Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அன்று வந்ததும் இதே கொலைகாரர்கள், இன்று வந்ததும் அதே கொலைகாரர்கள்!!!

ஏழையிலும் ஏழையான தமிழ்ப்பட கதாநாயகன் ஒரே ஒரு பாட்டுப்பாடி முடிப்பதற்குள் உலக மகா பணக்காரன் ஆவதை ரசிகசிகாமணிகள் விசிலடித்து கொண்டாடுவதைப் போல ஊழலிலும், அதிகார மீறல்களிலும், கொலைகளிலும், கொள்ளைகளிலும் ஊறிப் போயிருக்கும் இலங்கையின் அதிகாரவர்க்கம் ஒரே ஒரு நாளில் நீதிமான்களாக, மக்கள் தொண்டர்களாக, அகிம்சா மூர்த்திகளாக மாறி விட்டதாக படம் காட்டுகிறார்கள்.

ஒரே ஒரு தேர்தல் எல்லாவற்றையும் மாற்றி விடும் என்று அம்புலிமாமா கதை சொல்கிறார்கள். கடைசி நாள்வரைக்கும் இலங்கை வரலாற்றின் மிக மோசமான மக்கள் விரோதியான மகிந்த ராஜபக்சவுடன் கூடி கொலைகள் செய்தவர்கள், கொள்ளை அடித்தவர்கள் இன்று மகிந்தாவின் கும்பலை அம்பலப்படுத்துவதற்காக உயிரையும் விடுவேன் என்று வீரவசனம் பேசி புல்லரிக்க வைக்கிறார்கள்.

கொடுமையான மரணங்களை நிறைவேற்றிய மரணப் படையொன்றின் தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச செயற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்யுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இயக்கி வந்த மரணப்படைக்கு அவரே உத்தரவிட்டார் எனவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஆள்கடத்தல்கள், தாக்குதல்கள், படுகொலைகளுக்கு கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பு என எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மிக முக்கியமாக மூன்று கொலைகளுக்கு அவரே காரணம் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்றும் அதிலொன்று லசந்த விக்கிரமதுங்கவின் கொலை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆகா, என்ன ஒரு கடமை உணர்ச்சி, துப்பறிவதில் என்ன ஒரு வேகம். லசந்த விக்கிரமசிங்கா 08.01.2009 இல் கொலை செய்யப்பட்டார். இன்று அதே தை மாதம் 2015, சரியாக ஆறு வருடங்கள். இவ்வளவு காலமும் கண்டுபிடிக்க முடியாத கொலையாளியை மைத்திரி சிரிசேனா பதவிக்கு வந்த அடுத்த நாள் இலங்கையின் காவல்நாய்கள் மோப்பம் பிடித்து கண்டுபிடித்திருக்கின்றன. லசந்த விக்கிரமசிங்கா இலங்கையின் தலைநகரம் கொழும்பிலே பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். "இறுதியாக நான் கொலை செய்யப்படும் போது என்னை கொலை செய்வது அரசாங்கமாகவே இருக்கும்" என்று அவர் எழுதியிருந்தார். அண்ணன் மகிந்தா, தம்பி கோத்தபாயா என்ற கொலையாளிகள் தான் அப்போது அரசாங்கமாக இருந்தார்கள். இந்த துப்பறியும் சிங்கங்கள் அப்போது மகிந்த குடும்பத்தின் காலையும், மற்றதையும் கழுவிக் கொண்டிருந்தார்கள்.

நாட்டில் இடம் பெற்ற மிக முக்கியமான கொலைகள், வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச காரணம் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். "லசந்த விக்ரமதுங்க, (சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர்), பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர (முன்னாள் அமைச்சர்), ராகமை லொக்கு சியா, வெள்ளைவான் சம்பவங்கள் ஆகியவற்றின் ஆசிரியர் கோட்டாபய ராஜபக்ச, ஆம் இதனை நான் பொறுப்புடன் தான் கூறுகின்றேன். ஊழல் பேர்வழியான பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்சவிற்கு டுபாயில் மெரியட் என்றொரு பெயரில் ஹோட்டல் இருக்கின்றது. உடவல வீதி தனமன்விலவில் பெரிய ஹோட்டல் ஒன்று இருக்கிறது. உண்மையை கூறுவதற்காக நான் செத்தாலும் பரவாயில்லை உண்மையை கூறுவேன். எனக்கு எதிராக ஒரு சிறு குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க முடியாது. நான் பெண்களை திருடவில்லை. நான் பயப்பிடமாட்டேன். எனக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மீது நம்பிக்கையிருக்கின்றது. அரசியல் அனுபவம் வாய்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஊழல் மோசடிகள் இன்றி நல்லாட்சியை ஏற்படுத்துவார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். பழிவாங்க மாட்டார்கள்".

