Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

முல்லைதீவு கேப்பாபுலவில் போராடும் மக்களுடன் சேர்ந்து சமவுரிமை இயக்கம்

முல்லைதீவு கேப்பாபுலவில் போராடும் மக்களுடன் சேர்ந்து இயங்கிவரும் சமவுரிமை இயக்கத்தின், மட்டக்களப்பு, கேகாலை, அனுராதபுரம், கம்பகா, நீர்கொழும்பு போன்ற பிரதேசத்தின் தோழர்கள் மற்றும் போராடும் மக்களில் ஒருபகுதியினர்- அரச படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிக்குள் நுழைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

விபரம் வருமாறு:

பல மாதங்களாக கேப்பாபுலவு மக்கள் தமது வாழ்விடங்களையும், நிலத்தையும் விடுவிக்கக் கோரி சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில், பலர் "பெரும்" ஆதரவை  வழங்கினர். ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைக்கான ஆணைக்குழு கூட்டம் ஜெனிவாவில் நடந்தபோது, சர்வதேச கவனத்தை திருப்ப மைத்ரி அரசினால் சில பரப்புக்காணிகள் விடுவிக்கப்பட்டது. ஆனாலும் மக்கள் தம் காணிகள் முழுமையாக விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்னிறுத்திப் போராடி வருகின்றனர். காலப்போக்கில் அப்போராட்டம் மீடியா உட்பட்ட அரசியல்வாதிகள், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், NGO- உணர்வாளர்கள் எவராலும் கண்டும் காணாமல் விடப்பட்டது. 

வற்றாப்பளை அம்மன் கோவிலின் திருவிழாவை முன்னிட்டு, அரச படைகளினால் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள, இன்று பரந்தன் பிரதான பாதையூடாக கோவிலுக்குப் போகும் பாதை தற்காலிகமாக திறந்து விடப்பட்டுள்ளது. போராடும் மக்களது சொத்துக்கள் இன்று திறந்து விடப்பட்டுள்ள பிரதேசத்திலேயே உள்ளது. போராடும் மக்களும் சமவுரிமை இயக்கப்பிரதிநிதிகளும் அதிகாலையிலேயே பாதை திறக்கும் தருணத்தை கவனத்திற் கொண்டு, அப்பிரதேசத்தில் நுழைந்தனர். அப்போது, இராணுவ புலனாய்வாளர்களினால் தடுக்க முடியாத நிலையில், போலீஸ் அழைக்கப்பட்டு, தோழர்களும் மக்களும் அபகரிக்கப்பட்ட பூமியில் நுழையாவண்ணம் தடுக்க முயற்சிக்கப்பட்டது. ஆனாலும், மக்கள் எதிர்ப்பு காரணமாக முயற்சி கைவிடப்பட்டது. தற்போது மக்களும் தோழர்களும், அப்பிரதேசத்தினுள்ளே நிற்கிறார்கள். அத்துடன் ஒரு அடையாள போராட்டத்தையும் நடத்துகின்றனர்.

 படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது: