Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ்ப்பாணத்தில் கலாசார மையம் குறித்து… ஜே.வி.பி.

மீள்குடியேற்றமானது, சாதியக் கிராமங்களாக புத்துயிர்ப்பு பெற்றுவரும் பொதுப் பின்னணியில், சாதிக்கலாச்சாரம் கோலோச்சுகின்றது. இந்த யாழ் (தமிழ் மக்கள்) கலாச்சாரத்தை பாதுகாக்க, இந்தியக் கலாச்சாரத்தை இதற்கு முரணாக ஜே.வி.பி. கற்பிக்கின்றது. அதாவது ஒடுக்கும் யாழ் (தமிழ் மக்களின்) கலாச்சாரத்தை, இந்தியாவின் கலாச்சாரத்துக்கு எதிரானதாக முன்னிறுத்துகின்ற ஒரு போலி அரசியலை, ஜே.வி.பி. முன்நகர்த்தத் தொடங்கி இருக்கின்றது.

ஜே.வி.பி. வன்னியில் நடந்த கூட்டம் ஒன்றில் "இந்திய கலாச்சார விழுமியங்களை யாழ். மக்கள் மீது திணிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் கலாச்சார மையம் அமைக்கப்படுகின்றதே தவிர, இந்த நாட்டின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கோ அல்லது தமிழ் மக்களின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கோ அல்லவென" கூறி இருக்கின்றது. 

தமிழ் மக்களின் (யாழ்) கலாச்சாரத்தை இந்தியாவுக்கு எதிரான ஒன்றாக கட்டமைத்து, காட்ட முற்பட்டு இருக்கின்றது. இந்தியக் கலாச்சார ஆக்கிரமிப்பு மற்றும் திணிப்புக்கு எதிரான போராட்டம் என்பது, ஒடுக்கும் யாழ் கலாச்சாரத்துக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப்பிணைந்தது. அதாவது ஒடுக்கப்பட்டவர்களின் கலை கலாச்சாரத்தை உருவாக்கவும் பாதுகாக்கவும், ஒடுக்கும் யாழ் (தமிழ் மக்களின்) கலாச்சாரத்துக்கு எதிரான  போராட்டத்துடன் கூடியது. ஜே.வி.பி. கூறுவது போல் ஓடுக்கும் யாழ் (தமிழ்மக்கள்) கலாச்சாரம், இந்திய கலாசாரத்துக்கு எதிரானதல்ல.     

தமிழ் மக்களின் (யாழ்) கலாச்சாரம் என்பது, சாதிய இந்துத்துவமாகும். இது இந்திய கலாச்சாரத்துடன் முரண்பட்டதல்ல. இந்துத்துவ சாதித்துவ அடிப்படையிலானது. இப்படி இருக்க அதை முரண்பாடாக காட்டுவது என்பது, பாதுகாக்க முனைவது தான்.

யாழ் (தமிழ்மக்கள்) கலாச்சாரம் என்று இருக்கக் கூடிய நிலப்பிரபுத்துவ எச்சசொச்சங்களுக்கு வீரியத்தை வழங்குவதன் மூலம், சமூகத்தை மேலும் மலடாக்குவதே இந்தியாவின் செயற்பாடாக இருக்கின்றது. இந்திய கலாச்சாரத்தை எதிர்த்து முறியடிப்பது என்பது, ஒடுக்கும் யாழ் (தமிழ்மக்களின்) கலாச்சாரத்தை எதிர்த்துப் போராடுவதுடன் ஒருங்கிணைந்தது.