத் தான், கூட்டமைப்பில் இருக்கின்ற சிவசேனா, மதம் மூலம் முன்வைத்திருக்கின்றது. 

மதம் மாறக் காரணமாக சாதியம் இருப்பதை, "தமிழ்" அடையாளம் மூலம் மூடிமறைப்பது தான், இந்த பித்தலாட்டத்தின் அடிப்படைச் சாரமாக இருக்கின்றது. இதை இனம் கண்டு கொள்வது தான் அரசியல்.