Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

காணமலாக்கப்பட்டவர் போராட்டத்தை காணாமலாக்க முனையும் சமூக விரோதிகள்

ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்ட முடியாத எந்தப் போராட்டமும் தோற்கடிக்கப்படுவதுடன்,  வரலாற்றில் இருந்து காணாமலாக்கப்படும். தமிழ் மக்களை ஒடுக்கிய தமிழர்களும், தொடர்ந்து ஒடுக்கும் தமிழர்களின் கைகளில் காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டம் சிக்கியுள்ளதுடன்,   சின்னாபின்னமாக்கப்படுகின்றது. ஏகாதிபத்திய பொருளாதார நலனை அடிப்படையாகக் கொண்டு, மனிதவுரிமையை வரையறுக்கும் ஐ.நாவின் மூலம் தீர்வு என்று போலியான புரட்டைக் கொண்டு, போராட்டம் மழுங்கடிக்கப்படுகின்றது. 

தங்கள் உறவுகளைத் தேடி போராடுபவர்களின் உணர்வுகளுடன், தமிழ் சமூகம் அணிதிரளத்  தயாராகவில்லை. இந்த தமிழ் மக்களை அணிதிரளாது தடுக்கும் தேர்தல் கட்சிகள், தமிழ்மக்களை இதற்காக அணிதிரட்டும் மக்கள் அரசியலை செய்வதில்லை. தேர்தல் கட்சிகள் இந்த போராட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் இந்தப் போராட்டத்தில் தங்கள் முகத்தைக்  காட்டவும் - தங்கள் தலைமையில் நடப்பது போன்று ஊர் உலகத்துக்கு காட்டும் வக்கிரத்தையுமே அரங்கேற்றுகின்றனர். இந்தப் போராட்டத்தை நடத்தும் மனிதர்களின் மனித அறத்தையே காயடிக்கும், சமூக விரோதிகளாக மாறி தம்மை முன்னிறுத்துகின்றனர்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டமென்பது, தங்கள் உறவுக்கு என்ன நடந்;தது என்பதை விசாரணை செய்யக் கோருகின்றது. இன்னமும் தங்கள் உறவுகள் உயிருடன் இருப்பதாக நம்பும் உளவியலுக்குள்ளாகி மனச்சிதைவுக்குள்ளாகும் மனிதர்களின் மனநிலை மீது, கண்டகண்ட நாய்களெலாம் மூத்திரம் பெய்வதும், அதை விளம்பரம் செய்வதுமே நடக்கின்றது.

யாரெல்லாம் மனிதர்களைக் காணாமாலாக்கினரோ, அவர்கள் இந்தப் போராட்டத்தை தோற்கடிக்கும் வண்ணம் வழிநடத்துகின்றனர். அவர்களை நம்பி நிற்கும் போராட்டமானது, வெற்றி பெற முடியாத சகதிக்குள் முடங்கிப் போக காரணமாகின்றது.

காணாமல் போனவர்கள் யார் – அவர்களை காணாமலாக்கியவர்கள் யார்? 

இனவொடுக்குமுறைக்கு எதிராக 1980 களில் தொடங்கிய ஆயுத வன்முறையுடன், காணாமலாக்கப்படுதல் தமிழ்மக்கள் மத்தியில் ஆரம்பித்தது. இனவொடுக்குமுறையை நடத்திய அரசும், அதன் கூலிப்படையான இராணுவ ஆட்சியின் கீழ் காணமலாக்கப்படுத்தல் என்பது தொடங்கியது. அதேநேரம் இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடிய இயக்கங்கள், தங்கள் சொந்த இயக்கத்துக்குள் இருந்தோரைக் காணாமலாக்குகின்ற அளவுக்கு ஜனநாயக விரோத இயக்கங்களாகவும், அன்னிய நாடுகளின் கூலிப்படையாகவும் மாறியது. இயக்கங்களின் இந்த ஜனநாயக விரோத அதிகாரமானது படிப்படியாக பிற இயக்க உறுப்பினர்களையும், பொது மக்களையும் காணாமலாக்குகின்ற அளவுக்கு, மக்கள் விரோத இயக்கங்களாக மாறியது.

புளட் தமது இயக்கத்துக்குள் சில நூற்றுக்கணக்கானவரை காணாமலாக்கினர் அல்லது படுகொலை செய்தனர். புலி, ரெலொ, ஈரோஸ்.. கணிசமான அளவுக்கு இதைச் செய்தது. 1980 – 1990 களில் ஆரம்பத்தில் புளட் தான், மிக அதிகளவு உட்படுகொலைகளையும், காணாமலாக்கலையும் செய்;தது.

