Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

கிளிநொச்சி மக்கள் போராட்டங்களில் சமவுரிமை இயக்கம் பங்கேற்பு

இன்று (14-03-2017) கிளிநொச்சியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்களில், தெற்கில் இருந்து வருகை தந்திருந்த சமவுரிமை இயக்கம் மற்றும் சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்புகளை சேர்ந்த அறுபதுக்கும் மேலானவர்கள் கலந்து கொண்டு போராட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

அரச படையினர் மற்றும் சட்டவிரோத ஆயுதக்குழுக்களாலும் கடத்தப்பட்டும், சரணடைந்தும்  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று பங்கு பற்றியிருந்தன.

போரின் போதும் அதற்குப் பின்னரும் கைது செய்யப்பட்டும், சரணடைந்தும், கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் கிளிநொச்சி நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை எந்த தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில், தொடரும் இந்த போராட்டத்தக்கு ஆதரவு தெரிவித்து, இன்றைய தினம் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, சுதந்திரத்திற்கான மகளிர் அமைப்பு மற்றும் சமவுரிமை இயக்கம் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளன.

வடக்கு, கிழக்கில் தொடரும் இவ்வாறான போராட்டங்கள் நியாயமானவை என்று சுதந்திர மகளிர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஹேமாமாலி அபேரத்ன தெரிவித்தார்.

தமிழ் மக்களது வாக்குகளால் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது அதற்கு எதிராக செயற்படுவதாக குற்றம் சுமத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், மக்களது பிரச்சனையை அரசாங்கம் மூடிமறைக்க முற்படுவதாக சாடியிருந்தார். 

இதேவேளை காணாமலாக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் கிளிநொச்சி உட்பட பல இடங்களில் தமது உறவுகளைக் கண்டுபிடித்து தருமாறும், அவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தருமாறும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்ற போதும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இதுவரை இவர்களது கோரிக்கைகளைத் தீர்த்து வைக்க எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள காணாமலாக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் காணி அனுமதி, வீட்டுத்திட்டம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 4ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு இன்று 11வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த போராட்டத்திற்கும் சமவுரிமை இயக்கம் மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் அமைப்பினர் சென்று தமது ஆதரவினை வழங்கி இருந்தனர். இந்த மக்களின் போராட்டங்கள் நியாயமானவை அவற்றை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், என சமவுரிமை இயக்கம் மற்றும் சுதந்திரத்திற்கான  மகளிர் அமைப்பினை சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.