Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழர் தேசத்தை வரைபடமாக்கிய ஒரு ஓவியக் கலைஞன்!

கரம்பன் கிராமத்தில் மண் குடிசையொன்றில் மூன்று ஆண், இரண்டு பெண் சகோதரங்களுடன் கூடப் பிறந்த ஒரு சிறுவனின் குடும்பம் வறுமையில் வாடியது. அவனுக்கு ஓவியக் கலை கை வந்த கலையாக அமைந்திருந்தது. ஆரம்பக் கல்வியைத் கரம்பன் திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் பெற்றுக் கொண்ட அவனுக்கு ஆங்கிலக் கல்வியைத் தொடர வசதி இருக்கவில்லை. உறவினரான திருமறைச் சகோதரர் ஒருவருடைய ஆதரவுடன் அவன் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லுரியில் எட்டாம் வகுப்பு வரை தனது ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக் கொண்டான். பின்னர் ஹற்றன் புனித ஜோன் பொஸ்கோ பாடசாலையில் படிக்கும் போது 1942ல் அவனுக்கு வயது 18.

அந்த வயதில் குடும்பச் சுமை காரணமாக கொழும்புச் சந்தைப்படுத்தல் திணைக்களத்தில் எழுதுவினைஞராக வேலைக்குச் சேர்ந்த அந்த இளைஞன்தான் "டேவிட் ஐயா" என எல்லோராலும் அறியப்பட்ட சொலமன் அருளானந்தம் டேவிட்.

தனது 19 வயதில் யாவத்த நீர்ப்பாசன பயிற்சிக் கல்லுரியில் பயிற்சி பெற்று காணி அளக்கும் பணியில் குருநாகல், நிக்கவரெட்டியா, கல்கமுவ, பிபிலிய, மொனறாகல, வெல்லவாய ஆகிய ஊர்களில் கடமையாற்றினார். இலங்கைத் தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டிடக் கலையை கற்று இலங்கை பொதுவேலைத் திணைக்களத்தில் நுழைந்த அவர் 1953ல் அவுஸ்திரேலியக் கட்டிடக் கலைப் புலமைப் பரிசு பெற்றார்.

அவுஸ்திரேலியாவில் பட்டம் பெற்று 1956ல் நாடு திரும்பி அதே திணக்களத்தில் உதவிக் கட்டிடக் கலை நிபுணராக பணியாற்றினார். இதே ஆண்டில் இவரால் திருகோணமலையில் தமிழ் பல்கலைக் கழகம் அமைப்பதற்கான திட்ட வரைபட நகல் தயாரிக்கப்பட்டு அதன் விபரம் அடங்கிய கைநூல் ஒன்றும் வெளியிடப்பட்டு கட்டிட அத்திவாரத்திற்கான மூலைக்கல்லும் நாட்டப்பட்டது. இதே ஆண்டில் "சிங்களம் மட்டும்" சட்டம் கொண்டுவரப்பட்ட போது ஓய்வுபெற விண்ணப்பித்த மனு சேவைக் காலம் போதாது என மறுக்கப்பட்டது. அதனால் தண்டப்பணம் (5000ரூபா) செலுத்தி ஓய்வு பெற்றார்.

1960ல் லண்டன் சென்ற அவர் இங்கிலாந்து, நைஜீரியா, கென்யா நாடுகளில் கட்டிடக் கலைஞராக, நகர திட்டமிடலாளராக பணி புரிந்து விட்டு அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ, ஹாவாய், யப்பான், ஹொங்கொங், தாய்லாந்து, சிங்கப்பூர் ஊடாக 1970ல் நாடு திரும்பினார்.

நாடு திரும்பியதும் தமிழ் பல்கலைக்கழக இயக்கத்தின் வவுனியா, திருகோணமலை மாவட்டங்களுக்கான பண்ணைத் திட்டத்தை பொறுப்பேற்று அதனை தனது சொந்த பணத்தில் இஸ்ரேல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்திருந்த "கிபுட்ஸ்" (kibbutz) என்ற கூட்டுப் பண்ணை முறையிலான விவசாயக் கல்விப் பண்ணைகளாக உருவாக்கினார். அது வெற்றியளிக்கவில்லை.

