Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"தமிழ் தேசிய" பங்காளிகளின் அதிகாரத்துக்கான ஆதிக்கச் சண்டை முடிவுக்கு வந்திருக்கின்றது

மானம் கெட்டு அங்கும் இங்குமாக பனங்கொட்டைகளை சூப்பிய "தமிழனின் தமிழ் தேசிய உணர்ச்சி", மீண்டும் விபச்சாரத்துக்கு தயாராகிவிட்டது. யுத்தத்துக்குப் பின்பு "தமிழ்தேசியப்" பிணத்தை தூக்கிச் செல்வதில் முரண்பட்ட பங்காளிகள், மீண்டும் மாலை மரியாதையுடன் "தமிழ் தேசியக்" கோமாளிகளாக மாறி காட்சியளிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

அதிகாரவெறி பிடித்த ஆதிக்கக் கனவுகளுடன் நரிவேசம் போட்டுக் கொண்டு குலைத்த நாய்கள் எல்லாம், வாலை சுருட்டிக் கொண்டு மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.  

"ஊழல் என்றார்கள், சிங்கள ஆளும் வர்க்கத்தின் சதி என்றார்கள், முதலமைச்சரை தேசியத்தின் தலைவர் என்றார்கள், தமிழ் தேசியத்தின் மீட்பாளர்கள் என்றார்கள், நீதி தவறாத நீதவானின் தலைமைத்துவத்தின் மகத்துவம் என்றார்கள், ஊழலை மறைக்க ஊழல் விசாரணை என்றார்கள் .."  இப்படி எத்தனை எத்தனையோ தமிழ்தேசிய வில்லுப்பாட்டுக்கு தாளம் போட்டு, இறுதியில் செத்த பிணத்தை மீண்டும் தூக்கிச் செல்லுவதற்கு ஏற்பத் தாளத்தையே மாற்றிப் போடுகின்றனர்.

 

 

இனரீதியாக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் சந்திக்கின்ற இனரீதியான அடக்குமுறைகள் முதல் வர்க்க ரீதியாகக் சந்திக்கின்ற ஒடுக்குமுறைகள் வரை, இவை எதற்காகவும் இவர்கள் யாரும்  போராடுவது கிடையாது. அதேநேரம் தேர்தல் வழிமுறை மூலம் பெற்ற அதிகாரத்தைக் கொண்டு, மக்களின் வாழ்வாதார அடிப்படைப் பிரச்சனைகளை கையில் எடுத்து தீர்த்ததும் கிடையாது. 

நவதாராளவாத அரசு மக்களின் அடிப்படைத் தேவைகளை வெட்டிக் குறைத்து வரும் நிலையில், கொடுக்கும் பணத்தையே திருப்பி அனுப்புகின்றனர் இந்த "தமிழ் தேசிய" நவதாராளவாத எடுபிடிகள். மறுபக்கத்தில் செலவு செய்யும் கொஞ்சப் பணத்தில் ஊழல் செய்து கொழுக்கின்றதைத் தவிர, வேறு எதையும் மக்களிற்கு செய்வது கிடையாது. 

தங்கள் அதிகாரத்தைக் கொண்டு ரவுடித்தனங்கள் முதல் பாலியல்ரீதியான அத்துமீறல்கள் வரை செய்வதை, தங்கள் நடைமுறை அரசியலாகக் கொண்டவர்கள். சீமான் போன்று  உசுப்புக்கு வீரவசனங்கள் பேசுவது முதல் பாதிக்கப்பட்ட மக்களுடன் போட்டோ எடுத்து விளம்பரம் செய்வதன் மூலம், அதை அரசியலாக காட்டுபவர்கள்.    

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம், தங்கள் நிலத்துக்கான போராட்டம், வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள் …. எல்லாம் 100 நாட்களை கடந்து தொடருகின்றது. "தமிழ்  மக்களின்" பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், அந்த மக்களின் சுகதுக்கங்களில் பங்குகொண்டதை காண முடியுமா!? 

மனித உணர்வுகளிலான துன்பங்களில் துயரங்களில் பங்காளிகளாக காட்டி வேசம் போடும் அரசியல் கழிசடைகள், 100 நாட்கள் கடந்த இந்தப் போராட்டங்களில் தொடர்ந்து நடிக்க முடிவதில்லை. நீண்டு நீடித்த மக்களின் அன்றாட வாழ்வியல் போராட்டம் தமிழ் மண்ணில் நடப்பதைக் கூட, கண்டுகொள்ளாத இவர்களை "தமிழ் தேசியவாதிகள்" என்று மகுடம் சூட்டி, மக்களைப் பாடையில் அனுப்ப "தமிழ் தேசியத்தின்" ஒரு பகுதி முக்கி முனங்குகின்றது.   

தமிழ் மக்களை காலங்காலமாக "தமிழ் தேசியத்தின்" பெயரில் ஏமாற்றிப் பிழைக்கின்ற இந்த இனவாத அரசியல் வாதிகள், இனரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எதையும் செய்யப் போவது கிடையாது. 

ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் விடுதலைப் போராட்டத்தை தங்கள் கையில் தாங்கள் எடுக்காத வரை, அனைத்துவிதமான ஒடுக்குமுறைக்கும் எதிராக இணைந்து போராடாத வரை, "தமிழ் தேசியத்தின்" பெயரில் பொறுக்கிகளுக்கு உதவுவதே தொடரும்;. இதை மாற்றி அமைக்க, சமூக உணர்வுள்ள அனைவரும், ஒருமுகமாக முயல வேண்டும். இது தான் ஒரே தீர்வு.