Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

புதிய உலக ஒழுங்கைக் கோரும் அமெரிக்காவின் கூத்துக்கு ஆடும் இஸ்ரேல்

அரபு பிராந்தியத்தில் மேலாண்மையை இறுக்குவதற்கான அமெரிக்காவின் சதியே, பலஸ்தீன மக்களின் மீதான புதிய ஒடுக்குமுறையாக பரிணமிக்கின்றது. ஐ.நா தீர்மானத்துக்கு முரணாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்குள் இஸ்ரேல் தனது தலைநகரை கொண்டு செல்ல, அமெரிக்கா முதல் காலடியை வைத்திருக்கின்றது. இதை எதிர்க்கும் பலஸ்தீன மக்களை கொன்று குவிக்கின்றது. ஈரானை ஆக்கிரமிக்க விரும்பும் அமெரிக்க மூலதனத்துக்காக, ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நடத்துகின்றது. இவை அனைத்தும் அமெரிக்காவின் மேற்பார்வையில் நடந்தேறுகின்றது. இவை எதற்காக!?

இஸ்ரேல் என்ற நாட்டை மேற்கு ஏகாதிபத்தியங்கள் உருவாக்கியதே, தங்கள் பொருளாதார நலன்களை பாதுகாக்கவே ஒழிய. 2ம் உலக யுத்தத்தில் கொல்லப்பட்ட யூத மக்களின் மேலான அனுதாபத்தில் அல்ல. அமெரிக்கா தலைமையிலான மேற்கு ஏகாதிபத்தியங்கள்,  சென்ற நூற்றாண்டில் மூலதனத்தின் ஆதாரமாக இருந்த எண்ணை வயல்களை கட்டுப்படுத்தவும், தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருக்கவுமே, இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி, அரபுலகில் புதிய முரண்பாடுகளுக்கு வித்திட்டது.

இதன் மூலம் 2ம் உலக யுத்தத்தின் பின்னான காலனிகளுக்கு எதிரான அரபுலக போராட்டங்களை மழுங்கடிக்க முடிந்தது. மேற்கின் மூலதனத்திற்கு ஆதாரமாக திகழ்ந்த எண்ணையை தங்கள் கட்டுபாட்டில் தக்கவைக்க முடிந்தது. அரபுலகில் காலனிகளுக்கு எதிராக நடந்த தேசியப் போராட்டங்கள், வர்க்கப் போராட்டங்களில் இருந்து மூலதனம் தப்பிப் பிழைக்க முடிந்தது. குறிப்பாக அரபு நாடுகளில் எண்ணை வளம் சார்ந்து, ஏகாதிபத்திய மூலதனத்துக்கு எதிரான தேசிய அரசுகளாக உருவாகுவதைத் தடுக்க, மக்களை ஏமாற்றும் பொம்மையாக இஸ்ரேல் என்ற புதிய நாட்டை பலாத்காரமாக அரபுலகில் திணித்தது.

பலஸ்தீன மக்களின் நிலத்தை ஆக்கிரமித்ததன் மூலம், பிராந்தியத்தில் புதிய முரண்பாட்டை முன்னுக்கு கொண்டு வந்தது. இதற்காக யூத மத அடிப்படைவாதத்தைக் கொண்டு, யூத மக்கள் ஓருங்கிணைக்கப்பட்டனர். அரபு பிராந்தியத்துக்கு எதிரான இஸ்லாமிய வெறுப்புடன் இவை அனைத்தும் நடந்தேறியது. பலஸ்தீன மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னணியில், மக்களை வகைதொகையின்றி மேற்கின் கூலிப்படையான இஸ்ரேல் கொன்று குவித்தது. மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்ததன் மூலம் அகதியாக்கப்பட்டு மக்கள், எல்லை நாடுகளில் தஞ்சமடைந்தனர். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தமானது பிராந்திய நாடுகளுக்கு எதிரானதாக மாறி, யுத்தங்களுக்கும் இட்டுச் சென்றது. இதன் மூலம் பிற நாடுகளின்  நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது.

