Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!

யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்டன. இன்றுவரை, யுத்தத்திற்கு பலியாகிய மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. காணாமல் போனவர்கள் சம்பந்தமான பிரச்சினை, இடம் பெயர்ந்தவர்களின் பிரச்சினை, சொத்துக்களை இழந்த மக்களின் பிரச்சினை போன்றவற்றை தவிர அடக்குமுறை சட்டங்கள் மற்றும் அடக்குமுறை இயந்திரங்கள் தொடர்ந்தும் செயற்படுவதால் ஏற்பட்ட பிரச்சினைகள் அப்படியே உள்ளன. அவற்றில் அரசியல் கைதிகளை பற்றிய பிரச்சினை முக்கியமான ஒன்று. அவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரத நடவடிக்கையிலும் சமீபத்தில் ஈடுபட்டனர். அதே நேரம், அரசியல் கட்சிகள், வேறு அமைப்புகள், வழக்கறிஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு  கோரி வருகின்றனர். சம உரிமை இயக்கம் கடந்த சில காலங்களாக இது சம்பந்தமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யாது, சிலருக்கு மாத்திரம் பிணை வழங்க தாம் தீர்மானித்திருப்பதாக அரசாங்கம் கடந்த வாரம் கூறியது.

அவர்களை விடுதலை செய்ய வேண்டியது ஏன்?

நாம் முப்பது வருட யுத்தத்தினால் துன்பப்பட்ட சமூகம். யுத்தம் எமது சமூகத்திற்கு பாரிய அழிவை கொடுத்துள்ளது. அது, மனித உயிர்கள் மற்றும் உடமைகள் இழப்பு மட்டுமல்ல, யுத்தத்திற்குள் சமூகம் என்ற வகையில் மனச்சாட்சியையும் பறித்தெடுத்துள்ளது. யுத்தத்திற்குப் பின்பு சமூக உணர்வில் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் நிலவிய சந்தேகம் மற்றும் அவநம்பிக்கை இன்னமும் தொடர்கின்றன. இப்போது நாம், மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான வழிமுறை பற்றியே கவனம் செலுத்த வேண்டும். அதற்காக இந்தத் காயத்தை ஆற்றிக் கொள்ள வேண்டும். எமக்கிடையிலான இடைவெளியை நீக்க வேண்டும். அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சினையையும் அந்த கோணத்திலேயே பார்க்க வேண்டும். மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தடுக்க வேண்டுமெனில் யுத்தம் ஏற்பட்டதற்கான காரணங்கள் மற்றும் அதற்கு பொறுப்பானவர்களை சரியாக இனம் காண வேண்டியுள்ளது. தற்போது அண்ணளவாக 300 அரசியல் கைதிகள் சிறைக்கூடங்களில் உள்ளனர். இவர்கள்தான் யுத்தத்திற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என இனவாதிகளும் சொல்கின்றனர். அரசாங்கமும் சொல்கின்றது. எனவே அவர்களை தண்டிக்க வேண்டும் என்ற ஒரு கருத்தை உருவாக்குகிறார்கள்.

யுத்தம் என்பது இந்த முன்னூறு பேரும் பொறுப்பு கூற வேண்டிய ஒன்றா? அல்லது விஷேடமாக, பெரும்பாலான அரசியல் தலைவர்களும், பொதுவில் நாம் அனைவரும் பொறுப்பு கூற வேண்டிய பல சிக்கலான காரணிகள்தான் யுத்தத்திற்கு காரணமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதேபோன்று நாம் மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்தப்போவது இப்படித்தானா? என்பதையும் சிந்திக்க வேண்டும். யுத்தத்தின் பல்வேறு நடவடிக்கைகளுக்காக இவர்களுக்கு கட்டளையிட்ட எல்.ரி.ரி.ஈ. தலைவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். அவர்கள் ஆளும் கட்சியின் அரசியலுடன் இணையும்; பட்சத்தில் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். கருணா, பிள்ளையான் போன்றவர்கள் அரசாங்கத்தின் பங்காளிகளானார்கள். கே.பீ. மீது வழக்கு தொடுக்க குற்றச்சாட்டுகள் இல்;லையென பிரதமர் சொல்கின்றார். குற்றம் சுமத்தப்பட்டு வருடக்கணக்கில் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தலைவர்களின் கட்டளைப்படி செயற்பட்ட எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்த நண்பர்களாகும். கட்டளையிட்ட தலைவர்களை தவிர்த்து சிறியவர்கள் மீது அனைத்து குப்பைகளையும் கொட்டுவதுதான் எல்.ரி.ரி.ஈ.க்கு மாத்திரமல்ல இராணுவம் சார்ந்தும் செயற்படுத்தவிருக்கும் கொள்கையும் கூட. அது சரிதானா? அதற்கு இடமளிக்க வேண்டுமா?

