Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மாணவர்களின் போராட்ட உணர்வினை மழுங்கடிக்கும் முயற்சியில் யாழ் பல்கலைக்கழக நிர்வாகம்

அண்மைக்காலமாக மாணவர்கள் மத்தியில் மாணவர்களின் உரிமைகளுக்காகவும், சமூகப் பிரச்சனைகளிற்க்காகவும் குரல் கொடுத்து போராடும் ஒரு பண்பு வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. மாணவர்கள் கல்வி தனியார் மயமாதனை கண்டித்தும், தனியார் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பதற்கு எதிராகவும், தமது கல்வி உரிமைகளுக்காகவும் நாடு தளுவிய பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் இந்தப் போராட்டங்களில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளனர். இது தவிர வேலையில்லாத பட்டதாரிகள் ஒன்றிணைந்து தமக்கு வேலை வழங்கக்கோரியும், பட்டதாரிகளுக்கு வேலை வழங்க ஒரு தேசிய கொள்கையினை வகுக்குமாறு கோரியும் போராடி வருகின்றனர்.

மேற்குறித்த போராட்டங்கள் காரணமாக மாணவர்கள் மத்தியில் தமக்காகவும் தமது சமூகத்திற்க்காகவும் போராடும் உணர்வு மேலெழுந்து வருகின்றது. இவை அரசிற்கும் அதன் அடிவருடிகளிற்கும் பாரிய நெருக்கடியினை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இதனை மழுங்கடித்து, மாணவர்களை திசை திருப்ப வேண்டியது; அரசு மற்றும் அரச அடிவருடிகளின் இன்றைய அவசர தேவையாக இருக்கின்றது.

யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியின் மாணவர்கள் மீதான உடை மற்றும் உருவம் சம்பந்தமான அறிவித்தல்; மாணவர்களை அவர்கள் இன்று முன்னெடுத்தும், பங்கு பற்றியும் வருகின்ற போராட்டங்களில் இருந்து திசை திருப்பும் ஒரு நடவடிக்கையாகவே இன்று இலங்கையில் புத்திஜீவிகள், அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தில் கரிசனை கொணடவர்களால் பார்க்கப்படுகின்றது.

பல்கலைக்கழகம் மாணவர்களிற்கு சமூகம் சார்ந்த பல நல்ல வியடங்களை கற்றும் இடமாகவும், சமூக உணர்வு உள்ள மனிதர்களாக அவர்கள் உருவாக வழிகாட்டும் இடமாக அமைய வேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தின் இந்த வகையான கட்டுப்பட்டித்தனமான பழைமைவாத நடவடிக்கைக்கான முயற்சி ஆரோக்கியமாதல்ல. மாணவர்களின் போராட்ட உணர்வுகளை திசை திருப்பி, அவர்களின் போராட்டங்களை முடக்க முனையும் அரசின் நோக்கத்திற்கு துணை போகும் இந்த செயற்பாடு ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதல்ல.

மாணவர் சமூகம் இந்த திசை திருப்பலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில்; தமது போராட்டங்களுடன் சேர்த்து இந்த பழைமைவாத உத்தரவுக்கு எதிராகவும் போராட உறுதி கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் பல்கலைக்கழகத்தின் இந்த அறிவித்தலுக்கு எதிராக அனைத்து மாணவர்களும் இணைந்த மாபெரும் போராட்டம் ஒன்றிக்கான அறிவித்தல் வெளிவரும் என எமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.