 

ஐ.நா தீர்மானங்கள் பலவற்றை அமெரிக்கா தடை செய்து வந்ததுடன், எடுக்கப்பட்ட ஐ.நா தீர்மானங்கள் பல நடைமுறைக்கு கொண்டுவர முடியாதளவக்கு அமெரிக்கா செயற்பட்டது. இந்த பொதுப் பின்னணியில் அமெரிக்கா தலைமையிலான மேற்கின் பொருளாதார நலன்களின் அடிப்படையில் இஸ்ரேல் நாடு அங்கீகரிக்கப்பட்டு, பலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க மறுத்து வருவதன் மூலம், பலஸ்தீனத்தை இஸ்ரேலின் காலனியாக வைத்திருக்கின்றது. அதேநேரம் குறுக்கு நெடுக்காக வேலிகளை போட்டு, மக்களை ஒடுக்கி வருகின்றது.  ஆக்கிரமிக்கப்பட்டதற்கு எதிராகப் போராடும் மக்களை "பயங்கரவாதியாக" முத்திரை குத்தி, பயங்கரவாத வன்முறைகளை ஏவி, வகைதொகையின்றி கொன்று குவிக்கின்றது.

இதை மேலும் வலுப்படுத்தவும், அமெரிக்கா கோரும் புதிய உலக ஒழுங்கை நடைமுறைக்கு கொண்டு வரவுமே, இஸ்ரேலின் புதிய தலைநகரமாக யெருசலேத்தை அறிவித்து பலஸ்தீன மக்களின் தலையை அமெரிக்கா கொய்திருக்கின்றது.

அமெரிக்காவின் புதிய உலக ஒழுங்கு யாருக்கு எதிரானது

அமெரிக்கா எதிரியாக காட்டும் நாடுகளுக்கு புதிய உலக ஒழுங்கு எதிரானதல்ல. அமெரிக்காவுக்கு நிகராக உலக மேலாதிக்கத்தை கொண்ட ஐரோப்பிய மூலதனத்துக்கு அது எதிரானது. ஐரோப்பிய மூலதனத்தை தகர்க்கும் அமெரிக்காவின் செயற்பாடுகள்தான், அண்மைய உலக நெருக்கடிகள். இது முன்பு போல் வழமையான முரண்பாடுகளல்ல. அமெரிக்க ஜனாதிபதியின் கோமாளித்தனமுமல்ல. அப்படி நம்புவதும், புரிந்து கொள்வதும் அறியாமை. பொதுப்புத்தி புரிதலுக்குரியது. கிட்லர் தொடங்கி மோடி வரை, அறிவியல் பூர்வமாக பார்த்தால் அவர்களின் செயல்கள் கோமாளித்தனமானதாக இருக்கும். ஆனால் அவைதான் பாசிசத்தின் வேர். டோனால்ட் டிராம் அதைத்தான் செய்கின்றார்.

2ம் உலக யுத்தத்தின் பின்பாக 1980-1990 வரையான காலத்தில், ருசியா-சீனாவில் நிலவிய உழைக்கும் மக்களின் ஆட்சி அதிகாரத்துக்கு எதிராக கட்டமைக்கப்பட்டதே, மேற்கு ஏகாதிபத்திய உலக ஒழுங்கு. 1990 பின் மேற்குக்கு நிகரான ஏகாதிபத்தியமாக மாறிய ருசியா -சீனா மூலதனத்தின் முரண்பாடுகளை எதிர்கொள்ள, மூலதனத்தை உலகமயமாக்கியதன் மூலம் அமெரிக்கா தலைமையிலான மேற்கு ஏகாதிபத்திய உலக ஒழுங்கு நீடித்தது. ஆனால் இது நீடிக்க முடியாதளவுக்கு உலகப் பொருளாதார (மூலதனத்தின் அக) நெருக்கடியானது, புதிய உலக ஒழுங்கைக் கோருகின்றது.