அண்ணன் மேர்வின் சில்வா ஒரு கவரிமான். அவர் மானத்திற்காகவே உயிர் வாழ்கிறவர். அவர் உண்மை சொல்லுறதிலே ஒரு அரிச்சந்திரன். உண்மை சொன்னதால் அரிச்சந்திரன் சுடுகாட்டிற்கு காவல் காக்க மட்டும் தான் போனான். ஆனா அண்ணன் உண்மை சொல்லுவதற்காக உயிரையும் விட்டு விட்டு பிணமாக சுடுகாட்டிற்கு போவேன் என்று வீரசபதம் போடுகிறார். மகிந்த கும்பலுடன் சேர்ந்து அத்தனை அநியாயங்களையும் செய்த இந்தப் பொறுக்கி இப்பொழுது உத்தமபுத்திரன் வேசம் போடுகிறது. வயது முதிர்ந்த பெண்ணான முன்னாள் மனித உரிமை ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளையை திருமணம் செய்வேன் என்ற இந்த தெருப்பொறுக்கி இப்போது பெண்களைப் பற்றி பேசுகிறது. மகிந்தா என்ற கொள்ளைக்கூட்டத் தலைவன் கவிண்டு போக மைத்திரியும், ரணிலும் என்ற போட்டி கோஸ்டி வந்ததால் தனது அட்டகாசங்களிற்காக கட்டாயம் பழிவாங்குவார்கள் என்று நடுங்கிப்போய் இருக்கும் இந்த நாய், அல்லக்கைகளும் அதிகாரமும் இருந்த துணிவில் தான் பெரிய சண்டியன் என்று நெஞ்சை நிமிர்த்தி திரிந்த இந்த மகிந்தாவின் வளர்ப்பு பிராணி இப்போது நடுங்கிப் போய் தனது எசமானர்களை காட்டிக் கொடுக்கிறது.

கடந்த பத்து வருடங்களாக இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் இதுவரையில் எண்ணூறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ஜாதிக்க ஹெல உறுமயவின் ஊழலுக்கு எதிரான முன்னணிக்கே இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதே ஜாதிக்க ஹெல உறுமய தான் இதே பத்துவருடங்களில் மகிந்தாவுடன் கூடிக் குலாவியது. இந்த இனவெறியர்களின் கட்சிக்காரனான சம்பிக்க ரணவக்க என்ற ஆசாமி சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சராக மகிந்தாவுடன் சேர்ந்து கொண்டு இயற்கையை முதலாளிகளிற்கு விற்று சுற்றாடலை அழித்ததும் இந்தப் பத்து வருடங்களில் தான். இன்றைக்கு திடீரென்று ஊழல் எதிர்ப்பு போரிற்கு உயிரைக் கொடுக்க வெளிக்கிட்டிருக்கிறார்கள்.

இவரைப் பார்த்தால் இலங்கை கடற்படையை சேர்ந்தவர் என நினைப்பீர்கள்? ஆனால் இவர் கோத்தபாயாவின் ரக்ணா பாதுகாப்பு சேவை எனும் பெயரில் இயங்கிய தனியார் படையைச் சேர்ந்தவராகும். இதுபோன்ற உடையோடு இந்திய மீனவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினால் இலங்கை கடற்படை, இந்திய மீனவர்களை கொல்வதாக தான் எல்லோரும் நம்புவார்கள். "பழி ஓரிடம், பாவம் ஓரிடம்" என இந்த சிங்கள கட்டுரை கருத்தொன்றை முன் வைத்துள்ளது. இதை ஒரு தமிழ் ஊடகவியலாளர் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

