Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜனநாயகம் எமக்கு பொருந்துமா?

"ஜனநாயகம்" என்ற வார்த்தை பெரும்பாலானோருக்கு புதிய வார்த்தையல்ல. கடந்த தேர்தல்களின்போது ஜனநாயகம் குறித்த பல்வேறு பகுப்பாய்வுகள், வாக்குறுதிகள், மற்றும் விமர்சனங்கள் அரசியல் மேடைகளிலெல்லாம் முழங்கின. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும்  ஜனநாயகம் சம்பந்தமான பிரச்சினை பிரதான முழக்கமாக இருந்தது. கடந்த அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுள் பற்றிய விமர்சனத்தை முன்வைத்தே இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது. அதேபோன்று, வெள்ளை வான் கலாச்சாரம், காணமலாக்கல், கடத்தல், கொலை, அரசியல் பழிவாங்கல், ஊடக அடக்குமுறை போன்றவற்றால் இன்னல்களுக்குள்ளாக்கப்பட்ட சமூக ஜனநாயகம் சம்பந்தமான அபிலாஷைகளை பயன்படுத்தி புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து பதினெட்டு மாதங்களின் பின்பு இன்று என்ன நடக்கின்றது? ஜனநாயகம் சம்பந்தமாக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறியுள்ளனவா அல்லது ஜனநாயகம் மேலும் ஆபத்தில் வீழ்ந்துள்ளதா? அது குறித்து அறிந்து கொள்ள பகுத்தறிவை பயன்படுத்துங்கள் என நாம் உங்களை அழைக்கின்றோம்.

மக்களுக்கு அடக்குமுறை

இந்த அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்வதாக வாக்குறுதியளித்தது மட்டுமின்றி, அரசியல் முடிவுகள் எடுக்கும் விடயத்தில் குடிமக்களின் அதிகாரத்தினை வலுப்படுத்துவதாக வாக்குறுதியளித்தது. ஆனால், தமது வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக மக்கள் மத்தியிலிருந்து தோன்றிய எதிர்ப்பலைகளுக்கு இந்த அரசாங்கம் எப்படி பதிலளித்தது? பொலிஸாரைக் கொண்டு பொதுமக்கள் கடுமையாக தாக்கப்பட்டார்கள், சட்டத்திற்குள் மறைந்து நின்று அடக்குமுறை செய்யப்பட்டார்கள். பெல்வஹர விதை பண்ணையை தனியார் மயப்படுத்த வேண்டாமென கேட்ட தம்புள்ள விவசாயிகளுக்கு, குடி நீரை மாசுபடுத்துவதற்கு எதிராக செயற்பட்ட பந்தகிரிய மக்களுக்கு, பாலியல் துன்புறுத்தல்கள் சம்பந்தமான குற்றவாளிகள் தப்பிச் செல்ல இடமளித்தமைக்கு எதிராக போராடிய யாழ்ப்பாண மற்றும் கொட்டகத்தன மக்களுக்கு, விதைகளுக்கு நிவாரணம் கேட்ட தெஹிஅத்தகண்டிய மக்களுக்கு, குப்பை மலையை தமது வசிப்பிடத்திலிருந்து அகற்றுமாறு கேட்ட மீதொட்டமுல்ல மக்களுக்கு மற்றும் பல சந்தர்ப்பங்களில் தமது கல்வி உரிமைகளுக்காக போராடிய மாணவர்களுக்கு அரசாங்கம் கொடுத்த பதில் அடக்குமுறை. இவற்றிற்கு உதாரணம். ஜூன் 15ம் திகதி மாணவர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தை தாக்கியமை. அதேபோன்று கடந்த காலங்களில் சுதந்திர வர்த்தக வலயத்திற்குள் தொழிற்சங்கத் தலைவர்களை தாக்கியமை போன்றவற்றை பார்க்கும்போது, அவர்கள் வலுப்படுத்தப்போவது குடிமக்களின் அதிகாரத்தினை அல்ல, ஆட்சியாளர்களின் அதிகாரத்தினையே என்பது உறுதியாகின்றது.

அடக்குமுறை

ஜனநாயகத்தினை உறுதி செய்வதற்காக பரவலான நடவடடிக்கைகள் எடுப்பது எப்படியிருந்தாலும் குறைந்தபட்சம் சமூகத்திலிருந்து எழுந்த அவசர ஜனநாயக கோரிக்கைகள் சிலவற்றையாவது நிறைவேற்றுவதாக இல்லை. அரசியல் சிறைக்கைதிகள் சம்பந்தமான பிரச்சினை, அடக்குமுறை சட்டம் சம்பந்தமான பிரச்சினை ஆகியன இதற்கு பிரபல எடுத்துக்காட்டுகளாகும். இடம் பெயர்ந்தவர்களினது பிரச்சினை, இராணுவமயமாக்கல், காணமலாக்குதல்கள் மற்றும் கடத்தல்கள் சம்பந்தமான பிரச்சினை, நீதி கிடைக்காமை, நில அபகரிப்பு சம்பந்தமான பிரச்சினை உட்பட வடபுல மக்களினது பிரச்சினைகளுக்கு இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. தனது அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்காக அரசாங்கம் சட்டத்தை கருவியாக பயன்படுத்தி வருகின்றது. கடந்த காலங்களில் அடக்குமுறை காரணமாக நாட்டிலிருந்து வெளியேறிய அனைவரையும் மீண்டும் இலங்கை வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தபோதும், அரசாங்க ஆதரவாளர்களால் மாத்திரமே அப்படி வரமுடிந்தது. அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாத அரசியல் செய்பவர்களை பல்வேறு சட்டங்களை காட்டி அடக்குமுறை செய்கின்றது. சிறந்த உதாரணம்தான் தோழர் குமார் குணரத்தினம்.

