Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

துன்புறும் வாழ்க்கைக்கு பதிலாக மகிழ்வுறும் வாழ்க்கை

இளமைக் காலத்தில் காணும் கனவு போல் வேறு பருவங்கள் எமது வாழ்வில் இருந்தது இல்லை. இளமை பருவத்தில் காணும் அக் கனவை நனவாக்கிப் பார்ப்பதற்காக எமது வாழ்நாள் முழுவதும் முயற்சிக்கும் எம்மில் அநேகம் பேருக்கு அக்கனவு கனவாக மட்டுமே இருக்கின்றது. பல அரசியல்வாதிகள் இளைஞர்களை தங்களது எடு பிடிகளாக வைத்திருப்பது, எமது கனவை எமக்கே விற்பதற்கே. முதலாளித்துவ கம்பனிகள் அவர்களது பண்டங்களை எமக்கு விற்பதும், எமது கனவை அவர்களின் பிரச்சாரத்திற்கு பாவிப்பதன் மூலமே.

கடந்த தேர்தலில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக, கார் தருவதாக, இலவச வைபை (Wifi) தருவதாக கூறிய கற்பனை கதைகளுக்கு பதிலாக தந்ததோ வேலை வாய்ப்பு இன்மை, வரி மற்றும் எம்மிடம் அறவிடும் கட்டணங்களின் அதிகரிப்பே.

இளமை என்பது, துன்புறும் வாழ்வு வாழ்வது அல்ல, மகிழ்வுறும் வாழ்க்கை வாழும் காலமாகும். ஆனால் எமக்கு இன்று வாழ்வதற்கு ஒரு வாழ்க்கை இருக்கின்றதா? பிள்ளை பருவம் தொடக்கம் அடிமை தொழிலுக்கு தகுதிகளை சேர்த்துக்கொண்டு, பெற்றுக்கொள்ள வேண்டிய கல்வியை முடித்து, அடிமை தொழிலுக்கான போட்டியின் இறுதியில் தொழிலொன்றை பெற்றுக்கொண்டதுடன் முழு வாழ்க்கையுமே அதற்கு சிறைப்படுத்த வேண்டியுள்ளது.

விளையாட்டு, கலை, கலாசாரம் போன்றவற்றில் ஈடுபட நேரமில்லை. ஓய்வு, நட்பு, உறவாடலுக்கு இடமில்லை. இவற்றின் எல்லாவற்றிற்கும் மத்தியில் கனவுகளின் அளவு மட்டும் அதிகரித்துள்ளது.

இந்த தனிமைப்படுத்தப்பட்ட, துன்புறும் வாழ்கையின் இடைவெளியினை நிரப்ப பல்வேறு தொழில்நுட்ப தொடர்பு சாதனங்கள் கொண்டு வந்து எம்மை அதில் சிறைப்படுதியுள்ளனர். மறுபக்கம் அழுது புலம்பும், துன்புறும் வாழ்வுக்கு நிவாரணம் வழங்க வென கூறிக்கொண்டு, பிற்போக்கான காலங்கடந்த மாயைகளை மத கூட்டுத்தாபனங்கள் மாற்றீடு செய்ய முற்படுகிறன. இன்னுமொரு பக்கம் எமக்கு போலியான எதிரிகளை காண்பித்து இனவாதத்திற்கு, மதவாதத்திற்கு எம்மை பலிகடாவாக்கியுள்ளனர்.

எமது கனவை எமக்கே விலை பேசிக்கொண்டு, பல்வேறு அரசியல் செயற்திட்டங்கள் காலத்துக்கு காலம் முன்னெடுக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் கூட்டணி நீலப்படை என்றும் இப்போ யுஎன்பி யொவுன் புற என்றும், ஜேவிபி இனர் இளைஞர் சங்கதி ஊடாகவும் பல்வேறு களியாட்டங்களை நடாத்த முயற்சிக்கின்றனர். நாட்டில் முதலாளித்துவ அரசை கொண்டு வருவதும், பிறகு அவற்றை வெளியேற்றி வேறு ஆட்களை கொண்டுவரும் பழைய அரசியலில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு இளைஞர்களின் உண்மையான பிரச்சினைகளை முன்னெடுக்க முடியாது.

இளைஞர்களின் உண்மையான பிரச்சினைகளை முன்னெடுக்க, அதற்காக போராட, எழுச்சி மிக்க இளைஞர் இயக்கம் ஒன்று நாட்டுக்கு இன்று அவசியம்.

சமூகத்தின் பிற்போக்கான கொள்கைகளுக்கு எதிரான, இளைஞர்களின் கனவை விலை பேசுவதை எதிர்ப்பதற்கு, இனவாதத்தை போல் பாதிக்கப்பட்ட எம்மிடையே எதிரிகளை உருவாக்குவதை எதிர்ப்பதற்கும், இளைஞர்களின் உரிமைக்காக போராட, இளைஞர்களின் கனவை யதார்த்தமாக்கும், சமவுடமை சமுதாயத்தின் இறுதி போராட்டத்தை முன்னிலை படுத்தும் இளைஞர் இயக்கமாக மாற்றத்துகாக இளைஞர்கள் [youth for change] இயக்கத்தை கட்டி எழுப்ப நாங்கள் முற்படுகின்றோம். முன்னிலை சோஷலிஸ கட்சியுடன் அரசியல் புரிந்துணர்வுடன் பங்கேற்கும் எமக்கு, உங்களுடன் அது தொடர்பான பேச்சு வார்த்தை இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். நீங்களும் அவ்வாறு சிந்திப்பீர்கள்.. எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி............

மாற்றத்துகாக இளைஞர்கள்

தொடர்புபிற்கு .............(0094) 0777335631