Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பெண்கள் போராடிப் பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகின்றது

மார்ச் 8 பெண்கள் தினம். தனியுடமையினால் உருவான ஆணாதிக்கச் சமூகத்தை ஒழிக்க, சமூகத்தை சமூகமயமாக்க சர்வதேசிய பெண்ணியவாதிகள் விடுத்த அறைகூவலே மார்ச் 8 ஆகியது. உழைக்கும் பெண்கள் தலைமையில் போராடுவதை குறிக்கின்றது.

உலகமயமாக்கமானது இந்தத் தினத்தை தனியுடமைக்கான பெண்களின் நுகர்வு தினமாகவும், அன்பளிப்புகளை பரிமாறும் சந்தைக்குரிய பெண்கள் தினமாகவும் கட்டமைத்து இருக்கின்றது. பெரும்பாலான பெண்கள் இப்படி தான் மார்ச் 8 ஐ அணுகுகின்றனர். ஊடகங்கள் இப்படித் தான் காட்டுகின்றது. பெண்களின் சிந்தனை இப்படித் தான் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றது.

ஆணாதிக்கச் தனியுடமை சமூகத்தில் தான், இன்னமும் மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான். எல்லாச் சிந்தனையும், வாழ்க்கை முறைமைகளும் இதற்குள் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டி ஒரு பெண் "சுதந்திரம்" பெற்று வாழ்கின்றாள் அல்லது நான் "சுதந்திரமான" பெண் என்பது எல்லாம் பொய்களாலானது. நிலவும் சமூக அமைப்பென்பது ஆணாதிக்கமுடையது மட்டுமின்றி, பெண்ணை அடிமையாக்கிய தனியுடமைச் சமூகமாகவே இருக்கின்றது.

இந்த ஆணாதிக்கச் தனியுடமைச் சமூகத்தில் ஆணின் சமூகப் பொருளாதார வீழ்ச்சி என்பது, பெண்ணை மேலும் அடிமையாக்கும். இதுவே ஆணாதிக்க தனியுடமை சமூக பொருளாதாரக் கட்டமைப்பின் பொது விதியாகும். 

நவதாராளவாதமானது சமூகம் போராடிப் பெற்ற உரிமைகளை படிப்படியாக இன்று பறிக்கும் போது, ஆணாதிக்க சமூகத்தில் வாழும் பெண்;ணுக்கும் அது பொருந்தும்;. பெண் போராடிப் பெற்ற உரிமைகளை இழந்தாக வேண்டும்;. இதுதான் இன்றைய சமூகப் பொருளாதார அமைப்பின் விதி.

சொத்து சிலரிடம் குவிதல் என்பது சொத்துடமை வர்க்கத்தால் மனிதவுரி;மைகளைப் பறிக்கின்ற நிகழ்ச்சி மூலமே சாத்தியம்;. எதிர்ப்பற்ற மனித சமூகம் மூலமே, சொத்துக்கள் குவிய முடியும்;.  இந்த பொதுச்சூழலை உருவாக்க, மனிதனின் எதிர்ப்பாற்றலை இல்லாதாக்குவது என்பதே இனறைய சமூக பொருளாதார உள்ளடக்கமாகும். மனிதனின் சமூக ஆளுமைக்கு அடிப்படையான சமூகம் குறித்த பொது அறிவை இல்லாதாக்குவதன் மூலமே, சொத்துக் குவிப்பை எதிர்ப்பு இன்றி அடைய முடியும். இதைத்தான் இன்று ஏகாதிபத்தியங்களும் - நவகாலனிய நாடுகளும் செய்கின்றன.

ஜனநாயகப் புரட்சி நடக்காத நாடுகளில் வாழும் பெண்கள், 1960 களில் உடல் சார்ந்தும், ஜனநாயக உரிமை மூலமும் பெற்று இருந்த சுதந்திரம் இன்று கிடையாது. மதம் சார்ந்த ஆணாதிக்க சமூக அதிகாரம், நவதாராளவாதத்தின் வருகையின் பின் பெண்களை மீள அடிமையாக்கி வருகின்றது. 1980 - 1990 களின் பின்பாக பகுத்தறியும் சமூக அறிவியலுக்கு பதில், பகுத்தறிவற்ற மத நம்பிக்கைகள் மீளப் புகுத்தப்பட்டு வருகின்றது. இஸ்லாம், பௌத்தம், இந்துத்துவம், கிறிஸ்தவம், யூதம்.. என்று எல்லா மதங்களும், ஆணாதிக்க மதப் பண்பாட்டு கலாச்சாரத்துக்குள் சமூகத்தை மீளக் கொண்டு வந்துள்ளது. ஆணையும், குறிப்பாக பெண்களின் சிந்தனைமுறையை, மதச் சிந்தனைமுறையாக மாற்றி இருக்கின்றது.