இலங்கை கடற்படையின் நீலச்சீருடையைப் போலவே கோத்தபாயாவின் "ரக்ணா பாதுகாப்பு சேவை" என்னும் குண்டர்களும் நீலச்சீருடை போட்டிருக்கிறார்களாம். இந்தக் குண்டர்கள் தான் தமிழ்நாட்டு கடல் தொழிலாளர்களை கொன்றிருப்பார்களாம். குண்டர்கள் கொல்ல கருணாமூர்த்திகளான இலங்கை கடற்படையினரை எல்லோரும் பழி சொல்கிறார்கள் என்று அந்த சிங்களக் கட்டுரை அப்பாவிகளான இலங்கைக் கடற்படையினரை எண்ணிக் கண்ணீர் விடுகிறது. அந்த களங்கத்தை துடைக்க வேண்டும் என்று, கடற்படையினரின் கண்ணியத்தை தமிழ்மக்களிற்கு எடுத்துக் காட்ட வேண்டும் என்ற வரலாற்றுக் கடமையை எண்ணி ஒரு தமிழ் ஊடகவியலாளர் விழுந்து கட்டி தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

இலங்கையின் ஊடகவியலாளர்கள், காவற்படையினர், அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர் என்று இவர்கள் கடமை தவறாதவர்களாக, ஊழல் எதிர்ப்பு போராளிகளாக, அநியாயங்களைக் கண்டு கொதிப்பவர்களாக திடீரென அவதாரம் எடுப்பதன் காரணம் என்ன?. இத்தனை காலமாக மகிந்த கும்பலுடன் சேர்ந்து கொள்ளை அடித்தவர்கள் மகிந்தாவைக் காட்டிக் கொடுப்பதன் காரணம் என்ன?. சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க மக்கள் விரோதிகள்; தாம் ஆட்சிப்பொறுப்பில் இருந்த போது மகிந்த செய்த அதே கொலைகளையும், கொள்ளைகளையும் செய்து கோரமுகம் காட்டியவர்கள் இன்று அமைதிமுகம் காட்டுவதன் காரணம் என்ன?.

இன்று இலங்கையில் இருக்கும் இந்த முதலாளித்துவ, மக்கள்விரோத, சிங்களப் பேரினவாத அரசமைப்பு மீது நம்பிக்கை வையுங்கள் என்று அவர்கள் மக்களிடம் சொல்கிறார்கள். இந்த ஊழல்கள், கொலைகள், அதிகார அடக்குமுறைகள் எல்லாம் தனிமனிதர்களின் தவறுகளே தவிர இந்த அமைப்பு முறையின் தவறுகள் அல்ல என்று நம்பச் சொல்கிறார்கள். காக்கும் காவல்துறை கள்ளர்கள், காடையர்களிடமிருந்து என்று அதிகாரவர்க்கதினருக்கு குடை பிடிக்கும் ஊழலில் ஊறிய இலங்கையின் பொலிஸ்காரர்கள் சொல்கிறார்கள். மகிந்தா மூன்று முறை என்ன முப்பது முறை என்றாலும் ஜனாதிபதி தேர்தலில் நிற்கலாம் என்று பஜனை பாடக் கூடிய இலங்கையின் நீதித்துறை எல்லோரையும் நீதிக்கு தலைவணங்க வைக்கும் என்று நம்பச் சொல்கிறார்கள். ஒரு சர்வாதிகார ஆட்சி நடந்தால் அதை முறியடித்து புதிய நல்லாட்சி தருவோம் என்று மாறி மாறி ஆட்சி செய்யும் பழம்பெருச்சாளிகள் மக்களை நம்ப சொல்கிறார்கள்.

அதிகாரவெறியிலும், ஊழலிலும் ஊறிப் போயிருக்கும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறை ஒருநாளும் மாறப்போவதில்லை. மக்கள் தலைமையேற்கும் ஒரு இடதுசாரி அமைப்பினாலேயே மக்களின் அரசை அமைக்க முடியும். வறுமை என்னும் இருட்டை இந்த நாட்டின் மீது போர்த்தியிருக்கும் இந்த சர்வாதிகாரிகளை விரட்டியடிக்க உயர்ந்த மர உச்சிகளிலிருந்து உதிக்கும் சூரியனாய் எழுந்திடுவோம்.