ஜனநாயகம் மற்றும் வாழ்க்கை

ஜனநாயகம் என்பது நடுத்தர வர்க்க சமூகக் கருத்துக்களை ஒழுங்குபடுத்துபவர்களின் பிரச்சினை, மக்களுக்கு புரியாத 'சுகபோக" கோட்பாடு. எனவே, ஜனநாயகம் எமக்கு சம்பந்தமில்லாதது என சிலர் நினைக்கின்றனர். ஆனால், ஜனநாயகம் என்பது தாராளவாத கருத்துக்களை கொண்டுள்ளவர்கள் கூறும் குறுகிய மற்றும் அவர்களது வரம்பிற்கு உட்பட்ட உரிமையல்ல. ஜனநாயகம் என்பது வெறுமனே அரசியலமைப்பு சார்ந்த விடயமுமல்ல. ஜனநாயகம் என்பது எமது வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் பாதுகாக்கும் உரிமை. எடுத்துக்காட்டாக, ஜனநாயகம் என்பது கருத்து வெளியிடும் உரிமை, மனச்சாட்சியின் உரிமை போன்ற உரிமைகள் மட்டுமல்ல. கல்விக்கு, கலாச்சாரத்திற்கு, தொழிலுக்கு, ஓய்விற்கு உள்ள உரிமை... அதேபோன்று சுகாதார சேவையில் சம உரிமை, வாழ்வதற்கான உரிமை ஆகிய மீறமுடியாத மனித உரிமைகள் ஜனநாயகத்திற்குள் அடங்கியுள்ளன. ஜனநாயகம் சம்பந்தமான கருத்தினை தாராளவாத எல்லைக்குள் சுருக்காமல், வாழ்க்கையில் சகல உரிமைகள் வரையிலும் விரிவாக்குவதுடன் மீண்டும் விளக்கமளிக்கும் சவால் எம் முன்னால் உள்ளது.

எமது தலைவிதி எமது கைக்கு

ஒரு அரசாங்கத்திற்குப் பதிலாக இன்னொரு அரசாங்கத்தினை நியமித்து, ஒரு தலைவனுக்குப் பதிலாக இன்னொரு தலைவன் மீது நம்பிக்கை வைத்து ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க முடியாதென்பது வெளிப்படை. மக்கள் தமது உரிமைகளுக்காக களத்திற்கு வந்து, செயற்படுவதனால் மாத்திரமே மக்களது பரவலான ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க முடியும். இடதுசாரிய அரசியல் கட்சிகள், அரசியல் குழுக்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய மற்றும் மீனவர் அமைப்புகள், கலைஞர்கள், தொழில் முயற்சியாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட நாம் அனைவரும் மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒன்றுபட்ட செயற்பாட்டிற்கு வருகின்றோம். சகல அரசியல் சிறைக்கைதிகளையும் விடுதலை செய்தல், அடக்குமுறை சட்டங்களை ரத்துச் செய்தல், தோழர் குமார் குணரத்தினத்தின் குடியுரிமை உட்பட அடக்குமுறை காரணமாக நாட்டை விட்டு வெளியேறியவர்களின் உரிமைகளை பாதுகாத்தல் ஆகிய ஆரம்ப அடிப்படையின் மீது எமது செயற்பாட்டை தொடங்கவும், பின்பு, அதனை மேலும் பல்வேறு துறைகளுக்கு விஸ்தரிக்கவும் எதிர்ப்பார்த்துள்ளோம். என்றாலும் இது எமது முதற்கட்ட நடவடிக்கை மட்டுமே. இப்போது குறிப்பிட்ட மற்றும் குறிப்பிடாத சகல ஜனநாயக உரிமைகளையும் மக்களது பரவலான அரசியல் செயற்பாட்டின் ஊடாகவே வென்றெடுக்க முடியும். 

எனவே, அரசியல் செயற்பாட்டை தேர்தல் காலத்தில் அரசியல் பேசுவதற்கோ, வாக்களிப்பதற்கோ அல்லது ஊடகங்களில் அரசியல் வாதங்களை பார்ப்பதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல், உங்களது உரிமைகளுக்காக நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. உங்களது வாழ்வின் தலைவிதியை தீர்மானிக்கும் அதிகாரத்தினை நீங்கள் கையில் எடுக்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை யாரோ ஒரு வீரன் வெள்ளித்தட்டில் வைத்து தரப்போவதில்லை. அதற்காக மக்கள் பலத்தை, மக்கள் அமைப்பை கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு விரிவான மக்கள் அமைப்பிற்காக, உண்மையான ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் செயற்பாட்டிற்காக உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

1 அனைத்துப் பல்கலைகழக மாணவர் ஒன்றியம்

2 அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியம்

3 புதிய பரம்பரை

4 ஐக்கிய சோஷலிஸக் கட்சி

5 ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம்

6 ஓன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்

7 சுதந்திர வர்த்தக வலய பொது ஊழியர் சங்கம்

8 தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம்

9 முன்னிலை சோஷலிஸக் கட்சி

10 ப்ரக்ஸிஸ் ஒன்றியம்

11 ஜனநாயகத்திற்கான ஊடக அமைப்பு

12 இடதுசாரிய கேந்திரம்

13 புரட்சிவாத சோஷலிஸ கேந்திரம்

14 சோஷலிஸக் கட்சி

15 இலங்கை முற்போக்கு கட்சி

16 இளம் ஊடகவியலாளர்களின் ஒன்றியம்

17 இலங்கை ஆசிரியர் சங்கம்

18 சுயேட்சையான இலங்கை ஆசிரியர் சங்கம்

19 ப்ரகதி ஆசியர் சங்கம்

20 ஒன்றிணைந்ந ஆசிரியர் சேவை சங்கம்