Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

சுன்னாகம் நீர் மாசடைந்த பிரச்சினையில் மக்களின் அச்சத்திற்குத் தீர்வு வேண்டும்

கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணத்தின் மையப் பகுதியான சுண்ணாகத்திலும், அதைச் சூழ உள்ள நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்பட்ட பெரும் வாழ்வாதார நெருக்கடியாக நிலத்தடி நீரில் கலக்கவைக்கப்பட்ட கழிவு எண்ணெய் தொடர்பான பிரச்சினை விளங்குகின்றது.

இதுவரை அதன் தீர்வுக்கான எவ்வித காத்திரமான முன்னெடுப்பும் சம்பந்தப்பட்ட தரப்புக்களால் மேற்கொள்ளப்படாமல் காலம் தாள்த்தப்பட்டு வருகின்றமையை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு வெகுவாகக் கண்டிக்கின்றது.

அதேவேளை, இப்பிரச்சினையால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அப் பிரதேச சபைகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற குடி நீர் விநியோகம் தொடர்பான பல்வேறு குழப்பகரமான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது, நன்னீர் மாசடைவால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் பீதியைத் தோற்றுவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிக்கைகள் எதுவும் எழுத்து மூலம் வெளியிடப்படாமை மக்களின் அச்சம் அதிகரிப்பதற்கான தூண்டியாக அமைவது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இவ்விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்படுகின்ற தொடர்ச்சியான நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் எவையுமே ஊடகங்கள் மூலமாகவோ பிரசுரங்கள் மூலமாகவோ மக்களுக்கு வெளிப்படுத்தப்படாமை மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், இந் நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு ஒயிலின் தீமைகள், பாதக அம்சங்கள் தொடர்பான எவ்வித விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் பாதிக்கப்பட்ட இடங்களில் முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை. மக்கள் சிலசமயங்களில் மாசடைந்த நீரை அருந்துவதுடன், குளிக்கவும், விவசாயத் தேவைகளுக்காகவும் உபயோகித்து வருகின்றனர். இதனால் இதன் தாக்கம் சந்ததி சந்ததியாகத் தொடரக்கூடிய அபாய நிலை தோன்றியுள்ளது.

ஜனாதிபதியாலும், மத்திய அரசாங்கத்தாலும் காலத்திற்குக் காலம் இது தொர்பான அறிக்கைகள் மாத்திரமே தேர்தலை இலக்காகக் கொண்டு வெளியிடப்படுவதுடன், மாகாண அரசாலோ, முதலமைச்சர் உட்பட்ட ஏனைய அமைச்சர்களலோ, ஆளுனராலோ துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை மிகவும் விசனத்திற்குரியதொன்றாகும்.

எனவே, குடிநீர் விநியோகம் தொடர்பான தெளிவுபடுத்தல் மேற்கொள்ளப்படுவதுடன், ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான வெளிப்படைத் தன்மை பேணப்படவும், இதன் பாதகங்கள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகளும் துரிதமாக மேற்கொள்ளப்படவும் வேண்டும் என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு உரிய தரப்பினரைக் கேட்டுக்கொள்கின்றது. அத்துடன் மக்கள் தரப்பிலிருந்து முன்னெடுக்கப்பட்ட தூய நீருக்கான மக்கள் இயக்கங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதையும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு வற்புறுத்துகின்றது.

மேற்படி அறிக்கையினை இவ்வமைப்பின் தலைவர் க. ஆனந்தக் குமாரசுவாமி, இணைச் செயலாளர்கள் ச.தனுஜன், அ.சீவரத்தினம் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

ச. தனுஜன்
இணைச் செயலாளர்

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை.

12-05-2015