Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

உயர்கல்வியை தனியார் மயமாக்கலுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணிக்கு அழைப்பு!

இலங்கையில் நவகாலனித்துவம் புலிகளுடனான யுத்தத்தின் முடிவின் பின்னர் அதிதீவிரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. முன்னைய மகிந்த அரசு போல்  இன்றைய நல்லாட்சி அரசும் இந்த திட்டத்தினை முன்னெடுத்து செல்வதில் முனைப்புடன் செயலாற்றுகின்றது. இதன் ஒரு அங்கமாக மாலம்பேயில் SATIM என்னும் தனியார் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பல தனியார் பல்கலைக்கழகங்களை அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளதுடன் பல சலுகைகளையும் வழங்கியுள்ளது.

மிக நீண்ட காலத்திற்கு பல ஆயிரக்கணக்காக ஏக்கர் நிலங்களை குறைந்த குத்தகைக்கு கொடுத்துள்ளதுடன் இதற்க்காக காடுகளை அழிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக பட்டதாரி பாடவிதானங்களின் தரத்தை குறைத்து பூரண தகுதி பெற மேல் பட்டதாரி படிப்புகளை காசிற்கு அறிமுகம் செய்யவும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

எதிர்காலத்தில் ஒட்டு மொத்த கல்வியினை காசுக்கு விற்று பணம் சம்பாதிக்கவே இவை திட்டமிட்டு சிறுகசிறுக முன்தள்ளப்படுகின்றன. நாம் எல்லோரும் பெற்ற இலவச கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து பணம் படைத்தவனுக்கே கல்வி என்ற நிலைமை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம். அனைத்திலும் பணம் புடுங்க விளையும் இந்த நவதாராள மயத்திற்கு சாவு மணி அடித்து, இலவச கல்வி உரிமையினை அனைவருக்கும் நிலை நாட்ட ஒன்றுபட்டு போராட, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை நடக்கவுள்ள பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை தெரிவிக்க அனைவரையும் அழைக்கின்றது.

மாலம்பே SATIM திருட்டு கல்விக்கடையினை தடைசெய்!
துனியார் பல்கலைக்கழகங்களை தடை செய்!!

பல்கலைக்கழக மாணவர் இணைப்பை அதிகரி!!
பல்கலைக்கழகத்தினுள் பாட நெறிகளை பணத்திற்கு விற்பதனை நிறுத்து!!!