அரசாங்கம் வழங்கிய தீர்வு போதுமானதாக இல்லையா?

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் இதுவரை எந்த குற்றத்திற்கும் ஆளாக்கப்படாதவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் கிடையாது. வழக்குகள் கிடையாது. 10 -15 வருடங்களாக சிலர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். சிலர் 20 வருடங்களாக சிறையில் உள்ளனர். சிலருக்கு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை விசாரிக்கப்படுவதில்லை. சிலரது வழக்குகள் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை விசாரிக்கப்படுகின்றன. அந்த வழக்குகளும் கூட மாதக்கணக்கில் பின்போடப்படுகின்றன. சிலபேர் மீது சிறு குற்றங்களே சுமத்தப்பட்டுள்ளன. ஆனாலும், பிணை வழங்குவதில்லை. பயங்கரவாத தடுப்புச் சட்டம் போன்ற அடக்குமுறை சட்டங்களை கொண்டே இந்த அநியாயங்கள் நடக்கின்றன.

குற்றச்சாட்டுகள் இல்லாதவர்களை விடுதலை செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. அது கூட புதிதாகச் சொல்லும் அரசியல் கோஷமல்ல. குற்றமிழைக்காதவர்களை வருடக்கணக்கில் சிறையில் அடைத்து வைத்திருப்பது வெட்கக்கேடான விடயம். குற்றமிழைத்தவர்கள் மீது வழக்கு தொடுத்து முடியுமாயின் பிணை வழங்குவார்களாம். பிணை வழங்கக் கூடிய குற்றங்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்குவது ஜனநாயகத்தின் அடிப்படை. அதை பெற்றுக் கொள்ள உண்ணவிரதமிருக்கவும், ஆர்ப்பாட்டம் செய்யவும் நேரிடடும் பட்சத்தில்; இலங்கை ஜனநாயகம் எப்படிப்பட்டது என்பதை அறியலாம். ஜனநாயகத்தை பற்றி மந்திரம் போல் ஜபித்துக் கொண்டு ஆட்சிக்கு வந்த இன்றைய அரசாங்கம் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதம் எப்படிப்பட்டதெனத் தெரிகிறது.

குற்றமில்லாதவர்களை விடுதலை செய்து, குற்றமுள்ளவர்கள் மீது வழக்கு தொடுத்தல் என்ற நீர்த்துப்போன கோஷத்திற்குள் அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை மறுத்து நிற்கின்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்ற போலி எதிர்க்கட்சி;. அதற்கான நெருக்குதலை கொடுத்தவர்கள் எதிர்கட்சியாக முயற்சி செய்த இனவாதிகள். எனவே, அரசாங்கம் மற்றும் இந்த போலி எதிர்க்கட்சி ஆகிய இரண்டையும் ஒருசேர தோற்கடிக்காமல் மீண்டும் ஒற்றுமைபடுத்தவோ, யுத்த ஆபத்தை தடுக்கவோ முடியாதென்பது தெளிவு. ஆகவே, எமது பரம்பரையை துன்பத்தில் ஆழ்த்திய ஒரு இனவாத யுத்தம் எதிர்கால சந்ததியின் மீது சுமத்தப்படாதிருக்க வேண்டுமாயின் அதற்காக மக்கள் முன்வர வேண்டும். அரசாங்கம் ஜனநாயகத்தை தட்டில் வைத்து  தருமென, எதிர்க்கட்சி போராடி அதனை பெற்றுத் தருமென எதிர்பார்க்காது ஜனநாயக உரிமைகளை எமது கரங்களால் நாம் வெல்ல வேண்டும். அதற்காக ஒன்றிணைவோம், நிறுவனமாவோம்.

அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!

அனைத்து அடக்குமுறை சட்டங்களையும் நீக்கு!

சம உரிமை இயக்கம்
2015 நவம்பர் 02