Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

முன்னிலை சோசலிசக்கட்சியின் புபுது ஜாகொடவை கைது செய்ய குடிபோதையில் சென்ற பொலிசார்

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜாகொடவை கைது செய்வதற்கு குடிபோதையில் பொலிஸ்குழுவொன்று இன்று முயற்சித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

முன்னிலை சோஷலிசக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சுஜித் கரவிடகே என்பவரது வீடு ராஜகிரிய, கலபளுவாவ பிரதேசத்தில் அமைந்துள்ளது. இன்று மாலை அந்த வீட்டுக்கு மருதானை பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் குழுவொன்று குடிபோதையில் சென்றுள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தர்களான புபுது ஜாகொட மற்றும் சுஜித் கரவிடகே உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்வதற்காக தாங்கள் வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கையில் பெயர்ப்பட்டியல் ஒன்றையும் வைத்திருந்துள்ளனர். இதன்போது கைது செய்வதற்கான நீதிமன்ற பிடியாணை அல்லது அதற்கு ஏதுவான பொலிஸ் முறைப்பாடு ஏதேனும் இருந்தால் காட்டுமாறு புபுது ஜாகொட பொலிசாருடன் வாக்குவாதப்பட்டுள்ளார். அவ்வாறான ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதை ஏற்றுக் கொண்ட பொலிசார், கொழும்பு, பொரளையில் அமைந்திருக்கும் குடிவரவுத்திணைக்கள கண்ணாடிகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டு அவர்கள் மீது பதியப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் கைது செய்வதற்கான ஆவணங்கள் ஏதுமில்லாத நிலையில் பொலிசார் வெறும் கையுடன் திரும்பிச் செல்ல நேரிட்டுள்ளது.

இதன்போது புபுது ஜாகொட உள்ளிட்டோரை நாளை காலை மருதானை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்கு வருகை தருமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.

தம்மைக் கைது செய்ய வந்திருந்த 11 பேரில் ஏழு பேர் பொலிஸ் சீருடையிலும் ஏனைய நான்கு பேர் சிவில் உடையில் குடிபோதையிலும் இருந்ததாக புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.