Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கோலஞ்செய் யாழ்ப்பாணத்து பிரின்சிபலே நீயெனக்கு ஆறாம் வகுப்பு அட்மிசன் ஒன்று தா!!!

பணமும் பாரிஸ் சென்ட்டும், சென்ற் மைக்கல் சேர்ட்டும்

நாலு பேர் அறியாமல் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்

யாழ்ப்பாணத்து பிரின்சிபலே நீயெனக்கு

ஆறாம் வகுப்பு அட்மிசன் ஒன்று தா.

பாட்டைக் கெடுத்ததிற்கு அவ்வையார் மன்னிக்கவும். பிள்ளையார் என்று ஒருவர் இருந்தால் அவருக்கு அவ்வைக்கிழவி சொன்னபடி பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்து கொடுத்தால் போதும். ஆனால் யாழ்ப்பாணத்து பாடசாலைகளிற்கு ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் தான் ஒரு பதினொரு வயது பச்சைக்குழந்தைக்கு பள்ளிக்கூட அனுமதி கிடைக்கும். புது வருடத்தில் தை மாதத்தில் ஆறாம் வகுப்பிற்கு போகும் ஏழைப்பிள்ளைகளிற்கு தை பிறந்தால் வழி பிறப்பதில்லை. கல்விக்கொள்ளையர்கள் காசுக்காக ஏழைகளின் எதிர்காலத்திற்கான வழிகளை அடைத்து மூடுவதுதான் இலங்கையில் நடக்கிறது. அந்தச் சிறுவனோ, சிறுமியோ ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசு தேர்வில் நல்ல புள்ளிகள் பெற்றாலும் பணமில்லாவிட்டால் பாடசாலைக் கதவுகள் திறவாது.

ஏழைகளிற்கும் பணக்காரர்களிற்குமான பொருளாதார இடைவெளி மிக அதிகமாக இருக்கும் இன்றைய இலங்கைச் சூழலில் ஏழைப்பெற்றோர் தமது குழந்தைகளின் எதிர்காலத்திற்கான ஒரே வெளிச்சமாக இலங்கை மக்களின் அடிப்படை உரிமையான இலவசக் கல்வியை நம்பியிருக்கிறார்கள். இலங்கையின் மக்கள் விரோத அரசுகள் கல்வியையும் தனியாருக்கு விற்று காசு பார்க்க முயற்சிப்பதை எதிர்த்து மாணவர்கள் இடைவிடாது தீரத்துடன் போராடி வருகிறார்கள். இலங்கை முழுவதும் உள்ள ஏழை மாணவர்களின் எதிரி இலங்கை அரசாங்கம் என்றால் யாழ்ப்பாணத்து ஏழை மாணவர்களிற்கு இலங்கை அரசு, பாடசாலை நிர்வாகம் என இரு எதிரிகள் இடை மறிக்கிறார்கள்.

இலங்கை அரசு தமிழ்மக்களை ஒடுக்குகிறது; இரண்டாம் தரக்குடி மக்களாக நடத்துகிறது என்றால் இந்த பச்சைத்தமிழர்களான யாழ்ப்பாணத்து பாடசாலை நிர்வாகிகள் ஏழைத்தமிழ் மாணவர்களை ஏறி மிதிக்கிறார்கள். பாடசாலைக்கு கட்டிடம் கட்ட, பாடசாலை அபிவிருத்திக்கு என்று ஒவ்வொரு ஆண்டும் புதிதாக சேர்பவர்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள்.

இந்த பிரபல பாடசாலைகளின் வெளிநாடுகளில் இருக்கும் பழைய மாணவர் சங்கங்கள் பெரும் பணம் செலவளித்து தமிழ்ச்சினிமாவின் ஆசாமிகளை கூப்பிட்டு ஆண்டுவிழா கொண்டாடுவார்கள். போரும், வறுமையும் கழுத்தை நெருக்கும் சூழலில் எமது குழந்தைகளின் எதிர்காலம் என்பது கானல்நீராக இருக்கும் போது இவர்கள் தமிழ்ச்சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஏழைகளிற்கு பணத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள். ஏன் இப்படி அநியாயம் செய்கிறீர்கள் என்று இவர்களைக் கேட்டால் தமிழ்ச் சினிமாவின் உலக அதிசயங்களைக் காட்டினால் தான் பணம் சேரும்; அந்தப் பணத்தில் பாடசாலைக்கு கட்டிடம் கட்ட உதவி செய்கிறோம் என்று ஒரு விஞ்ஞான விளக்கம் கொடுப்பார்கள்.

பாடசாலை நிர்வாகிகளும், பழைய மாணவர் சங்கங்களும் சொல்வது போல சேர்க்கும் பணத்தில் கட்டிடங்கள் கட்டியிருந்தால் இந்த சின்ன யாழ்ப்பாணத்தில் நிற்பதற்கு கூட இடமில்லாமல் பாடசாலைக் கட்டிடங்கள் மட்டும் தான் இருக்க வேண்டும். அதிகமான பாடசாலைகள் அன்றிருந்த மாதிரியே தான் இன்றைக்கும் இருக்கின்றன. ஆகவே இந்த கட்டிடங்கள் எங்கே கட்டப்படுகின்றன என்பதை யாராவது கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.