புலிகள் பிற இயக்கங்களையும், ஜனநாயக கருத்துகளையும் அழிக்கும் பாசிச இயக்கமாக 1980-1990 களில் பிற்பகுதியில் தம்மை முன்னிறுத்திய பின், ஆயிரக்கணக்கானோரை காணாமாலாக்கினர் அல்லது படுகொலை செய்தனர். இக் காலட்டத்திலும், 1990 க்கு பிந்தைய ஆண்டுகளிலும் இந்தியா - இலங்கை கூலிப்படையாக மாறிய பிற இயக்கங்கள் தம் பங்குக்கு காணாமலாக்கல் அல்லது படுகொலைகளை ஆயிரக்கணக்கில் நடத்தினர். இந்த வகையில் இந்திய - இலங்கை கூலிப்படையாக மாறிய ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எவ், புளட், ரெலோ, ஈரோஸ்… என்பன, புலிக்கு நிகராக தங்கள் மனித விரோத கூலி அரசியலை வரைமுறையின்றி நடத்தினர்.

இலங்கை - இந்திய அரசு இதை இயக்கியதுடன், அவர்களும் தம் பங்குங்கு வேட்டையாடினர்கள். இப்படி புலிகள் முதல் இந்திய - இலங்கை அரசு மற்றும் இவர்களின் கூலிக் குழுகளால் காணாமலாக்கப்பட்டவர்கள் பட்டியல் நீண்டது, நெடியது. இந்த காணாமலாக்குகின்ற இந்த பாசிச பயங்கரவாதத்தின் பின்னால், ஏகாதிபத்தியங்கள் ஆயுதங்களை வழங்கியது முதல் யுத்தத்தை வழி நடத்தியது என்பது வரலாறு. புலிகள் மேற்கு ஏகாதிபத்திய நலன் சார்ந்த, அவர்களின் வழிகாட்டலில் மனித அழிவைத் தரும் யுத்த தந்திரத்தைக் கையாண்;டதுடன், மக்களை வலிந்த யுத்தத்தில் ஈடுபடுத்தியதுடன் யுத்தத்தில் பணயக் கைதியாக முன்னிறுத்தியும் பலிகொடுத்தனர். இதில் பல ஆயிரம் மக்கள் காணாமல் போனார்கள். இப்படி பற்பல உண்மைகளை மூடிமறைத்தே, இன்று காணாமலாக்கப்பட்டவர் போராட்டத்தை ஆதரிப்பது போல் நடித்து, அதனை நலமடிக்கின்றனர்.

காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டமென்பது தன்னெழுச்சியானது. மக்களையும், போராடச் சென்றவர்களையும் காணாமலாக்கிய இந்திய - இலங்கை கூலிக் குழுக்களும், மக்களை யுத்தத்தில் பலிகொடுத்த புலத்துப் புலிகளும், காணாமலாக்கப்பட்ட போராட்டத்தை  தங்கள் போராட்டமெனக் காட்டி பிழைப்பதுடன், போராட்டம் மக்களை சார்ந்து சென்றுவிடாத வண்ணம் காயடிக்கின்ற சமூக விரோதிகளாகவும் செயற்படுகின்றனர்.

சமூகம் குறித்து பொதுவான சமூக உணர்வற்ற தேர்தல் கட்சிகளும், இந்தியா - இலங்கை கூலிப்படையாக செயற்பட்ட போலி ஜனநாயக இயக்கங்களும், மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் புலத்து பினாமிப் புலிகளும், மக்களை செம்மறியாக முன்னிறுத்தி மதத்தை பரப்பிப் பிழைக்கும் கிறிஸ்துவ பாதிரிமார்களினதும், சுய வக்கிரங்களுக்குள் போராட்டம் குறுகிக் கிடக்கின்றது.

ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை அணிதிரட்டிய போராட்டமாக மாறுவதை எதிர்க்கும் அன்னிய கூலிப்படையாகவும், மறுபக்கத்தில் சமூக விரோதிகளாக இருந்தபடி, ஏகாதிபத்தியத்தின் ஜ.நா மூலம் தீர்வு என்ற கானல் நீரைக் கொண்டு பிழைப்புவாத அரசியலாக அரங்கேறுவதுடன்,  இதுவே காணாமல் போனவர்களின் போராட்டமாகியுள்ளது.

மக்களை அணிதிரட்டாத அரசியலும், மக்களைச் சார்ந்து காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே என்பதற்கு தீர்வு காண மறுக்கின்ற சூழலில் - மனித அறங்களும், மனித உறவுகளும் காயடிக்கப்படுகின்றது. மக்களை அணிதிரட்டும் - சமூக நலன் சார்ந்த போராட்டமாக, தன்னெழுச்சியான போராட்டங்கள் மாற்றப்படுவதன் மூலம் மட்டுமே இதற்கு நீதி கிடைக்கும். இந்த உண்மையை உணர்வதும், உணர்த்தப்படுவதுமே காலத்தின் தேவையாக உள்ளது.