1960களில் பெண்களின் நடை, உடை.. தொடங்கி சமூகத்தை அணுகும் பரந்த ஜனநாயக மனப்பாங்கு, இன்று தலைகீழாக மாறியிருக்கின்றது. பழைய நிலப்பிரபுத்துவ மத அடிமைத்தனத்துக்குள் சமூகத்தை தள்ளி, பெண்ணை மதம் வரையறுத்த ஆணாதிக்க வேலிக்குள் சிறை வைத்திருக்கின்றது. நடை, உடை தொடங்கி ஜனநாயகம் வரை மத சிந்தனையின் அடிப்படையில் சிந்திக்கும் வண்ணம், பெண்ணை ஆணாதிக்கம் சிறை  வைத்திருக்கின்றது.

அதேநேரம் நவதாராளவாத சுரண்டல் முறைமைக்கு ஏற்ப பெண்ணின் உழைப்பை சுரண்டுகின்றது. பெண் தன் உழைப்பிற்காக பெற்ற ஊதியத்தை அவளே சுதந்திரமாக நுகருவதையே, பெண்ணின் விடுதலையாக முன்னிறுத்துகின்றது. சந்தைப் பொருளாதாரத்துக்கு ஏற்ப பெண்ணை வடிவமைத்து இருக்கின்றது. அதேநேரம் பழமையான நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க மதப் பண்பாட்டை கடைப்பிடிக்கும் பெண்ணாகவும் மாற்றி இருக்கின்றது.

மனித உறவுகளை எல்லாம் சந்தைக்குரிய தினமாக மாற்றி, சமூக உணர்வுக்குப் பதில் பொருள் வடிவமாக வெளிப்படுத்தக் கோருகின்றது. குறிப்பாக மேற்குலக பெண்ணின் தாய்மை சார்ந்த சமூகத்தன்மையை நுகர்வுக்குட்பட்ட உறவாகவும், உழைப்பின் ஊதியத்தை நுகர்வாக்கக் கலாச்சாரமாகவும், பெண் என்பவள் தன் உடலை நுகர்வுக்குரிய உடலாக சமூகத்தில் முன்னிறுத்துவதே, பெண்ணின்; உரிமையாக கட்டமைத்துள்ளது. இதையே மேற்கல்லாத பெண்களுக்கும் எடுத்துச் செல்லுகின்றது.

பெண்ணுரி;மை என்பது சமூக மயமாக்கலே. சமூகமயமாகாத பெண்ணுரிமை, பெண் விடுதலை  என்பது கற்பனை. தனியுடமையை முன்னிறுத்தி தனித்தனியாக மனிதனை பிரிக்கும் தனியுடமைக்கும், பிறரின் உழைப்பைச் சுரண்டும் தனியுடமைக்கும் முரணான சமூக மயமாக்கமே, ஆணாதிக்க சமூகக் கண்ணோட்டத்தை அழித்து பெண்ணின் சமத்துவ வாழ்வை பெண்ணின் உரிமையாக்குகின்றது. நவதாராளவாத உலகமயமாக்கமானது தனியுடமையை முன்னிறுத்தி தனித்தனியாக சுரண்டவும், சேர்ந்து வாழும் பெண்ணிய சமூக உணர்வுகள் சார்ந்த சமூகக் கூறுகளை அழித்து, ஆணாதிக்க மயமாக்குகின்றது.

உலகமயமாகிவரும் நவதாராளவாத பொருளாதாரத்தில், சமூகம் போராடிப் பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாக தனியுடமைக் கண்ணோட்டத்தில் இழந்து விடுவது இயல்பாகின்றது. அதை தனியுரிமையாக்குகின்றது.

பெண் உழைப்பை சுரண்டுவதற்காகவே முதலாளித்துவம் பெண்ணை வீட்டுக்கு வெளியில் கொண்டு வந்தது. பெண்ணின் உழைப்பை சந்தையில் நுகர்வாக்கிச் சுரண்ட, ஆணின் கட்டுப்பாட்டிலான நுகர்வை பெண்ணின் தனித் தெரிவாக்கியது. இதன் மூலம் பெண்ணிற்கு  தனியுடமைக்கான உரிமையை சந்தைப் பொருளாதாரம் அங்கீகரிக்கின்றது.  அதேநேரம் பெண் சமூக உணர்வு பெற்று தனியுடமைக்கு எதிராக போராடாத வண்ணம், ஆணாதிக்க மதப் பண்பாட்டை பெண்ணிற்கான வேலியாக கொண்டு வந்திருக்கின்றது. ஆணிற்கு நிகராக பெண்ணின் நுகர்வாக்கமே பெண்ணின் சுதந்திரமாகவும் - உரிமையாகவும் முன்னிறுத்தும் முதலாளித்துவ சிந்தனைமுறைமைக்கு எதிராக, பெண்ணிய அறைகூவல் என்பது சமூக மயமாக்கமே. மனிதனின் சமூகமயமாதலைக் கோருவதுதான் மார்ச் 8, அதை உயர்த்திப் பிடிப்போம்.