மாணவர்களிடம் பணம் இருந்தால் தான் படிப்பிப்போம் என்று இவர்கள் கல்வியை விற்கிறார்கள். ஆனால் பணத்தைப் பற்றிய சிந்தனை இல்லாமல் மாணவர்களிற்கு கல்வியை அள்ளி வழங்கிய காலம் ஒன்று இருந்தது. யாழ்ப்பாண வாலிபர் சங்கம், இலங்கை கம்யுனிஸ்ட்டு கட்சி போன்றவற்றின் அங்கத்தினர்கள்; அமைப்புகள் எதிலும் அங்கத்துவம் வகிக்கா விட்டாலும் மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட ஆசிரியர்கள் என்று மாபெரும் மனிதர்கள் அன்றிருந்தார்கள். அவர்கள் வீட்டிற்கு போகும் சிந்தனையே இல்லாமல் மாலை நேரங்களில் கற்பித்தார்கள். தமது வீடுகளிற்கு மாணவர்களை வரவைத்து கற்பித்தார்கள். ஊர்களில் உள்ள வாசிகசாலைகளில், சனசமுக நிலையங்களில் ஆசிரியர்களும், ஊர்களில் உள்ள உயர்கல்வி கற்றவர்களும் இரவுநேரங்களில் கற்பித்தார்கள்.

அதனால் தான் அந்த நாட்களில் ஒரு வருடத்தில் படிப்பிக்க வேண்டியதை ஒரு தவணையான மூன்று மாதங்களில் அவர்கள் படிப்பித்து முடித்ததாகவும் இலங்கையிலேயே மிக அதிகளவான மாணவர்களை பல்கலைக்கழகங்களிற்கு அனுப்பி வைக்கக் கூடியதாகவும் இருந்ததாக கந்தரோடை ஸ்கந்தவரோதயா கல்லூரியின் முன்னாள் அதிபரும், யாழ்ப்பாண வாலிபர் சங்கத்தின் அங்கத்தவருமான காலம் சென்ற ஒரேற்றர் சுப்பிரமணியம் அவர்கள் குறிப்பிடுகிறார்.

இன்றைக்கு அந்த ஆசிரியர்களும் இல்லை. ஊரவர்களும் இல்லை. கோவில் கோபுரத்தை மற்ற ஊர் கோயில் கோபுரத்தை விட எவ்வளவு உயரமாக கட்ட வேண்டும் என்ற போட்டி தான் இன்றைக்கு நடத்துகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும், வட மாகாணசபையிற்கும் ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி செலவளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது. வீணாக திருப்பி அனுப்பும் நிதியை ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு பாவிக்கக் கூடாதா? பாடசாலைகளில் நன்கொடை என்ற பெயரில் நடக்கும் கல்விக்கொள்ளையை தடுத்து நிறுத்தக் கூடாதா? என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்காரர்களிடம் யாரும் கேட்டு விடாதீர்கள். சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்கா, மைத்திரி சிறிசேனாவுடன் கூட்டுச் சேர்ந்து தமிழ்மக்களின் இனப்படுகொலைக்கு தீர்வு காண்பது போல இந்த கல்விக்கொள்ளைக்காரர்களுடன் சேர்ந்து ஒரு தீர்வு ஒன்றைக் கண்டு பிடித்தாலும் பிடிப்பார்கள்.

யாழ்ப்பாணத்தில் நன்கொடை கேட்டு ஏழை மாணவர்களின் கல்வியை அழிக்கிறார்கள். வன்னியில், கிழக்கு மாகாணத்தில் போரினால் அழிந்த வாழ்வும், வறுமையும் ஏழைக்குழந்தைகளிற்கு எதிர்காலம் என்பதை எண்ணிப் பார்க்க முடியாமல் தடை போடுகின்றன. வாழ்வு என்பது வறுமை என்பதாகிப் போன மலையகத்தில் ஏழைச்சிறுவர்கள் பசி காரணமாக குழந்தை தொழிலாளர்களாகி தேயிலைச் செடிக்கு உரமாகின்றார்கள். முதலாளித்துவக் கொள்ளையர்களான இலங்கை அரசினால் முழு நாடுமே வறுமையில் மூழ்கிறது.

இலங்கை அரசின் கல்விக் கொள்ளைக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொடர்ந்து போராடுகின்றது. அது போல மற்ற மாணவர்களும் அமைப்பாகி போராட முன் வர வேண்டும். நன்கொடை கேட்கும் அதிபர்களிற்கு எதிராக அந்தப்பகுதி மக்களும், மாணவர்களும் போராட வேண்டும். இன்று மக்களிற்கு கிடைத்திருக்கும் உரிமைகள் யாவும் போராடிப் பெற்றவையே அன்றி இந்த மக்கள் விரோத அரசுகள் தாமாக கொடுத்த சலுகைகள் அல்ல. போராட்டம் இன்றி வாழ்க்கை இல்லை.