பின்னர் டாக்டர் ராஜசுந்தரத்துடன் இணைந்து "காந்தியம்" என்ற அமைப்பை 1976ல் ஆரம்பித்தார். குருகுலம், கிளிநொச்சியில் கிராம ஊழியர்களை பயிற்றுவிப்பதற்காக "காந்தியம் பயிற்சிக் கல்லூரியை" நிறுவி வட கிழக்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இளம் பெண்களுக்கு "காந்தியம்-கல்வி சுகாதாரம"; ஆகிய பாடங்களில் 3 மாத பயிற்சி வழங்கப்பட்டது. இவர்கள் ஊடாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சுமார் 15,000 சிறுவர்களுக்கு கல்வியூட்டுவதற்கும் குழந்தைகளைப் பராமரிப்பதற்கும் வசதிகளடங்கிய 500 ஆரம்ப பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. அங்கே குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டு பாட்டும், நடனமும் கற்றுக் கொடுக்கப்பட்டது. இத்துடன் 1981ல் மலையகத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்திருந்த சுமார் 25,000 மலையக மக்களை குடியமர்த்தி அவர்களுக்கான சுய வாழ்வாதாரத்துக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.

1982ல் ஒல்லாந்து நாட்டில் இடம்பெற்ற சர்வதேச விவசாயிகளின் 6 வாரங்களடங்கிய ஆய்வு மாநாட்டில் டேவிட் ஐயா சமர்ப்பித்த "ஒரு ஏக்கர் பண்ணையில் சிக்கன விவசாயம்" என்ற கட்டுரை அனைவராலும் பாராட்டப்பட்டு 'உலக சிக்கனக்காரன்" (Mr Eco) என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

1983 ஏப்ரலில் அவரும் டாக்டர் ராஜசுந்தரமும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு "காந்தியம்" இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டது.

சிறுவனாக படிக்கும் காலத்திலேயே (1940களில்) தமிழர்களின் எதிர்காலம் குறித்த சிந்தனைகளைப் பெற்றுக் கொண்டிருந்த ஐயா பின்னர் தனது தென்னிலங்கை வாழ்வனுபவங்கள் ஊடாக தமிழர்கள் தங்கள் பாதுகாப்பைத் தாங்களாகவே ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொண்டார்.

1946ன் பிற் பகுதிகளில் கொழும்பில் தனது கையாலேயே வடிவமைத்துக் கட்டப்பட்டிருந்த வை.எம்.சி.ஏ. (YMCA) கட்டிடத்தில் தங்கியிருந்த ஐயா அதன் அருகே உள்ள யூனியன் பிளேஸ் சதுக்கத்தில் இடம் பெறும் இடதுசாரிக் கட்சிகளின் வேலை நிறுத்தக் கூட்டங்களில் பங்கு பற்றி என்.எம்.பெரேரா கொல்வின்.ஆர்.டி.சில்வா, திரு பீட்டர் கெனமன் ஆகியோரது பொறிப் பறக்கும் உரைகளை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்.

1947ல் அரச சபையில் சிங்களக் குடியேற்றத் திட்டத்தை எதிர்த்து திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் "தயவுசெய்து குடியேற்றத்தை நிறுத்துங்கள். இல்லாவிடின் அங்கே இரத்த ஆறு ஓடும்" என்று குறிப்பிட்டுப் பேசிய உரையை ஐயா ஒருநாள் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்து கேட்க நேர்ந்தது. அத்துடன் 1956ல் அவுஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய மறுநாள் கொழும்பு காலிமுகத்திடலில் பாராளுமன்றத்தின் முன் தமிழ்த் தலைவர்கள் மறியல் போராட்டம் நடத்தியபோது சிங்களக் காடையர்கள் அவர்கள் மீது நடாத்திய வன்முறைகளையும் ஐயா நேரில் கண்டார்.

இந்த அனுபவங்கள் அவருக்கு இலங்கையில் தமிழர்கள் தனித்து வாழவேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தியது. இயல்பாகவே நிறையப் புத்தகங்களைப் வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தவருக்கு மகாத்மா காந்தியின் கருத்துக்களில் ஈடுபாடு ஏற்பட்டிருந்தது. கென்யா நாட்டின் மொம்பாசா நகர சபையின் தலைமைக் கட்டிடக் கலை-நகர திட்டமிடல் பணியாளராகப் பணியாற்றிய 3 வருடங்களிலும் தினமும் 4 மணித்தியாலங்கள் அங்கிருந்த 9000 புத்தகங்களை தன்னகத்தே வைத்திருந்த நூல் நிலையத்தில் அறிவுத் தேடலில் மூழ்கியதன் பயனாக இந்தியத் தத்துவங்களையும் காந்தியையும் மிக ஆழமாகப் புரிந்து கொண்டார். காந்தியம் அவரைப் இறுகப் பற்றிக் கொண்டது. "வெற்றிக்கு அடிப்படை நல்லதொரு திட்டம்" என்பதை ஐயா தனது உலகச் சுற்று அனுபவத்தில் உணர்ந்திருந்தார்.

