Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தோழர் குமாரின் அரசியல் உரிமையை உறுதி செய்! - சம்பா சோமரத்ன

1989 ஜேவிபி அழித்தொழிப்பிற்கு பின்னர் ஜேவிபியை மறுபடியும் கட்டியமைத்தவர்களில் ஒருவரும், குமார் குணரத்தினத்தின் துணைவியாரும் ஆன "சம்பா சோமரத்ன" அவர்கள் நாட்டு மக்களிற்கு எழுதிய பகிரங்க கடிதம் இது.

மௌனம் பிற்போக்குவாதிகளுக்கே சேவை செய்கிறது. எனவே, மௌனத்தை கலைக்கும் வேளை வந்து விட்டது வாய் சவாடல்களுக்கும், கயிறிழுத்தல்களுக்கும் மத்தியில் உண்மையை அறிந்து கொள்ளும் உரிமையை திறந்துவிட வேண்டும். இறுதி முடிவு மக்களிடமே உள்ளது.

இன்று அதிகாரமும், அகங்காரமும் தலைக்கேறி; சிறு கட்சிகள் தமக்கு சவாலாக இல்லையென வாய்ச்சவாடல் விடும் ஜேவிபியை பார்த்து இலங்கை இடதுசாரிய வரலாற்றை மீண்டும் கற்க வாருங்களென அழைப்பு விடுக்க வேண்டியுள்ளது. 60களில் ஜாம்பாவான்களாக இருந்த பழைய இடதுசாரியத்தின் முன்னால், சேறு பூசல்களையும் அவதூறுகளையும் தோற்கடித்து வர்க்க ஒத்துழைப்பிற்கு எதிராக, இதேபோன்று சிறு எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் ரோஹன விஜேவீர ஜேவிபியை உருவாக்கினார். சரியான வர்க்க அரசியலை கட்சியின் அரசியலாக தேர்ந்தெடுத்தார். பாட்டாளிகள் தமது உரிமைகளை வெல்வதற்கு போராடுவதைத் தவிர வேறு வழி கிடையாதென்பதையும், உரிமைகளை வெள்ளித்  தட்டில் வைத்து முதலாளிகள் தரமாட்டார்கள் என்பதையும் வர்க்கத்திற்கு உணர்த்தினார். வர்க்க ஒத்துழைப்பு மற்றும் மறுசீரமைப்புவாதம் என்பது பாட்டாளி வர்க்கத்திற்கு அழிவைத் தரக்கூடிய, எதிரிக்கு சேவை செய்பவையாகும் என துணிந்து அச்சமின்றி வர்க்கத்தை அறிவுறுத்தியமையால்தான், 80களில் நடந்த கொடூர அடக்குமுறையின் முன்னால் கூட கட்சியால் தளராது செயற்பட முடிந்தது.

89ல் கட்சி அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பின்பு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தோழர்களே எஞ்சியிருந்தனர். குமார், நந்தன, ஓபாத, செனவி போன்ற தோழர்கள், தோழர் சோமவன்ஸவுடன் சேர்ந்து கஷ்டப்பட்டு கட்சியை ஆரம்பித்தனர். ஆனால், இன்று வர்க்க ஒத்துழைப்பு என்ற கிலடீனுக்குள் (Guillotine) கட்சியை இட்டுச் செல்பவர்களும், பெருமையடித்துக் கொள்பவர்களும் அப்போது பக்கத்திலாவது இருக்கவில்லை என்பதை உறுதியாகக் கூறுகின்றேன். 1994 தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் பட்டியலைக்கூட தயாரிக்க முடியாத இக்கட்டான நிலைமையிலும் வேட்பாளர் பட்டியலை தயாரித்தோம். அடக்குமுறைக்கு பயந்து வேட்பாளர் பட்டியலை தயாரிப்பது கஷ்டமாக இருந்த நிலையில் கட்சியை மீண்டும் சமூகமயப்படுத்த வேண்டுமென்ற திடசங்கற்பத்துடன் அன்று, நானும், தோழர் ஓப்பாத்தவும் சேர்ந்து வேட்புமனுவை தாக்கல் செய்தோம். உண்டியல் குளுக்கி பெற்றுக் கொண்ட சொச்ச பணமும், நண்பர்களின் உதவியும் எமக்கு வலிமை தந்தன. கட்சியை சமூகமயப்படுத்தும் அந்த இக்கட்டான தருணத்தை நாம் வெற்றி கொண்டது 4- 5 லட்சம் உறுப்பினர்களை வைத்துக் கொண்டல்ல. எங்களிடமிருந்த அபரிமிதமான துணிவும், நாம் பயணிக்கும் திசை பற்றிய எமது பார்வையும் உயிர்த் தியாகம் செய்த எமது தோழர், தோழியர் 60,000 பேர் எமது தோளில் சுமத்திய கடமையும், அதன் மீது எமக்கிருந்த அபரிமிதமான தியாகமும் தான் எமக்கு வெற்றியை தந்தது.

ஒரே இரவிற்குள் எனது தொழிலை கைவிட நேர்ந்ததுடன், தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைவதற்கு முன்பாகவே எனது 6 மாத குழந்தையையும் தோளில் சுமந்து கொண்டு, வீடு வாசலை கைவிட்டு அடக்குமுறையிலிருந்து தப்பிப்பதற்காக நண்பர்களினதும், ஆதரவாளர்களினதும் உதவியுடன் பல மாதங்களை கடத்த நேரிட்டது. அவ்வாறான கஷ்ட நிலைமைகளிலும் கட்சியை கட்டியெழுப்பிய குமார் குணரத்தினத்தை தெரியாதென கூறுபவர்களின் மனச்சாட்சியை கேள்வி கேட்கும் உரிமையை சமூகத்திடம் ஒப்படைக்கின்றோம். இன்று, ஜேவிபி வீழ்ந்திருக்கும் அரசியல் அவலம்தான் இது.

புரட்சிவாத கட்சியொன்று உள்ளக அமைப்பொன்றை எப்போதும் வைத்திருப்பது நிறுவன ரீதியான தேவையாகக் கருதப்படுகின்றது. அனைத்துலக புரட்சிவாதிகளினதும், எமதும் அநுபவத்தின்படி மிக அமைதியான யுகமாக இருப்பினும், முதலாளித்துவ வர்க்கத்தை நம்பாதிருக்கவும், உள்ளக அமைப்பை பாதுகாக்கவும் கட்சி முயற்சிக்க வேண்டும். கட்சி சுமையை மௌனமாக சுமக்கும் பணிநிலை பிரிவு (CADRE) அந்த நோக்கத்துடன்தான உருவாகின்றது. குமார் உட்பட அதிக எண்ணிக்கையான தோழர்கள் கட்சிக்குள் அப்படித்தான் வேலை செய்தார்கள். வர்க்க ஒத்துழைப்பு, இனவாதம், அதிகாரத்துவவாதம் போன்றவற்றுடன் கட்சி கடுமையான சரிவை சந்தித்தபோது ஜேவிபி மட்டுமல்ல, இன்று கட்சியிலிருந்து வெளியேறிய குமார் உட்பட வர்க்கத் தோழர்கள் அனைவரும் அந்த பொறுப்பிலிருந்து விடுபட முடியாது. அந்த சரிவின் பக்க விளைவாக விமல் வீரவன்ஸ கட்சியிலிருந்து வெளியேறிய கையோடு குமாரின் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினை கட்சிக்குள் தலை தூக்கியது. எனவே பாதுகாப்பு கருதி குமாரை நாட்டை விட்டு வெளியேற்றத் தேவையான சகல ஏற்பாடுகளையும் ஜேவிபியே செய்தது. அன்று அரசியல் பிரச்சினையாகக் கருதி குமாரை நாட்டை விட்டு வெளியேற்ற சகல ஏற்பாடுகளையும் செய்து, குமார் குணரத்தினம் என்ற பெயரில் வெளியேற முடியாதென்பதை தீர்மானித்து தேவையான ஏற்பாடுகளை செய்த ஜேவிபி, இன்று அதனை சட்டப் பிரச்சினையாக தூக்கிப் பிடிக்கும் அரசியலுக்கு விளக்கம் தரும் பொறுப்பை சமூகத்திடம் ஒப்படைக்கின்றேன். என்னை பொறுத்த வரை இது நயவஞ்கச அரசியலாகும்.

