Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு பதாகை ஒப்பமிடல் போராட்டம்!

இலங்கையில் ஆட்சி மாறினாலும் கடந்த காலங்களில் மறுக்கப்பட்ட ஜனநாயகத்திற்கும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் மாற்றம் நிகழக்கூடிய நடவடிக்கைகள்  எதனையும் காண முடியாதுள்ளது.

கடந்த ராஜபக்ச ஆட்சியில் மக்கள் சொல்லொணா துன்பங்களுக்கு உள்ளானார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கு மக்கள் ராணுவ ஆட்சியினுள் அடக்கப்பட்டுக் கொண்டுள்ளனர். பலர் கேள்வி நியாயம் அற்று கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடுகின்றனர். மக்களின் நிலங்கள் உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டன.

கடந்த காலங்களில் ஜனநாயகத்திற்கு முரணான நிலைமையே நாட்டில் நிலவியது. முந்தைய அரசாங்கத்தில் மாற்று அரசியல் கருத்துடையவர்கள் அடக்குமுறைக்கு பலியாகினார்கள். அதற்காக அரசாங்கத்தின் சட்ட ரீதியான இராணுவமும், சட்டரீதியற்ற ஆயுதக் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டன. அநேகமானோர் கடத்தப்பட்டுவதற்கும் காணாமலாவதற்கும் உட்பட்டதுடன், அரசியல் படுகொலைகளை நியாயப்படுத்தும் நிலையும் காணப்பட்டது.

இந்த அடக்குமுறை அடித்தட்ட மக்களிலிருந்து ஊடகவியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூகரீதியிலான கருத்துக்களை வழங்குபவர்கள் வரை பரவலாக செயற்பட்டது. இதனால், பல அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவானது. இலங்கையிலிருந்த சிலர் காணாமலாக்கப்பட்டதுடன் சிலர் படுகொலை செய்யப்பட்டனர். லலித் - குகன் போன்ற அரசியல் செயற்பாட்டாளர்களும், லசந்த, எக்னலிகொட போன்ற ஊடகவியலாளர்களும் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

இப்படியாக பெரும்பாலானோரால் தமது உயிர் பாதுகாப்பை உறுதி செய்து அரசியலில் ஈடுபட முடியாத நிலைமை, ஜனநாயகத்திற்கு முரணான நிலைமை நாட்டில் உக்கிரமடைந்தமையால் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக பல்வேறு முறைகளை கையாள வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த ஜனநாயக விரோத நிலைமைகளின் காரணமாகவே தோழர் குமார் குணரத்தினமும் வெளிநாடு செல்ல நேரிட்டது. அவரது உயிர் பாதுகாப்பு சம்பந்தமாக ஆபத்தான நிலை இருந்ததுடன் 2012 ல் அவர் கடத்தப்பட்டமையும் அவரை படுகொலை செய்ய முயன்றமையும் காரணமாக அவருக்கு உயிராபத்து இருந்தமை உறுதியாகியது.

முந்தைய ஜனநாயக விரோத ஆட்சியை தோற்கடித்து அதிகாரத்திற்கு வந்த ஆட்சியிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது  மேற்படி செயற்பாடுகளை சமூகத்திலிருந்து துடைத்தெறிவதும்.

ஆனால் புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்கு திரும்புமாறு அழைக்கும் அரசாங்கம் மறுபக்கம் அவர்களை இரகசியமாக கைது செய்கின்றது. பல்வேறு கொலைகள், கடத்தல்கள், சித்திரவதைகள், நிதி மோசடிகள் சம்பந்தமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்டவர்களுக் எதிராக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆனால், தோழர் குமார் குணரத்தினம் தொடர்பில் குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருப்பது பாதுகாப்புச் செயலாளர்தான் என்பதிலிருந்து இந்த அடக்குமுறை செயற்பாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்பு தெரிகிறது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஜனநாயகம் சம்பந்தமான வாக்குறுதிகளை வழங்கினாலும், குறுகிய காலத்திற்குள்ளேயே அவை மீறப்படுகின்றன. ஜனநாயகம் என்பது தான் விரும்பும் அரசியல் கருத்தை கொண்டிருப்பவர்களை அரசியலில ஈடுபட அனுமதிப்பது மாத்திரமல்ல, உடன்பட முடியாத கருத்துடையவர்களினதும் அந்த உரிமையை ஏற்றுக் கொள்வதுதான். முந்தைய ராஜபக்ஷ ஆட்சியும் இதைத் தான் செய்தது. தமக்கு எதிரான அரசியல் கருத்துடைய நபர்களினதும், அமைப்புகளினதும் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை பறிக்கப்பட்டது. அந்த நிலைமையை மாற்றியமைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் அப்படியான நடவடிக்கைகளிலேயே ஈடுபடுவதை குமார் குணரத்தினத்தின் சம்பவம் வெளிக்காட்டுகிறது.

இது நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படடும் கடுமையான தாக்குதலாகும். இந்த நிலைமையை தோற்கடித்து இலங்கையில் வாழவும், இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் விரும்பும் சகலருக்கும் அதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும்.

புதிய ஆட்சியாளர்களிடம் இவற்றினை வலியுறுத்தி நாடளாவிய ரீதியாக பதாகைகளில் கையெழுத்திடும் போராட்டம் இடம்பெறவுள்ளது.