2ம் உலக யுத்தத்தின் பின் அமெரிக்கா – மேற்கு ஏகாதிபத்தியங்கள் கூடியெடுத்த உலக மேலாதிக்கத்தை, இன்று அமெரிக்கா தன் தலைமையில் எடுப்பதை தேர்ந்தெடுத்து இருக்கின்றது. இதன் மூலம் ஐரோப்பாவுக்கு எதிரான, தனது தலைமையிலான உலக மேலாதிக்கத்தை கோருகின்றது.

இதன் பொருள் உலகமயமாக்கம் மூலமான மூலதனத்தின் சுதந்திரமான உற்பத்தி மற்றும்  சந்தைக்கு பதில், தமது ஏகாதிபத்திய மூலதனத்துக்கான உலக ஒழுங்கை அமெரிக்கா கோருகின்றது. உலகமயமாக்கச் சந்தை விதிகளை தன்னிச்சையாக முறித்து, வரி அறவீடுகளை கொண்டு வந்துள்ளது, பூகோளத்தின் இயற்கையைப் பாதுகாக்கக் கொண்டு வந்த கூட்டு ஓப்பந்தத்தை கிழித்தெறிந்திருக்கின்றது. ஈரானுடன் பல நாடுகள் இணைந்து செய்த ஒப்பந்தைத் கிழித்துப் போட்டு இருக்கின்றது. ஜெரூசலேத்தை தன்னிச்சையாக தலைநகராக அறிவித்;திருக்கின்றது. இப்படி பல தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம், தன் மேலாதிக்கத்தை முன்னிறுத்தி வருகின்றது.

இதை முன்னிறுத்த, முன்பு போல் தன்னிச்சையாக பொய்களைக் கட்டமைத்து வருகின்றது.  முன்பு இது போல் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, ஈராக் எண்ணை வயல்களை தனதாக்கியது போன்று, உலக மூலதனங்களை தனதாக்குவதற்குத் தடையாக இருக்கக்கூடிய ஐரோப்பிய மூலதனத்தை காவு கேட்கின்றது.

இதுவரை காலமும் ருசியா, சீனா.. மூலதனத்தை தகர்க்கும் அமெரிக்கா ஏகாதிபத்தியக் கொள்கையுடனும் நடைமுறையுடனும், ஐரோப்பிய ஏகாதிபத்தியம் இணைந்திருந்தது. இன்று ஐரோப்பிய ஏகாதிபத்தியம் அமெரிக்காவுக்கு எதிரான தற்காப்பு நிலைக்கு வந்துள்ளதுடன், தாக்குதல் நிலைக்கு தன்னை தயார் செய்கின்றது.

சிரியா தடை என்பது, ஐரோப்பிய மூலதனத்துக்கான தடை

அமெரிக்காவின் உலக ஒழுங்கை ஐரோப்பிய யூனியன் அமைதியாக ஏற்றுக்கொள்ளக் கோருகின்றது. இதன் பொருள் அமெரிக்க ஏகாதிபத்திய மூலதனங்களுக்கு அடிபணிந்து தன்னைத்தான் அழித்துக் கொள்ளக் கோருகின்றது.

குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி.. ஈரான் மூலம் கொழுக்கத் தொடங்கிய மூலதனங்கள், அமெரிக்கா தடையுடன் தடுமாறத் தொடங்கி இருக்கின்றது.