2012ல் கட்சி பிளவுபட்டு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது. அது சரியா தவறா என்பதை தீர்மானிப்பதை எதிர்காலத்திடம் விட்டுவிடுவோம். சமூகத்திற்கு உண்மையான இயக்கமொன்றின் தேவை இருந்தாலும், பாட்டாளி வர்க்க இதயத் துடிப்பை அறிந்த உண்மையான மனிதநேய இயக்கமொன்றிற்கான இடைவெளி நிரப்பப்பட்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சரிந்து கிடக்கும் இடதுசாரிய நம்பிக்கையை கட்டியெழுப்பும் சவாலுக்கு முன்பாக, ஜேவிபியிலிருந்து விடுபட்ட  அல்லது ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாதிருந்த மனித நேயத்தை கட்டியெழுப்ப முடிந்தால், சிலவேளை, ஒரே தட்டில் சாப்பிட்ட வர்க்கத் தோழரை காட்டிக் கொடுக்கும் புரட்சிவாதியை எம்மால் தூக்கியெறிய முடியும். மாற்றுக் கருத்தை சகிக்கும், கண்காட்சி அரசியலிலிருந்து விலகிய உண்மையான மனிதநேயத்தை முன்னெடுக்கும் இயக்கத்தை உருவாக்க முடியும்.

இந்த கட்டமைப்பிற்குள் தான் கோட்டாபய கூறியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தனது வர்க்கத் தோழனை தெரியாது எனக் கூறுவதையும், அவரது அரசியல் உரிமையை பறிக்கத் தயாராவதையும், அதனை வெறுமனே சட்டத்திற்குட்பட்டதென கூறும் ஜேவிபி யின் நயவஞ்சக அரசியல் வெளிப்படுத்தும் உண்மை என்னவெனில், அதற்கான ஆற்றல் ஜேவிபி க்கு இருக்கின்றது என்பதுதான். ஆனாலும், இன்று அது மதிப்பிழந்த காரணியாக மாத்திரம் இருக்கின்றது. மனிதர்கள் கடத்தப்படுவதற்கும், காணாமலாக்கப்படுவதற்கும் அரச இயந்திரத்திற்கு உள்ள அதிகாரம்தான் உண்மையான பிரச்சினையாக இருக்க வேண்டும். லலித், குகன், எக்னெலிகொட போன்று காணாமல் போன மனிதர்களின் பிரச்சினைகளைத்தான் பிரச்சினைகளாகப் பார்க்க வேண்டும். குமார் உட்பட காணாமலாக்கப்பட்ட  அல்லது காணாமலாக்க எத்தனிக்கும் அனைத்து மனிதர்களுக்காவும் எமது குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும். காணமலாக்கும் கலாச்சாரத்திற்கு எதிராக நாம் அணிதிரள வேண்டும். கோட்டாபயவின் வார்த்தைகள் குறித்து தமது கருத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்த ஜேவிபி க்கு உள்ள உரிமையை ஏற்றுக் கொள்வதைப் போன்றே, இயற்கை நீதி தர்மத்திற்குள் மனிதர்களை கடத்தி கொலை செய்யும் ஒரு கொலைஞனின் வார்த்தையை விட  கூடிய மதிப்பு ஜேவிபி க்கு கிடைக்க வேண்டும்.

பாட்டாளி வர்க்க அரசியலுக்காகவே குமார் தனது முழு வாழ்நாளையும் செலவிட்டார். அது எதிர் நீச்சலடிப்பது போன்றது. அதற்காக அவர் அநேகமானவற்றை தியாகம் செய்தார். ஜேவிபி.யில் இருக்கும்போது கூட பெரும்பான்மை கருத்துக்கு மதிப்பளித்ததுடன், அது தனது கருத்திற்கு மாற்றமான கருத்தாக இருந்தபோதிலும், பெரும்பான்மையினரின் கருத்திற்கு சார்ப்பாக நின்றார். அவர் இந்த அரசியலை தேர்ந்தெடுக்காதிருந்திருந்தால் அவரது வாழ்க்கை இந்தளவு இன்னல் நிறைந்ததாக இருந்திருக்காது. அவரது அரசியல் காலத்தின் கட்டாயத் தேவையாக இருப்பது அதனால்தான். இறுதியாக ஜேவிபி.க்கும் சொல்ல வேண்டியது என்னவென்றால், சவாலே கிடையாதென இறுமாப்புடன் இருந்தாலும், இன்று, ஜேவிபி.க்கு உண்மையான சவாலாக இடதுசாரியம் இருக்கின்றது என்பதைத்தான். குமாரை தவிர்க்கும் ஜேவிபியின் அரசியல் சொல்லும் உண்மையும் அதுதான்.

-சம்பா சோமரத்ன

தொடர்வுடைய கட்டுரைகள்

குமார் குணரத்தினத்திற்கு அரசியல் உரிமையை வழங்க வேண்டியது ஏன்?

தோழர் குமார் குணரத்தினத்தின் பிரஜாவுரிமைக் கோரிக்கை - சேனாதீர குணதிலக