1960 முதல் 1970 வரையான ஐயாவின் உலக நாடுகளின் பணி வாழ்க்கை அனுபவங்களின் பயனாக "எளிமை-அகிம்சை-உண்மை" என்ற காந்தியின் தத்துவ அடிப்படையிலான காந்தியக் கிராமங்களையும் இஸ்ரேல் நாட்டைக் கட்டியெழுப்பக் காரணமாக அமைந்த கூட்டுப் பண்ணைப் பொருளாதாரக் கட்டுமானத்தையும் இணைத்து வட கிழக்குப் பிரதேசங்களுக்கான சுய பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை வகுத்துக் கொண்டார். அதனூடாக யாழ்ப்பாண-வன்னி-திருகோணமலை-மட்டக்களப்பு-மலையக மனிதனை ஒன்று சேர ஒட்டி வைக்க முடிவு செய்தார். இதற்காக வவுனியாவை மத்திய தளமாக தெரிவு செய்தார். அத்துடன் யாழ்ப்பாண மனோபாவங்களை தகர்த்து ஒரு புதிய சிந்தனைத் தலைமுறையை உருவாக்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்திருந்தார். இதுவே தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆளும் தகுதிக்கு இட்டுச் செல்லும் வழிமுறை என்று அவர் நம்பினார்.

'படிப்பு குழந்தைகளுக்குப் பாரமாக இருக்கக் கூடாது" என்பதற்காக குழந்தைகளுக்கான ஒரு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. அதனைக் கற்பிக்கும் காந்தியக் கிராம ஊழியர்களின் பயிற்சிக்கான பயிற்சி நிலையமும் உருவாக்கப்பட்டது. கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மூத்தோரைக் கூட்டிக் கலந்துரையாடி அவர்ளைக் கொண்டு ஒரு கிராமத்திற்கு ஒரு யுவதி என்றவாறு 500 யுவதிகள் தெரிவு செய்யப்பட்டு அனைவருக்கும் 3 மாத கால பயிற்சி வழங்கப்பட்டு 500 கிராமங்களின் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொரும் இன்னொருவரை கிராம ஊழியராக பயிற்றுவிப்பார்கள்.

வெள்ளை மணல் தரையுடைய ஓலைக்குடிசைகள் குழந்தைகளுக்கான பராமரிப்பு நிலையங்களாக அமைக்கப்பட்டன. ஒவ்வொரு ஊரிலும் இருந்த இயற்கையான வளங்கள் கண்டறியப்பட்டு அவைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. உற்பத்திப் பொருட்கள் சந்தைக்குச் சென்றன. வருமானம் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் மேலதிக வருமானம் மறுபடி உற்பத்தி தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. மலிவு விலைக்கடைகள் உருவாக்கப்பட்டன. தன்னிறைவுப் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு புதிய "இயங்குவிசை" மக்களின் கூட்டுழைப்புடன் ஆரம்பமாகியது.

இந்தக் "காந்தியம்" என்ற இயங்குவிசையின் சக்தியையும் அதன் எதிர்கால விளைவுகளையும் புரிந்து கொண்ட சிங்கள-தமிழ் மேலாதிக்க ஆளும் வர்க்க சக்திகள் அதனை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டன.

அவரோடு வாழ்ந்த தலைமுறை அவரை ஏமாற்றி விட்டது. இன்றைய தலைமுறை அவரை அறியாமலேயே வாழ்கிறது. நாளைய தலைமுறையாவது அவருடைய சமூகப் பார்வையையும்-மக்களுக்காக சுகபோகங்களைத் துறந்த அறம் நிறைந்த வாழ்க்கையையும்-மற்றவர்களுக்காக ஆற்றிய தன்னலமற்ற சேவையுயையும் அறிந்து கொள்ளும் வகையில் இன்று நினைவு கூருவதே "டேவிட் ஐயாவுக்கு" மக்கள் நலன் வேண்டி செயற்படுவோரது தலையாய கடமையாகும்.