Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சமவுரிமை இயக்கத்தின் அடையாள எதிர்ப்பு சத்தியாககிரக போராட்ட இறுதி நாள்

கடந்த சில நாட்களாக வடக்கு கிழக்கில் மக்களால் பரவலாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போராட்டங்களிற்கு ஆதரவாக சமவுரிமை இயக்கத்தினரால் கடந்த 17ம் திகதி ஆரம்பித்த ஒரு வாரகால அடையாள எதிர்ப்பு சத்தியாககிரக போராட்டம் இன்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இன்றைய தினம் சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை ஒத்த ஆட்சியையே மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக விசனப்பட்டதுடன்; ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இன்றைய ஆட்சியாளர்கள் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

காணமலாக்ப்பட்டவர்களின் குடும்பங்களும், ரசியல் கைதிகளின் குடும்பங்களும், தங்கள் வாழ்விடத்தை இழந்தவர்களும் இன்று தன்னியல்பான பல போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். கடந்த யுத்தத்தின் அவலங்களை சுமந்து நிற்கும் ஓரு பகுதி மக்கள் இவர்கள். இந்த மக்கள், தமிழ் தேசியம் பேசிய தலைவர்களை நம்பி வாக்களித்த போதும், அவர்கள் இவர்களின் பிரச்சனையை இட்டு அக்கறைப்படுவதில்லை.

இந்த போராட்டத்தைக் கண்டுகொள்ளாது அலட்சியப்படுத்தும் போக்குடன் அரசு, தமிழ் தலைவர்களுடன் பெரும்பான்மையான தமிழ் மக்களும் இணைந்து கொண்டுள்ளனர். மறுபக்கம் புலம்பெயர் தமிழ் தேசியம் ஐ.நாவை காட்டி, இந்த மக்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்துகின்றன. இப்படி தனிமைப்பட்டுப் போன அவலமான சூழ்நிலையில், தங்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் அங்குமிங்குமாக இந்த மக்கள் போராடுகின்றனர்.

இந்தப் போராட்டங்களை அரசு இயந்திரம் இயங்கும் கொழும்புக்கு நகர்த்தி, ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற நெருக்கடியை கொடுக்கும் நோக்கிலும். சிங்கள மக்களிற்கு,  வடக்கு கிழக்கு மக்களின் அவலங்களை விளக்கி அவர்களை இந்த போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பும் நோக்கத்திலுமே, இந்த ஒரு வாரகால எதிர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஒரு வாரகால போராட்டத்தில் தென்பகுதியை சேர்ந்த கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்பினர், மாணவர் அமைப்புகள், மனித உரிமை அமைப்புக்கள், சிவில் சமூகத்தினர்கள் கலந்து கொண்டு வடக்கு-கிழக்கு மக்களின் நியாய பூர்வமான கோரிக்கைகளான; "அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!", "சகல காணாமலாக்கல்களையும் உடன் வெளிப்படுத்து!", "நில அபகரிப்பை நிறுத்தி மக்களின் காணியிலிருந்து படையினரை வெளியேற்று!", "பயங்கரவாத தடுப்பு சட்டம் உட்பட சகல அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்து செய்!" ஆகியவற்றிற்கு தமது ஆதரவினை தெரிவித்துள்ளதன் மூலம் இப்போராட்டம் தனது குறிக்கோளில் வெற்றி அடைந்துள்ளது. இது ஆரம்பமே. இன்னமும் போக வேண்டியது நெடுந்தூரம். இந்த நெடும் போராட்டத்திற்கு சமவுரிமை இயக்கம் அர்ப்பணிப்புடன் தயாராக உள்ளது.