Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

கைது செய்யப்பட்டும், சரணடைந்தும், கடத்தப்பட்டும் காணாமல் போனவர்கள் எங்கே? எங்கே? - யாழில் சமவுரிமை இயக்கம்

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரச படைகள், புலனாய்வு பிரிவினர், துணை ராணுவக்குழுக்களால்  கைது செய்யப்பட்டும்- கடத்தப்பட்டும் காணமல் போனோர் தொடர்பான தகல்களை வெளிப்படுத்த கோரியும், பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் யாழ்.பிரதான பேரூந்து நிலையம் முன்பாக சமவுரிமை இயக்கத்தினரால் ஆர்ப்பாட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. >

இந்த போராட்டத்தில் கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு மற்றும் தென்னிலங்கையில் கைது செய்யப்பட்டும், சரணடைந்தும், கடத்தப்பட்டும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் உறவினர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டு நீதி கோரி முழக்கமிட்டனர்.

தெற்கில் இருந்து வந்த மக்கள் போராட்ட இயக்கத்தை சேர்ந்த லலித்,  குகனுடன் இணைந்து வன்னி யுத்தத்தில் சரணடைந்து காணாமல் போனவர்களை தேடிச் சென்றதற்காக அரசியற் கைதிகளின் விடுதலைக்காக முன் நின்று போராடியதற்காக, மனித உரிமைகள் தினத்தில் காணாமல் போனவர்களின் குடும்பத்தினரையும் தெற்கில் உள்ள முற்போக்காளர்கள், இடதுசாரிகளை இணைத்து யாழில் போராட்டம் ஒன்றை ஒழுங்கமைத்து கொண்டிருந்த வேளையில் 09-12-2011 அன்று காலையாழ்பாணத்தில் வைத்து மகிந்த ராஜபக்ச அரசின் கூலிப்படைகளால்  கடத்தப்பட்டார்கள்.

இன்றைய இந்த போராட்டத்தில் லலித்தின் தந்தை குகனின் மனைவி மகள் உட்பட அவர்களது உறவினர்களும் கலந்து கொண்டு நீதி கோரி குரல் எழுப்பியிருந்தனர்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய சமவுரிமை இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளர் தருமலிங்கம் கிருபாகரன் அவர்கள், "கடந்த காலங்களில் வடக்கு கிழக்கிலும், தெற்கிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இராணுவத்தினராலும், புலனாய்வு பிரிவினராலும் கடத்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கு என்ன நடந்தது? எங்கே உள்ளார்கள்? என்பது தொடர்பில் யாருக்கும் தெரியாத நிலையே உள்ளது. கடத்தப்பட்டவர்களின் நிலை தொடர்பில் ஆளும் வர்க்கத்திற்கு தெரிந்துள்ள போதிலும் 

அவற்றை எந்த அரசும் வெளிப்படுத்தாத நிலையே உள்ளன. இதனையே நல்லாட்சி என கூறிக்கொண்டு ஆட்சியுள்ள தற்போதைய அரசும் செய்து வருகின்றது. வடக்கு கிழக்கிலும், தெற்கிலும் பல்லாயிரக்கணக்கான மனிதவுரிமை செயற்ப்பாட்டளர்களும், பொதுமகன்களும் கடத்தப்பட்டு இருந்தார்கள். இவர்கள் அனைவருமே பாதிக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்படும் மக்களின் குரல்களை வெளிக்கொணர்ந்தவர்களாகவே இருந்தார்கள்.

 இந்த நிலையே அவர்கள் கடத்தப்படுவதற்கு காரணமாக இருந்தது. கடந்த 2011 ஆண்டு சர்வதேச மனிதவுரிமை தினத்திற்கு முன்னதாக மக்கள் போராட்ட இயக்கத்தை சேர்ந்த லலித், குகன் ஆகியோரும் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கு என்ன நடந்தது? எங்கே உள்ளனர்? என்பது இதுவரை தெரியாத நிலையே உள்ளது. கடத்தலாளிகளும் கைது செய்யப்படவில்லை. இவ்வாறான பல சம்பவங்களுக்கு நீதி கோரியே இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது" என தெரிவித்திருந்தார்.

எமது தோழர்கள் லலித் - குகன் கடத்தப்பட்டு காணாமல் போய் ஐந்து வருடங்கள்...!