Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழில். மக்கள், அரச எதிர்ப்பு போராட்டம்!

இன்று காலை 10 மணிக்கு யாழ் பஸ் நிலையத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், அரசியல் கைதிகளின் உறவினர்களும் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளிற்காக போராடுபவர்களும் சமவுரிமை இயக்கத்துடன் இணைந்து அரசிற்கு எதிரான தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொணடனர்.

சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!  காணாலாக்கப்பட்டவர்களை கண்டு பிடி! பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்! ஏன்ற கோசங்களை முன்வைத்து போராடினர்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய சமவுரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ரவீந்திர முதலிகே, இந்த மக்கள் பல்வேறு வாக்குறுதிகளை நம்பி தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது அனுமதிக்க முடியாதது. சகல இனங்களின் சமவுரிமைக்காக போராடும் நாம், இந்த மக்களிற்கு நீதி கிடைக்கும் வரை எந்த அச்சுறுத்தல்களிற்கும் அடி பணியாது போராடுவோம். இந்த மக்களும் அதற்கு எப்போதும் தயாராகத்தான் இருக்கின்றனர். இந்த நாட்டின் மிகவும் பொறுப்புள்ள ஸ்தானத்தில் இருக்கும் பிரதமர் அண்மையில் பொறுப்பற்றதனமாக காணாமல் போனவர்கள் பெரும்பாலும் மரணித்தவர்களாகவே கருதப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். நாம் இதனை வன்மையாக கண்டிப்பதுடன்; சகல அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்களை பற்றிய தகவல்களை வெளியிடுவதுடன் மற்றும் கொடிய பயங்கரவாத சட்டத்தை உடனடியாக நீக்கும் படி கோருகின்றோம் என தெரிவித்தார்.

ஏதிர்ப்பு போராட்டம் பிற்பகல் 1:00 மணி வரை இடம் பெற்றது. வடக்கு கிழக்கில், பல இடங்களில் இது போன்ற போராட்டங்களை தொடர்ந்து நடத்துவது என்ற பொது உடன்பாட்டுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் உடன்பட்டுக் கொண்டனர்.