Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் காணிகளை மீண்டும் பெற்றுக்கொடு!

தமது காணிகளை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்டு முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்கள் தாம் குடியிருந்த காலத்தில் தம்மால் கட்டப்பட்ட முருகன் கோவில் முன்றலில் சத்தியாக்கிரக போராட்டத்தை தொடங்கிய பின்பு அவர்களால் வெளியேற முடியாதவாறு பாதையை மூடிவிட அரசாங்க பாதுகாப்புப் பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதனை வன்மையாகக் கண்டிக்கும் சம உரிமை இயக்கம் அவர்களின் காணிகளை மீளவும் அவர்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்துகின்றது.

 

யுதத்தத்தின் இறுதிக் கட்டத்தில் செல் குண்டுத் தாக்குதல்கள் உக்கிரமடைந்த காரணத்தினால் முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் கிராமங்களிலிருந்து வெளியேற நேர்ந்தது. அவ்வாறு கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள் பல வருடங்களாக முகாம்களில் வாழ்ந்து வந்தனர். வடக்கு மக்களுக்கு மீளவும் காணிகளை ஒப்படைக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் கேப்பாபுலவு கிராம மக்களுக்கு சொந்தமான காணிகளில் பாரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமையால் அவர்களது காணிநிலம் மீளக் கிடைக்கவில்லை. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பாதை மூடப்பட்டு மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு சொந்தமான காணிகளை மீள ஒப்படைக்காமல் அதற்குப் பதிலாக கிராமத்திற்கு அருகாமையில் 10 பர்சஸ் வீதம் சிறிய காணித் துண்டுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

10 பர்சஸ் வீதம் சிறிய காணித் துண்டுகளை பெற்றுக் கொடுப்பதனால் அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்க மாட்டாது. 132 குடும்பங்களைக் கொண்ட அவர்களது பொருளாதார சமூக வாழ்க்கையானது பாடசாலை, இரு கோவில்கள், ஒரு மசூதி, ஒரு சனசமூக நிலையம், விளையாட்டு மைதானம், கூட்டுறவுக் கடை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே திகழ்ந்தது. அவர்களது விவசாய நடவடிக்கைகளும், மீன்பிடி நடவடிக்கைகளும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளும் அவற்றோடு பிணைந்திருந்தன.

அவர்களது காணிகளை பறித்துக் கட்டப்பட்ட இராணுவ முகாம்களின் முன்பாக 103 நாட்கள் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் இறங்கிய அவர்கள் தமது சொந்த காணிநிலங்களை மீண்டும் பெற்றுத்தருமாறு கேட்கின்றனர். அது நீதியானதும் நியாயபூர்வமானதுமான கோரிக்கையாக இருப்பதுடன் அதனை நிறைவேற்றுவது பொறுப்புவாய்ந்த அதிகாரிகளின் கடமையாகும். என்றாலும், அதிகாரிகள் இது விடயத்தில் எந்தப் பதிலையும் கூறவில்லை.

இதற்கிடையே வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடக்கும் வருடாந்த திருவிழாவிற்காக புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவு பாதை திறக்கப்பட்டு கோவிலுக்குச் செல்ல இடமளிக்கப்பட்டுள்ளது. தமது கோரிக்கைகளை முன்வைப்பதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்ட கேப்பாபுலவு மக்கள் முருகன் கோவில் வளவிற்குள் தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தை தொடங்கினர். இந்த சத்தியாக்கிரக போராட்டத்தின் செய்தி பொதுமக்களினதும் ஊடகங்களினதும் கவனத்தை ஈர்த்தமையால், அதிகாரிகளால் பாதை மூடப்பட்டு அந்த மக்கள் அங்கிருந்து வெளியேறாதவாறு இடையூறு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் முயற்சிப்பது கோவில் சுற்றாடலிலிருந்து மக்களை விரட்டுவதற்கேயன்றி அந்த மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கல்ல.

முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்களின் நியாயபூர்வமான கோரிக்கையை நிறைவேற்றுமாறு அதிகாரிகளை வற்புறுத்தும் நாம் இந்த நியாயமான கோரிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு முற்போக்கு மக்கள் சக்திகளிடம் வேண்டிக் கொள்கின்றோம்.

ரவீந்திர முதலிகே

ஒருங்கிணைப்பாளர்

சம உரிமை இயக்கம்

2017.06.11