Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அமெரிக்காவும், கத்தோலிக்க சபையும் சேர்ந்து காப்பாற்றிய இனப்படுகொலையாளி!

அமெரிக்கா மகிந்த ராஜபக்சாவை இனப்படுகொலைக்காக தூக்கிலே போடும், செஞ்சோற்றுக்கடன் தீர்க்க நாங்கள் அமெரிக்க கொடியை தூக்குவோம் என்று ஜெனீவாவில் தமிழ் தேசிய அரசியல் விஞ்ஞானிகள் உலகம் எல்லாம் கொல்லும் அமெரிக்காவின் கொடியை கையிலே பிடித்துக் கொண்டு நின்றார்கள். இவர்கள் ஜெனீவாவில் அமெரிக்கா வாழ்க என்று பஜனை பாடிக் கொண்டிருந்த இந்த ஐப்பசி மாதத் தொடக்கத்தில் தான் எல்லைகள் அற்ற மருத்துவ அமைப்பு (Medecins Sans Frontiers) ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரத்தில் பொறுப்பேற்று நடத்தும் மருத்துவமனையின் மீது குண்டு வீசி இருபத்திரண்டு அப்பாவிகளைக் கொன்றது. அமெரிக்க இராணுவம் குண்டு வீசத் தொடங்கிய போதே எல்லைகள் அற்ற மருத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் காபுலில் இருக்கும் நேட்டோ தலைமையகத்திற்கும், வாசிங்டனிற்கும் தொலைபேசியில் அறிவித்திருந்த போதும் தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டன என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் இன்றைய வரலாறு மட்டும் அல்ல அதன் என்றைய வரலாறும் இரத்தம் தோய்ந்ததாகத் தான் இருந்து வருகிறது. அன்டே பாவெலிக் (Ante Pavelic) என்ற கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த குரோசிய (Croatia) இனப்படுகொலையாளனை அமெரிக்காவும், கத்தோலிக்க சபையும் சேர்ந்து காப்பாற்றினார்கள். மூன்று இலட்சம் சேர்பியர்கள், யூதர்கள், ரோமா ஜிப்சிகள் மற்றும் கிட்லரின் நாசிசத்திற்கும், முசோலினியின் பாசிசத்திற்கும் எதிரான முற்போக்கு, ஜனநாயக குரோசியர்களை அவன் படுகொலை செய்திருந்தான்.

கொலைகளின் எண்ணிக்கை அடிப்படையில் கிட்லருக்கு அடுத்த இடத்தில் அவன் இருந்தான். 1941 சித்திரையில் இத்தாலிய பத்திரிகையாளரான அல்பியோ ருஸ்சோ அவனுடன் ஒரு நேர்காணலை நடத்திய போது "கிளர்ச்சி செய்யும் சேர்பியர்கள் கொல்லப்படுவார்கள்" என்று அன்டே பாவெலிக் தனது இனவெறியை காட்டினான். "எல்லா சேர்பியர்களும் எதிர்த்து கிளர்ச்சி செய்தால் என்ன செய்வீர்கள்" என்று அல்பியோ ருஸ்சோ கேட்டபோது " நாம் எல்லா சேர்பியர்களையும் கொல்லுவோம்" என்று அவன் கொலைவெறி காட்டினான்.

இரண்டாம் உலகப்போர் 8.05.1945 இல் ஜெர்மனி சரணடைந்ததைத் தொடர்ந்து முடிவிற்கு வந்தது. ஆனால் அன்டே பாவிலிக் தன்னுடைய கொலைகாரக் கும்பல்களை டிட்டோ தலைமையில் அமைந்த ஜனநாயக யூகோஸ்லாவியக் கூட்டமைப்பிற்கு எதிராக போராடும்படி கட்டளையிட்டு விட்டு தான் மட்டும் ஆஸ்திரியாவிற்கு தப்பி ஓடிவிட்டான். நமது புலம்பெயர் "தேசபக்தர்கள்" தாங்களது பிள்ளைகளை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துக் கொண்டு வன்னியில் ஏழைக்குழந்தைகளை பலவந்தமாக பிடித்துக் கொண்டு போர்முனைகளிற்கு அனுப்பியதை ஆதரித்தது உங்களிற்கு இந்த நேரத்தில் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல.

