Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

போராடும் மக்களுக்கு சம உரிமை இயக்கம் பூரண ஆதரவு!

2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்து விட்ட நிலையில், யுத்தத்தை நடாத்திய மகிந்த அரசு போய்  தற்போது ரணில் - மைத்திரி அரசு வந்து இரு வருடங்களிற்கு மேலாகி விட்டது. ஆனாலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.

இன்று ஆட்சியில் வீற்றிருக்கும் ரணில் - மைத்திரி அரசு ஜனநாயகத்தை வழங்குவதாகவும், யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நீதி மற்றும் நிவாரணம் வழங்குவதாகவும் வாக்குறுதி கொடுத்தே வடக்கு கிழக்கு மக்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்தது. ஆனால் வடக்கு கிழக்கில் யுத்த சூழ்நிலைக்கு நிகராக தொடர்ந்தும் முப்படைகளும் குவித்து வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

இக்காணிகள் தேசிய பாதுகாப்புக்கு தேவை என்று கூறப்பட்ட போதும், பல்தேசிய கம்பனிகளுக்கு பிரித்து கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேற்கூறப்பட்ட மக்களின் காணிகளில் பாரியளவு பண்ணைகளை அமைக்கும் வேலைகளும் மற்றும் விவசாயமும் மேற்கொள்ளப்படுகின்றது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்த முடியாமல் வறுமையில் வாழ்கின்றார்கள்.

இந்திய உதவியினால் வீடு வழங்கல் என்று கூறப்பட்டாலும் இன்னும் பல மக்களுக்கு வீடு கட்டுவதற்கு காணி அற்ற நிலையில் வாடகை வீடுகளிலேயே வசித்து வருகிறார்கள்.

யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அழிவுகளுக்கும் அழிப்புகளுக்கும் இன்னமும் எந்தவிதமான நிவாரணங்களும் வழங்கப்படவுமில்லை, பொறுப்புக்களும் கூறப்படவுமில்லை. இதன் விளைவாக யுத்த முடிவில் அரச படைகளிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி இன்று வரை அரசிடமிருந்து எந்த விதமான பொறுப்புக் கூறலும் இல்லை.

மேலும் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் இன்றும் சிறைகளில் விசாரணைகள், வழக்குகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் சிறையில் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். அரசு கடந்த காலங்களில் இது தொடர்பாக பல வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதும் அவற்றை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அத்துடன் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசு முனைப்பு காட்டியதாகவும் தெரியவில்லை.

இந்த நிலையில் மக்கள் தன்னெழுச்சியாகவும், சமூக அமைப்புக்களுடனும் சேர்ந்து தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் சமவுரிமை இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை நாட்டின் சகல பகுதிகளிலும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல்வேறுவிதமான வடிவங்களில் பல போராட்டங்களை முன்னெடுத்து கொண்டிருப்பது.

இந்த போராட்டங்களுக்கு அடித்தளம் இட்ட ல்லித், குகன் ஆகிய இருவரையும் கடந்த அரசு கடத்தி சென்று காணாமல் ஆக்கியது.

தற்போது இந்த பிரச்சனைகளுக்கு கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியான எதிர்ப்பு சத்தியாக்கிரக போராட்டங்களை பாதிப்புகளுக்குள்ளான மக்கள்  மேற்கொண்டு வருகின்றனர்.

இம்மக்களின் நியாயமான போராட்டங்கள் வடக்கு கிழக்கிற்குள் மட்டும் மட்டுப்படுத்த பட்டதாக இருக்க முடியாது. இவர்களுக்கு ஆதரவான குரல் தெற்கிலும் ஒலிக்க வேண்டும். இந்த வகையில் சமவுரிமை இயக்கமானது சகோதர மொழி பேசும் மக்களையும் அணிதிரட்டி அவர்களின் ஆதரவுடன்; மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒரு வார கால சத்தியாக்கிரக போராட்டத்தினை கொழும்பில் நடாத்தவுள்ளது.

வடக்கு கிழக்கில் பறிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு வழங்கு!

சகல காணாமலாக்கல்களையும் உடன் வெளிப்படுத்து!

சகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!

சமவுரிமை இயக்கம்

13-03-2017