சிரியாவுடனான பொருளாதார - வர்த்தக உறவுகளைக் கொள்ளும் நிறுவனங்கள் - வங்கிகள் மீதான தடையை அமெரிக்கா அறிவித்து இருக்கின்றது. உதாரணமான எயர்புஸ் (Airbus), ரொட்டல் (Total) எண்ணை நிறுவனம், ஈரானுடன் செய்துள்ள பாரிய ஒப்பந்தங்கள், அதைத் தொடர்ந்து அவற்றின் முதலீடுகள், அதற்காக நிதியைக் கையாளும் பிரஞ்சு வங்கி முதல் ஐரோப்பிய வங்கிகள் வரையான அனைத்தும் அமெரிக்காவின் தடைக்கு உள்ளாகும். இப்படி தடைக்குள்ளாகும் நிறுவனங்களுடன் அமெரிக்க மூலதனம் எவையும், எந்த உறவையும் கொள்ள முடியாது. அத்துடன் பிறநாடுகள் இதனுடன் உறவைக் கையாளும் போது, அவையும் தடைக்குள்ளாகும். அதேநேரம் அமெரிக்காவின் சார்பு நாடுகள் இந்த தடையை கடைப்பிடிக்க கோரும். ஈரானுடன் பாரிய வர்த்தக உறவைக் கொண்ட nஐர்மனி, பிரான்ஸ், இத்தாலி … உட்டப பல ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரானதே அமெரிக்க தடையாகும்.

ஈரானுடனான ஓப்பந்தத்தின் பின் 2015 இல் ஐரோப்பியயூனியனின் ஈரானுடனான வர்த்தகமானது 9.2 (920 கோடி) பில்லியன் டொலராக இருந்தது. இது 2016 இல் 16 பில்லியன் (1600 கோடி) டொலராகவும், 2017 இல் 25 பில்லியன் (2500 கோடி) டொலராகவும் அதிகரித்தது. இதைவிட பாரிய முதலீட்டு ஒப்பந்தங்களும், இதன் அடிப்படையில் முதலீடுகளும் நடந்து வருகின்றது. இதைத் தடுத்து நிறுத்த அமெரிக்க ஏகாதிபத்திய மூலதனங்கள் முனைகின்றது. இதை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு, ஐரோப்பிய மூலதனங்கள் தடுமாறுகின்றது.

சிரியா விவகாரமானது, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை அம்மணமாக மாற்றி இருக்கின்றது. ஐரோப்பிய மூலதனத்தை பாதுகாக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியம் என்ன செய்யப் போகின்றது என்பது தான், மூன்றாம் உலக யுத்தத்திற்கான தயாரிப்பாக இருக்க முடியும்.

உலகை மேலாதிக்கம் செய்ய பிற நாடுகளுக்கு எதிராக, அமெரிக்காவும் - ஐரோப்பிய ஏகாதிபத்தியமும் முன்பு கையாண்ட அதே உத்தியை, ஜரோப்பாவுக்கு எதிராக அமெரிக்கா கையாளத் தொடங்கி இருக்கின்றது. ஐரோப்பிய ஏகாபத்தியம் இதை சட்டவிரோதமானதாகவும், உலக ஓழுங்குக்கு எதிரானதாகவும் முன்வைக்கின்ற அளவுக்கு, தன்னை முன்னிறுத்தத் தொடங்கி இருக்கின்றது.

இதுவரை காலமும் ஐரோப்பா அமெரிக்காவுடன் சேர்ந்து செய்த சட்டவிரோத மானிட விரோத உலக ஒழுங்கு தான், இன்று ஒன்றையொன்று அழிக்கும் மூலதனத்தின் பொது விதியாகி நிற்கின்றது. மானிட விரோதத்தைக் கொண்ட மூலதனத்தின் போரும், போர் வெறியும் மீண்டும் உலக யுத்தம் மூலம் தீர்வு காண முனைப்புப் பெற்று வருகின்றது. மூலதனத்திற்கு இடையிலான உலகப் போரைத் தடுத்து நிறுத்த, மூலதனத்துக்கு எதிரான போராக மாற்றுவதும், சர்வதேசியவாதிகளாக அணிதிரள்வதன் மூலமுமே ஏகாதிபத்திய யுத்தத்தில் இருந்து உலகைக் காப்;பாற்ற முடியும்.