சோவியத் படைகளிடம் இருந்து தப்புவதற்காக அவன் அமெரிக்க கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்று அமெரிக்க புலனாய்வு துறையினரிடம் தனது விபரங்களைக் கூறிய போதும் அவர்கள் அவனைக் கைது செய்யவில்லை. அன்டே பாவிலிக் பின்பு இத்தாலி சென்று கத்தோலிக்க துறவியாக டொன் பெட்ரோ கொன்னர் என்ற பெயரில் வத்திக்கானின் ஆதரவுடன், அவர்களின் இருப்பிடங்களிலேயே தங்கினான். கத்தோலிக்க சபை அமெரிக்க, பிரித்தானிய அரசுகளுடன் சேர்ந்து ஒரு இனப்படுகொலையாளியை பாதுகாக்கிறது என்று டிட்டோவும், யூகோஸ்லாவிய பொதுவுடமை அரசும் நேரடியாக குற்றம் சாட்டிய போதும் போப் பயஸ் "என்னைப் போல் என் சக இனப்படுகொலையாளியை நேசிப்பேன்" என்பது போல அன்டே பாவிலிக்கை பாதுகாத்தார்.

கத்தோலிக்க சபை, அன்டே பாவிலிக் ஒரு கத்தோலிக்கன் என்பதற்காக மட்டும் அவனைக் காப்பாற்றவில்லை. யூகோஸ்லாவியாவில் உதயமாகிய சமதர்ம அரசும், மக்களும் கத்தோலிக்க சபையை தூக்கி குப்பைத்தொட்டியில் போட்டதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கடவுள், பாவம், புண்ணியம் என்று பித்தலாட்டம் பண்ணி மக்களை ஏமாற்றி அதிகாரத்தையும், சொத்துக்களையும் உலகம் முழுவது சேர்த்துக் கொண்டவர்களிற்கு பொதுவுடமைவாதிகளால் தங்களது ஆணிவேர் அறுக்கப்படுவதிலிருந்து தப்பிக் கொள்வதற்காக இத்தாலியின் முசோலினி, ஸ்பெயினின் பிராங்கோ, குரோசியாவின் அன்டே பாவிலிக் போன்ற படுகொலையாளிகளின் பக்கம் நின்றார்கள்.

நாசி ஜேர்மனி, பாசிச இத்தாலியுடன் சேர்ந்து தங்களிற்கு எதிராக போரிட்ட அன்டே பாவிலிக்கை எதற்காக அமெரிக்காவும், பிரித்தானியாவும் காப்பாற்றினார்கள்? கிட்லருக்கும், முசோலினியிற்கும் எதிராக விசாரணைகள் நடத்தியவர்கள் எதற்காக அன்டே பாவிலிக் போன்ற கிழக்கு ஐரோப்பிய கொலையாளிகளை தண்டிக்கவில்லை?

ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்றவை பொருளாதார, இராணுவ ரீதியாக பலம் வாய்ந்த நாடுகள். சர்வதேச அளவில் இந்த நாடுகள் தங்களிற்கு என்றைக்குமே போட்டியாக இருக்கக் கூடிய நாடுகள் என்பதனால் அவற்றை அழித்தார்கள். ரஸ்யாவிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கிளர்ந்து எழுந்த சமதர்ம அரசுகள் உலகம் முழுவதும் புரட்சி அலைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அவை தமது இருப்பையே அசைத்து விடும் என்பதினால் கலங்கிப் போன மேற்கு நாடுகள் பொதுவுடமையின் எதிரிகளிற்கு ஆதரவு காட்டினார்கள். கம்யுனிச எதிர்ப்பாளனான அன்டே பாவிலிசக் யூகோஸ்லாவியாவின் பொதுவுடமை அரசிற்கு எதிராக கலகம் செய்வான் என்பதினால் அவனை தப்ப வைத்து பொதுவுடமை அரசிற்கு எதிரான தங்களது எதிர்ப்புரட்சி சதிகளை முன்னெடுத்தார்கள். ஜேர்மனியில் ஒரு கம்யுனிசப்புரட்சி நடந்து சமதர்ம அரசு அமைந்திருக்குமேயானால் இவர்கள் அந்த அரசைக் கவிழ்ப்பதற்காக கிட்லரைக் கூட தப்ப வைத்திருப்பார்கள்.

தங்களின் லாபவெறிக்காக, அதிகார வேட்கைக்காக எதையும் செய்யக்கூடிய அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் இலங்கைத் தமிழ் மக்களின் கொலையாளிகளை விசாரிப்பார்களாம்; புலம்பெயர் நாட்டு தமிழ்கைப்பிள்ளைகள் சொல்கிறார்கள். அமெரிக்கா வடிவேலின் காமடிகளை பார்த்திருந்தால் இந்த கைப்பிள்ளைகளைப் பற்றிய குறிப்பில் "எப்பிடி அடிச்சாலும் தாங்கிறாங்கள், இவங்க ரொம்ப நல்லவங்க" என்று எழுதி வைக்கக் கூடும்.

மேலதிக விபரங்கட்கு:

1. wikipedia

2.The Vatican Role in the Ustasha Genocide in the Independent State of Croatia

3.